×

அதிக வருமானம், அதி விரைவு ரயிலான கன்னியாகுமரி எக்ஸ்பிரசுக்கு விடிவு காலம் வருமா?: 3 மணி நேரம் தாமதம் காரணமாக பயணிகள் பரிதவிப்பு

நாகர்கோவில்: அதி விரைவு ரயிலான கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் இடையே இயங்கும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் 3 மணி நேரம் தாமதம் காரணமாக பயணிகள் பெரும் பரிதவிப்புக்கு உள்ளானார்கள். பெங்களூர் – கன்னியாகுமரி இடையே இயங்கும் ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தான் ( வண்டி எண் 16526) கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் அதி விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலாக (வண்டி எண் 12634) இயங்குகிறது. பெங்களூருவில் இருந்து மதியம் 2.50க்கு கன்னியாகுமரி வர வேண்டிய ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில் மிகவும் தாமதம் ஆனால், கன்னியாகுமரி எக்ஸ்பிரசுரம் தாமதம் ஆகும். தற்போது பாலக்காடு பகுதியில் ரயில்வே பராமரிப்பு பணிகள் நடப்பதால் கடந்த சில நாட்களாக ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் ரயில், கன்னியாகுமரி வந்தடைவது தாமதம் ஆகிறது.

நேற்று 3 வது நாளாக இந்த ரயில் மதியம் 2.50க்கு பதில், இரவு 8.25க்கு தான் கன்னியாகுமரி வந்தது. அதன் பின்னர் அவசர, அவசரமாக ரயிலை சுத்தம் செய்து, தண்ணீர் நிரப்பி, இரவு 9 மணியளவில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு புறப்பட்டது. கன்னியாகுமரியில் இருந்து மாலை 6 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த ரயில், நேற்று இரவு 9 மணிக்கு புறப்பட்டதால், மாலை 6.18க்கு நாகர்கோவில் சந்திப்பு வர வேண்டிய இந்த ரயில், இரவு 9.30க்கு தான் வந்து சேர்ந்தது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் அதிகளவில் காத்திருந்தனர். ரயில் தாமதம் காரணமாக பெரும் சிரமம் அடைந்தனர்.

இது குறித்து பயணிகள் கூறுகையில், கன்னியாகுமரியில் இருந்து சென்னை எழும்பூருக்கு இயக்கப்படும் அதி விரைவு ரயிலான கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் (வண்டி எண் 12634), தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ரயில்களில் மிக முக்கியமான ரயிலாகும். கன்னியாகுமரியில் இருந்து தினமும் மாலை 6 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 6.35க்கு சென்னை எழும்பூரை சென்றடையும். இந்த ரயிலில் தினமும் பயணிகள் கூட்டம் நிரம்பி வழியும். காத்திருப்போர் எண்ணிக்கை அதிகமாக உள்ள ரயில் ஆகும். குறிப்பாக வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையில் கன்னியாகுமரியில் இருந்து சென்னை செல்லும் இந்த ரயிலில் முன் பதிவில்லா பெட்டியில் முண்டியடித்து பயணிகள் ஏறுவார்கள்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் இருந்து இந்த ரயில் சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு செல்கிறது. பெங்களூரில் இருந்து வந்த ஐலேண்ட் எக்ஸ்பிரஸ் தாமதம் காரணமாக, கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் தாமதம் என்கிறார்கள். ரயில் பெட்டிகள், கழிவறைகள் முறையான சுத்தம் இல்லை. துர்நாற்றம் வீசும் நிலை உள்ளது. எனவே அதிக வருமானம் மற்றும் முக்கிய ரயில் என்பதால் கன்னியாகுமரி – சென்னை எழும்பூர் அதி விரைவு ரயிலுக்கு தனி பெட்டிகள் ஒதுக்கீடு செய்து, சுத்தமான முறையில் ரயில் பெட்டிகள், கழிவறைகளை பராமரித்து இயக்க வேண்டும். தொடர்ந்து இந்த நிலை நீடித்தால் பயணிகள் போராட்டம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்றனர்.

Tags : Nagercoil ,Kanyakumari ,Chennai Egmore ,Express ,Bangalore ,
× RELATED அம்மா உணவகங்களை புதுப்பிக்க தமிழக அரசு உத்தரவு