×

வைகாசி மாத சிறப்புகளும், ராசி பலன்களும்!

இதுவரையில், அவரது உச்ச வீடான மேஷ ராசியில் சஞ்சரித்த சூரிய பகவான், இப்போது அவரது பகை வீடும், சுக்கிரனின் ஆட்சி ராசியுமான ரிஷபத்திற்கு மாறியிருக்கிறார்! இதே தருணத்தில் சனி பகவானும், குரு பகவானின் ஆட்சிவீடான மீனத்தில், சஞ்சரிக்கிறார். மே மாதம் 26-ந் தேதியன்று கடக ராசிக்கு மாறும் குரு பகவான், தனது 9-ம் பார்வையான மீன ராசியில் சஞ்சரிக்கும் சனி பகவானைப் பார்வையிடுகிறார். கடகம், குரு பகவானின் உச்ச வீடாகும். உச்ச பலம் பெற்ற குரு, மீனத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானைப் பார்ப்பது, மிக நல்ல பலன்களை அளிக்கக்கூடிய கிரக நிலையாகும் என்பதை, ‘‘பூர்வ பாராசர்யம்” எனும் மிகப் புராதனமான ஜோதிடக் கிரந்தம்
விவரித்துள்ளது. குரு பகவானின் சக்தியைப் பற்றியும், அவரது சுபப் பார்வையின் விசேஷ மகிமைகளைப் பற்றியும் பழைமையான ஜோதிட நூல்கள் விளக்கியுள்ளன. மானிட வாழ்க்கையின் இன்ப – துன்பங்களை நிர்ணயிப்பது, ஆயுள் மற்றும் ஜீவனம் ஆகிய இரு அம்சங்களாகும். இவ்விரு அம்சங்களும், சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் இருப்பதாகக் கூறுகின்றன, ‘‘ஜோதிட ரத்னாகரம்” மற்றும் ‘‘பிருஹத் ஸம்ஹிதை” ஆகிய மிகப் புராதனமான ஜோதிட நூல்கள். ‘‘பிருஹத் ஜாதகம்” எனும் பிரசித்திப் பெற்ற ஜோதிடக் கிரந்தமும் சனி பகவானின் பெருமையைப் போற்றிப் புகழ்கிறது! அத்தகைய தெய்வீகப் பெருமையைப் பெற்றுத் திகழும் சனி பகவான், தனது பார்வை ஒன்றினாலேயே மனித வாழ்க்கையை மாற்றியமைக்கும் சக்தி பெற்றவராவார்.

மானிட வாழ்க்கையின் சுக – துக்கங்களை நிர்ணயிப்பது, இரு அம்சங்களாகும்! ஒன்று, ஆயுள்! மற்றொன்று, ஜீவனம்!! இந்த இரு அம்சங்களும் சனி பகவானின் ஆதிக்கத்தில்தான் உள்ளது. வாழ்க்கையின் சுகங்களை அனுபவிக்க வேண்டுமென்றால், ஒருவரது ஜனன கால ஜாதகத்தில், சனி பகவான் சுப பலம் பெற்றிருக்க வேண்டும்! பொதுவாக, ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும், ஏழரைச் சனிக் காலம் நிகழும்!! அக்காலத்தில், எத்தகைய சாமர்த்திய சாலிகளானாலும், சனி பகவானின் சோதனைகளுக்கு ஈடு கொடுக்க இயலாமல், துன்பப்படுவார்கள்! பாரதப் புண்ணிய பூமியை ஆண்ட மாமன்னர் நளச் சக்கரவர்த்தி, ஏழரைச் சனிக் காலத்தில்தான் ராஜ்ஜியத்தை இழந்து, மனைவி – மக்களையும் பிரிந்து கானகத்தில் அலைந்து திரிந்து, மற்றொரு மன்னரின் அரண்மணையில் சேவகம் செய்ததை சரித்திர நூல்கள் விளக்கியுள்ளன. சனி பகவானைப் பொருத்தவரையில், அனைத்து மக்களும் அவருக்குச் ஒன்றே! என்பதைத் தான் அனைத்து புராதன நிகழ்ச்சிகளும் விளக்கியுள்ளன. மும்மூர்த்திகளேயானாலும், சனி பகவானின் பிடியிலிருந்து தப்ப இயலாது என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. இத்தகைய தெய்வீகப் பலம் எங்கிருந்து வந்தது? எப்படி வந்தது? என்று ஆச்சர்யப்படலாம்!காசித் திருத்தலத்தில், கங்கைக் கரையின் பிரசித்திப் பெற்ற ‘‘கேதார்காட்” என்ற ஸ்நான கட்டத்தில் சிவ பெருமானைக் குறித்து, கடுந்தவமியற்றி, அதன் பயனாகவே, ‘‘சனீஸ்வரர்” என்ற ‘‘ஈஸ்வர” பட்டத்தைப் பெற்றதாக புராதன நூல்கள் விவரித்துள்ளன.

