×

குழந்தைகளை பிரசாரம் செய்ய வைத்து இன்ஸ்டாகிராம் மூலம் தவெக வெற்றி பெற்றுவிட்டது: தஞ்சையில் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

 

தஞ்சாவூர்: குழந்தைகள் பிரசாரம் செய்ய வைத்து இன்ஸ்டாகிராம் மூலம் தவெக வெற்றி பெற்றுவிட்டது என்று தஞ்சாவூரில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசினார். திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் எம்எல்ஏ இல்லத்திருமண விழா, தஞ்சாவூர் மகாராஜா மஹாலில் நேற்று காலை நடைபெற்றது. இந்த திருமணத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நடத்தி வைத்து பேசியதாவது:

தோல்வி, வெற்றி என்பது இரண்டையும் சமமாக கருதி பாடுபட்டு கொண்டிருக்கக்கூடிய தொண்டன் தான் திமுக என்பதை யாரும் மறுக்க முடியாது. ஏதோ இன்றைக்கு நடைபெற்று முடிந்து இருக்கக்கூடிய தேர்தலிலே ஏதோ நாம் தோற்றுவிட்டது மாதிரி, ஏதோ படுதோல்வி அடைந்துவிட்டது மாதிரி, இதோடு திமுக கதை முடிஞ்சுருச்சு அப்படி என்று கவிதை அரங்கேற்றம் பாடுவதற்கு கூட முன் வந்திருக்கிறார்கள். நம்முடைய இன எதிரிகள் அந்த சூழ்ச்சியிலே இன்றைக்கு ஈடுபட்டிருக்கிறார்கள்.

தேர்தல்களில் பல வெற்றிகளை கண்டதுண்டு, பல தோல்விகளையும் நாம் சந்தித்திருக்கிறோம். ஆனால் தோல்வி அடைகிற நேரத்தில்தான் திமுக எப்போதுமே ஒரு பீனிக்ஸ் பறவையைப்போல் கிளம்பி எழக்கூடிய நிலையில் அது வரும். நாம் சோகப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாம் தான் இன்றைக்கு ஆட்சிப் பொறுப்பிலே இருக்கிறோம்.

எல்லாத்தரப்பு மக்களுக்கும் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய ஆட்சி நம்முடைய திராவிட மாடல் ஆட்சி என்பதை மறந்துவிட முடியாது. புதிய ஆட்சிக்கு பொறுப்பேற்று இருக்க கூடியவர்களுக்கு நான் வாழ்த்து சொல்லுகிற போது, ஆட்சி பொறுப்பேற்று இருக்கக்கூடியவர்களுக்கு ஒரு வேண்டுகோள், நாம் கொண்டு வந்த திட்டங்கள் அனைத்தையும் நீங்கள் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் என்று ஒரு கோரிக்கையாக வைத்தேன். அது எப்படி நிறைவேற்றப்பட்டிருக்கிறது என்பதை இன்றைக்கு கண்கூடாக பார்க்கிறோம். திட்டம் நடக்கிற வரைக்கும் திராவிட மாடல் ஆட்சி தான் தமிழ்நாட்டை ஆண்டுகொண்டிருக்கும்.

இந்த தேர்தலின் தோல்வியை பார்த்து நான் மனம் சோர்ந்துவிடவில்லை. 234 தொகுதிகளில் இன்றைக்கு என்ன நிலை? எப்படி வெற்றி பெற்றார்கள்? எப்படி வெற்றி வாய்ப்பு இழந்திருக்கிறோம்? என்ன காரணம்? என்பதை பற்றி ஆய்வு செய்வதற்காக நான் ஒரு குழுவை நியமித்து இருக்கிறேன். 86 பேர் அடங்கிய ஒரு குழு அமைக்கப்பட்டு, 234 தொகுதிக்கும் அந்த குழு அனுப்பப்பட்டு ஆய்வுகள் நடக்க இருக்கு. அந்த குழு மட்டும் இல்லை. உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் ஒரு வெப்சைட்டையும் தொடங்கி இருக்கிறோம். அந்த வெப்சைட்டில் கழகத்தை சார்ந்தவர்கள் மட்டுமல்ல, பொதுமக்களோ, அரசியலுக்கு அப்பாற்பட்டவர்களோ அதில் தன்னுடைய கருத்துக்களை வெளியிடலாம் என்று அந்த வெப்சைட்டை தொடங்கி இருக்கிறோம்.

