×

தெலங்கானாவில் பயங்கரம்; காதலியின் கழுத்தை அறுத்து கொன்ற வாலிபர் அடித்துக் கொலை: ஊர் மக்கள் தர்மஅடி கொடுத்ததால் மரணம்

மகபூப்நகர்: காதலை ஏற்க மறுத்த இளம்பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த வாலிபர், பொதுமக்களின் தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பணிபுரிந்தபோது வைஷ்ணவி (21) என்ற பெண்ணிற்கும், தேஜா (30) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. தேஜாவின் காதல் ஆசையை வைஷ்ணவி நிராகரித்ததால் அவர்களுக்குள் அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.

இதனிடையே, ஜட்சர்லா டவுன் அருகே உள்ள போலேப்பள்ளி பகுதியில் இருக்கும் ஒரு தனியார் பள்ளியில் வைஷ்ணவி வரவேற்பாளராக வேலைக்கு சேர்ந்தார். நேற்று மதியம் தனது பணியை முடித்துவிட்டு ஆட்டோவில் இருந்து இறங்கி வீட்டிற்கு நடந்து சென்றபோது, அங்கு வந்த தேஜா மறைத்து வைத்திருந்த கத்தியால் வைஷ்ணவியின் கழுத்தை அறுத்து கொடூரமான முறையில் கொலை செய்தார். ரத்த வெள்ளத்தில் துடித்த வைஷ்ணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவத்தை கண்டு ஆத்திரம் அடைந்த கிராம மக்கள், தப்பி ஓடிய தேஜாவை சுமார் 400 மீட்டர் தூரம் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவரது கை மற்றும் கால்களை கயிற்றால் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்த தேஜாவை மீட்டு சிகிச்சைக்காக மகபூப்நகர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி நேற்று இரவு 11 மணி அளவில் தேஜா உயிரிழந்தார்.

இதுகுறித்து மகபூப்நகர் டிஎஸ்பி வெங்கடேஸ்வரலு கூறுகையில், ‘தேஜாவின் செல்போன் மற்றும் அடையாள அட்டைகள் கிடைக்காததால் அவரது முழு விவரங்களை சேகரிக்க முடியவில்லை. வைஷ்ணவியின் செல்போன் அழைப்பு விவரங்களை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது தேஜாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தார்.

Tags : Telangana ,Mahbubnagar ,Hyderabad ,Vaishnavi ,Deja ,
× RELATED காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலம்...