ஏழரைச் சனிக் காலத்தில், ஸ்ரீபரமேஸ்வரனே இமயத்தின் குகை ஒன்றில் ஒளிந்திருந்ததையும், பகவான் ஸ்ரீகிருஷ்ணன் மீது சத்ராஜித் என்ற மன்னரின் சகோதரரான பிரசேனன் என்பவரை ஸ்யமந்தக மணி மீது ஆசைப்பட்டு, கொன்றுவிட்டதாக வீண் பழி ஏற்பட்டதையும், புராதன நூல்கள் விவரிக்கின்றன. தேவர்களேயானாலும், அவதாரப் புருஷர்களேயானாலும், சனி பகவானின் ஆதிக்கத்தில் வரும்போது, துன்பப்பட்டேயாகவேண்டும் என்பது நியதி என்பதையும், அதனைத் தவிர்க்க இயலாது என்பதையும் அந்நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டுகின்றன. ஆயினும், சனி பகவான், தனது ஆட்சி காலத்தில், துன்பத்தை மட்டுமே அளித்தருள்வார் என்று நினைப்பது முற்றிலும் தவறான கருத்தாகும் என்பதை ஜோதிடக் கலை எடுத்துக் கூறுகிறது! எத்தகைய சனி தோஷமானாலும், அவற்றிற்குப் பரிகாரங்கள் உள்ளதை ேஜாதிட சாஸ்திரம் கூறியுள்ளது. மனித வாழ்க்கையின் சுக – துக்கங்களை நிர்ணயிப்பதால்தான், மக்கள் அனைவரும், சனி பகவானின் சஞ்சார மாறுதல்களை ஆர்வத்துடனும், கவலையுடனும் கவனிக்கின்றனர். சனி பகவான் சஞ்சார மாறுதல்களினால், ஏற்படும் அனைத்து பிரச்னைகளுக்கும் தகுந்த எளிய பரிகாரங்கள் உள்ளன.
வாழ்க்கையின் மிக முக்கிய பிரச்னைகள் இரண்டு! ஒன்று, உடல் ஆரோக்கியம்! மற்றொன்று ஜீவனம் (career). இவை இரண்டும் சனி பகவானின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன!ஆதலால்தான், சனி பகவானின் சஞ்சார நிலையில் ஏற்படும் மாறுதல்களை மக்கள் அனைவரும் ஆர்வத்துடனும், கவலையுடனும் கவனித்து வருகிறார்கள்!! இனி, வைகாசி மாதத்தின் நிகழவிருக்கும் முக்கிய நிகழ்ச்சிகளைக் காண்போம்.

வைகாசி 1 (15-5-2026) வெள்ளிக்கிழமை – வைகாசி மாதப் பிறப்பு. மாத சிவராத்திரி – பகலில் உபவாசமிருந்து, மாலை நேரத்தில் இரண்டாவது முறையாக ஸ்நானம் செய்து, விபூதி, ருத்ராட்சங்களை தரித்துக் கொண்டு, தேன், பால், தயிர், கரும்புப் பால், பசுநெய், முக்கனிகளாகிய, மா, பலா, வாழை, பஞ்சாரமிருதம், சந்தனம் போன்ற திரவியங்களால் அபிஷேகம் செய்வித்தால் சகல நலன்களும் உங்களை வந்தடையும். முக்கியமாக இன்றைய தினத்தில் வில்வ தளத்தினால் அர்ச்சிக்க அளவற்ற புண்ணிய பலன்களை அளிக்கவல்லது.
வைகாசி 2 (16-5-2026) சனிக்கிழமை – சர்வ அமாவாசை. பித்ருக்களைப் பூஜிக்கவேண்டிய புண்ணிய தினம். கிருத்திகை விரதம்.