இந்த தேர்தலை பற்றி இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நம்முடைய கட்சி என்பது ஒரு கட்டமைப்பு கொண்டிருக்கக்கூடிய கட்சி. நாடாளுமன்ற தேர்தல் முடிஞ்சதுக்கு பிறகு சட்டமன்ற தொகுதியினுடைய தேர்தல் பணியை நம்ம அப்பவே தொடங்கினோம். பாக முகவர் நியமிச்சோம், பூத் கமிட்டி அமைச்சோம். ‘ஒன்றிணைவோம் வா’ என்ற தலைப்பில் கழக உறுப்பினர்களை சேர்க்கக்கூடிய அந்த பணியை தொடங்கினோம்.

எஸ்.ஐ.ஆர் பணியை முடித்தோம். அதற்கு பிறகு இளைஞர் அணி மண்டல மாநாடுகள் நடத்தினோம், மகளிர் அணி மண்டல மாநாடுகள் நடத்தினோம். பாக முகவர்கள் அனைத்திற்கும் மண்டல மாநாடுகள் நடத்தினோம். ஒவ்வொரு தொகுதிக்கும் பொறுப்பாளர் நியமித்தோம். மண்டல அளவிலே அதற்கும் சில பொறுப்பாளர்களை போட்டோம். இவ்வளவு பணிகளையும் செய்து ஏன் நாம் ஆட்சிக்கு வர முடியவில்லை? ஆனால், எந்த பணியும் செய்யாமல், மக்களை சந்திக்காமல், பாக முகவர் நியமிக்காமல் பூத் ஏஜென்ட் அமைக்காமல் இன்னும் சொல்ல வேண்டுமென்றால் கவுண்டிங் ஏஜென்ட் கூட பல இடங்களில் நியமிக்கவில்லை. அப்படிப்பட்டவர்கள் இன்றைக்கு வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். அது தவறில்லை, ஆனால் அதில் என்ன இருக்கு என்பது தான்.

சோசியல் மீடியா, முக்கியமா இன்ஸ்டாகிராம் என்று சொல்லக்கூடிய அதை பயன்படுத்தி சுலபமாக சிறு பிள்ளைகளை, குழந்தைகளை பிரசாரம் செய்ய வைத்து அவர்களை அவருடைய தாத்தாக்கள், பாட்டிகள், அப்பாக்கள், அம்மாக்கள், அவர்கள் வீட்டில் இருக்கக்கூடிய பெரியவர்களிடம் அந்த குழந்தைகள் மூலமாக பிரசாரங்களை முன்னெடுத்து ஒரு திட்டமிட்ட பிரசாரத்தை கொடுத்திருக்கிறார்கள்.

அது நம்முடைய கணக்குக்கு தெரியாம போய்விட்டது. ஆனா, இனிமேல் நாம் உஷாரா இருந்து அதையும் முறியடிக்கக்கூடிய வகையில அந்த பணியை நிறைவேற்றுவதற்கு திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம். எனவே, நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நம்முடைய கழகம் உங்களுக்கு இருக்கு, இயக்கம் இருக்கு, நாங்கள் இருக்கிறோம். எதை பற்றியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. மீண்டும் நாம்தான் ஆட்சிக்கு வருவோம் என்ற நம்பிக்கையோடு பணியாற்றுங்கள்.

எனக்கிருக்கக்கூடிய கவலையெல்லாம் 5 ஆண்டுகள் நிறைவேற்றிய திட்டப்பணிகள் போதாது, இன்னும் 5 ஆண்டு காலம் நமக்கு வாய்ப்பு கிடைச்சிருந்தா இன்னும் பல பணிகள் நிறைவேற்றி இருப்போம். அது தடைபட்டு போய் இருக்கிறது. அதை எப்படியாவது நாம் எதிர்க்கட்சியாக இருந்தாலும் கூட, இன்றைக்கு நாம் மக்களிடத்திலே போராட்டங்களை, ஆர்ப்பாட்டங்களை உறுதியோடு எடுத்து சொல்லக்கூடிய வகையில் நம்முடைய கடமையை ஆற்றுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

Tags : DMK ,MK Stalin ,Thanjavur ,president ,Thiruvarur District ,Poondi Kalaivanan ,MLA ,Thanjavur Maharaja Mahal ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து