திருமங்கலம்: திருமங்கலம் அருகே குண்டும், குழியுமான சர்வீஸ் சாலையால் விபத்து அபாயம் நிலவுகிறது. எனவே சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம்-கொல்லம் தேசிய நெடுஞ்சாலை நான்குவழிச்சாலையாக மாற்றப்படும் பணி நடைபெற்று வருகிறது. இதில் திருமங்கலம் நகரிலிருந்து ராஜபாளையம் செல்லும் ரோட்டில் ஆலம்பட்டி கிராமத்தின் நடுவே நான்குவழிச்சாலை செல்கிறது. கிராமத்தின் நடுவே மேம்பாலம் செல்வதால் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாலத்தில் பணி முடிவடையாததால் தற்போது அனைத்து வாகனங்களும் சர்வீஸ் சாலை வழியாகவே சென்று வருகின்றன. ஆனால் சர்வீஸ் சாலை அவசர கோலத்தில் அமைக்கப்பட்டதால் ஆங்காங்கே பெயர்ந்து காணப்படுகிறது. குண்டும், குழியுமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
விபத்துகளில் சிக்குகின்றனர். மழைகாலங்களில் மழைநீர் சர்வீஸ் சாலை பள்ளத்தில் தேங்கி கிடப்பது தெரியாமல் பலரும் கீழே விழுந்து படுகாயமடைந்து வருகின்றனர். இரவு வேளையில் போதுமான மின்விளக்கு வசதிகள் இல்லாததால் குண்டும் குழியுமான சாலை இருப்பது தெரியாமல் பலரும் விபத்துகளில் சிக்கி வருகின்றனர். எனவே நான்குவழிச்சாலை பணிகளை மேற்கொள்ளும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் ஆலம்பட்டி கிராமத்தின் இருபுறமும் உள்ள சர்வீஸ் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