வைகாசி 4 (18-5-2026) திங்கட்கிழமை – சந்திர தரிசனம் செய்ய வேண்டிய நன்னாள். வளர்பிறை முதல் நாளில் மேற்குக் கீழ்வானில் உதயமாகும் சந்திரதோயத்தைத் தரிசிப்போர்க்கு அந்நாள் தொடங்கி, அந்த மாதம் முழுவதும் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தையும், அபிவிருத்தியையும் காண்பீர்கள். அதுமட்டுமல்லாது, ஆயிரம் பிறைகளைக் காணும் பெறும் பேற்றைப் பெற்று வைய்யத்துள் வாழ்வாங்கு வாழ்வீர்கள் என்பது திண்ணம் எனக் கட்டியம் கூறுகிறது, ‘‘நவக்கிரகப் புராணம்”.
வைகாசி 6 (20-5-2026) புதன்கிழமை – ஸ்ரீ விநாயகப் பெருமானுக்கு உகந்த மாத சதுர்த்தி – இன்று முழுவதும், உபவாச மிருந்து, ஸ்ரீ விநாயகப்பெருமானுக்கு, அருகம் புற்களால் பூஜித்து, பழங்கள், 9 மோதகங்கள் (கொழுக்கட்டைகள்) அமுது செய்வித்து, பிறகு வானில் சந்திர பகவானை தரிசித்து பிறகு விநாயகப் பெருமனை நமஸ்கரித்து, பின்பு உணவு உண்ணலாம். இவ்விரதத்தைக் கடைப் பிடிப்போர்க்கு, காரியத் தடங்கல்கள் நீங்கும், புத்திரர்களை விரும்புபவர்கள் ஸத் புத்திரர்களையும், நெடுநாள் நோயினால், அவதிப்படுவோர்க்கு அந்நோயின் கடுமை வெகுவாகக் குறைவதையும், உடல் ஆரோக்கியம் அடைவதையும், கண்கூடாகக் காணலாம் என விநாயக புராணம் உறுதிபடக் கூறுகிறது. நமக்குத் தேவை பக்தியுடன் கூடிய நம்பிக்கை மட்டுமே!
வைகாசி 7 (21-5-2026) வியாழக்கிழமை – ‘‘பெரியபுராணத்தை” அருளிய சேக்கிழார் அவதரித்த திருநட்சத்திரம்.
வைகாசி 10 (24-5-2026) ஞாயிற்றுக்கிழமை – மாது ரிஷி எனப் போற்றிக் கொண்டாடப்படும் ஊர்வசியின் அவதார தினம்.
வைகாசி 12 (26-5-2026) செவ்வாய்க்கிழமை – உபவாசமிருந்து, குதபகாலம் அல்லது பித்ரு காலம் (அதாவது பகல் 1.10 மணிக்கு மேல், 3.30க்குள்) திதி – தர்ப்பணம் அல்லது பித்ருக்களுக்கு படையல் வைத்து வணங்கிய பின்பு, பசு மாடுகளுக்கு அகத்திக் கீரை அல்லது பசும்புல், வெல்லம் – அரிசி கொடுத்து வணங்குதல் வேண்டும்.
இந்நாளில், வெங்காயம், பூண்டு, கத்தரிக்காய், முருங்கைக் காய், நூல்கோல், துவரம் பருப்பு, ஜவ்வரிசி, சேமியா போன்றவற்றைத் தவிர்த்தல் வேண்டும். பாசிப் பருப்பை உபயோகிக்கலாம். இவ்விரதத்தைக் கைக்கொள்வார்களின் சந்ததியினர், அல்பாயுசுகளில் மரிக்கமாட்டார்கள், பித்ருக்களின் ஆசியினால்சந்ததியினர் உங்கள் சந்ததியினர் மதிநுட்பத்துடன் கூடியவர்களாகவும், பொது மக்களிடையே உங்களுக்கும் நற்பெயரைப் பெற்றுத் தருபவர்களாகவும் இருப்பார்கள்.
வைகாசி 13 (27-5-2026) புதன்கிழமை – சர்வ ஏகாதசி. இவ்விரதத்தைப் பற்றிக் கூறாத புராணங்களோ, இதிகாசங்களோ இல்லையெனக் கூறலாம். அவ்வளவு மகிமை வாய்ந்தது இவ்விரதம்.மேலும், இன்றைய தினம் சித்த மகா புருஷரும், பாம்பாட்டி சித்தரின் பிரதான சிஷ்யருமாகிய, புண்ணாகீசர், அவதாரப்புண்ணியத் தினம்.
வைகாசி 14 (28-5-2026) வியாழக்கிழமை – அக்னி நட்சத்திர நிவர்த்தி. பிரதோஷம் – ஒவ்வொரு கிருஷ்ணபட்ச – சுக்லபட்சப் புண்ணிய தினத்தன்று, நிர்ஜலமாக உபவாசமிருந்து, பிரதோஷக் காலமாகிய மாலை 5 மணிக்கு மேல் சாம்ப சிவ மூர்த்தியை ரிஷபாரூடராக தரிசனம் செய்வோர்க்கு சகல மங்களங்களையும் தந்தருள்வார், ஸ்ரீ சாம்பசிவமூர்த்தி!
வைகாசி 16 (30-5-2026) வெள்ளி மற்றும் சனிக்்கிழமை – ஸ்ரீ லட்சுமி நரசிம்ம ஸ்வாமிக்கு உகந்த, சதுர்த்தசி திதியில் அவதரித்த புண்ணிய தினம். மேலும். இன்று பௌர்ணமி விரதம். ஒருவரின் மனத்திற்கான காரகத்துவன் வாய்ந்தவரும், மாத்ருகாரகராக ஜோதிடக் கிரந்தங்களில் சிலாகித்துக் கூறப்படுபவருமான, சந்திர பகவானின் அதிதேவதை நீர் நிலைகள். அதனால்தான், இன்றைய தினத்தில் கடலலைகள் அளவிற்கு மீறிய சீற்றத்துடனும் வேகத்துடனும் காணப்படுவதை அனுபவத்தில் காணலாம். இந்நன்னாளன்று சந்திர பகவான் பிரவேசிக்கும் நட்சத்திரத்தின் பெயரைக் கொண்டே அழைக்கப்படுகிறது. உதாரணமாக, சித்திரை நட்சத்திரத்தில சந்திரன் பிரவேசித்தால், சித்தராப் பௌர்ணமி என்றும், விசாக நட்சத்திரத்தில் பிரவேசிக்கும் காலத்தையே வைசாக மாதம் எனவும் அதுவே கேட்டை நட்சத்திரத்தில் பிரவேசித்தால், ஜேஷ்ட மாதம் எனவும் பூஜிக்கப்படுகிறது. இந்நாளில் உபவாசமிருந்து, மாலையில் சந்திரனைத் தரிசித்த பிறகு, ஸ்ரீ சத்திய நாராயண பூஜை செய்துவரும் பக்தகோடிகளுக்கு, அஷ்ட ஐஸ்வர்யங்களையும் தந்தருள்வதாக சத்தியப் பிரமாணம் செய்ததினாலேயேதான் இவ்விரதத்திற்கு ‘‘சத்திய நாராயண விரதம்” எனும் பெயர் உண்டாயிற்று.
வைகாசி 16 (30-5-2026) சனிக்கிழமை – வைகாசி விசாகம் – பௌர்ணமியுடன்கூடிய வைகாசி மாதமும், விசாக நட்சத்திரமும் இணையும் நாளையே வைகாசி விசாகமாகக் கொண்டாடப்படுகிறது. இம்மாதத்தில்தான் கோடைக் காலம் முடிவடையும் மாதமாகவும், வசந்தக்காலம் பிறக்கும் மாதமாகக் கருதப்படுவதாலும், காலமாற்றத்தைப் போல நம்முடைய வாழ்க்கைப் பயணத்தில் துன்பக் காலமாகிய கோடைக்காலம் விலகி, இன்பமனைத்தையும் தந்திடும் வசந்த காலத்தைப் போல நம்முடைய வாழ்விலும் வசந்தம் வீசிடும் பொருட்டே இக்காரணப் பெயர் உண்டாயிற்று.
மேலும், வைகாசி மாதத்தில், விசாக நட்சத்திரத்தில்தான், முருகப் பெருமான் அவதரித்தார். அதனாலேதான் முருகப் பெருமானுக்கு ‘‘விசாகன்” என்ற திருப் பெயருமுண்டு. ‘‘வி” என்றால் பறவை என்றும் ‘‘சாகன்” பயணிப்பவர் என்றும் அர்த்தம். அதாவது ‘‘மயில்” என்கிற பறவை மீது பயணிப்பவர் என்ற பொருள் படும்படியே கூறப்பட்டமையாலேயே, இதுவே காரணப் பெயராக அமையப் பெற்றது.
ஒருசமயம் பராசர முனிவரின் திருக் குமாரர்கள், நீர்நிலைகளில் குளிக்கையில், அதிலுள்ள மீன்களை அடித்தும், கொன்றும், விளையாடியதைக் கண்ட பராசர முனிவர், ‘‘நீர் நிலைகள் சிவபெருமானின் அம்சம்! ஆகையால், நீர்நிலைகளை எவ்விதத்திலும் அசுத்தம் செய்தல் கூடாது” என்று பலவாறாக எச்சரித்தும், அதைச் சற்றும் கேளாது, அலட்சியம் செய்த தன் குமாரர்களை மீன்களாகப் போகுமாறு சபித்துவிட்டார். பல காலங்களாக மீன் உருவில் பரிதவித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வமயம், வானுலகில் இமயவள், தன் மகன் முருகப் பெருமானுக்்கு ஞானப்பால் ஊட்டிக் கொண்டிருந்தாள், அதிலிருந்து சில துளிகள் சிந்தி, மீனுருவில் துன்பப்பட்டுக் கொண்டிருந்த பராசரர் முனிவரின் குமாரர்களின் குளத்து நீரில் விழுந்ததுதான் தாமதம், இவர்கள் சாபத்திலிருந்து விடுபட்டு, ஸ்ரீ முருகப் பெருமானின் தன்னிகரில்லா பக்த சீலர்களாக ஆனார்கள்.
இன்று பௌர்ணமி விரதம். மேலும், இன்று ஸ்ரீ நம்மாழ்வார், திருவாய்மொழிப்பிள்ளை, பிள்ளை நம்பிகள் திருநட்சத்திரங்கள்.
வைகாசி 17 (31-5-2026) ஞாயிற்றுக் கிழமை – காஞ்சி மகா பெரியவாள் ஜெயந்தி. வைகாசி 19 (2-6-2026) செவ்வாய்க்கிழமை அறுவத்து மூவருள், முதன்மை ஸ்தானத்தை வகிப்பவரும், தாய், தந்தையராகிய பகவதி சிவபாதவிருதயர்ன் அருந்தவப் புதல்வரும், பரம பக்த சீலருமான திருஞானசம்பந்தரின் அவதாரப் புண்ணிய தினம்.
வைகாசி 22 (5-6-2026) வெள்ளிக்கிழமை – சிரவண விரதம். ‘‘திருவோணத்தான், உலகாளுமென்பார்களே” என்பது ஆழ்வார் பெருமக்களின் திருவாக்காகும். இவ்விரதத்தைக் கைக்கொள்வார்க்கு, சகல பாபங்களும் விலகி, நம் சந்ததியினர் நல் வாழ்வு வாழப் பெறுவதைக் கண்கூடாகக் கண்டு களிப்பர்.
வைகாசி 24 (7-6-2026) ஞாயிற்றுக்கிழமை – பானு ஸப்தமி. மேலும், இன்றைய தினத்தில்தான் ஸ்ரீகௌபால ரிஷியின் அவதாரப் புண்ணிய தினம்
வைகாசி 25 (8-6-2026) திங்கட்கிழமை – அதிக பகவதாஷ்டமி – இந்தப் புண்ணிய நன்னாள் காலையில் ஸ்ரீசிவ பெருமானையும், பிரதோஷ நேரமாகிய சூரிய அஸ்தமன வேளையில், பைரவரையும் வணங்கி வழிபட்டால், கடன் சுமை நீங்கும். தெரிந்தோ அல்லது தெரியாமலோ தெய்வ அடியார்க்குச் செய்த அபவாதங்கள் அனைத்திலிருந்தும் விடுபடுவீர்கள்!
வைகாசி 28 (11-6-2026) வியாழக்கிழமை – ஸர்வ ஏகாதசி.
வைகாசி 29 (12-6-2026) வெள்ளிக்கிழமை – துவாதசி திதி மற்றும் பிரதோஷம்.
மேலும், இன்றைய தினம் சித்த மகா புருஷர் போகரின் திருவவதாரப் புண்ணிய தினம். பழனியில் இன்றளவும் விளங்கும் பழனி தண்டாயுத பாணியின் சிலை, நவபாஷணங்களால் இம்மகாபுருஷரால்தான் நிர்மாணம் செய்யப்பெற்றது.
வைகாசி 30 (13-6-2026) சனிக்கிழமை – கிருத்திகை விரதம், மாத சிவராத்திரி.
வைகாசி 31 (14-6-2026) ஞாயிற்றுக்கிழமை – சர்வ அமாவாசை.
இனி, வைகாசி மாதத்தின் பலா பலன்களை மேற்கூறிய துல்லிய விதிகளின்படி சற்று ஆராய்ந்து பார்ப்போமா..?!
எந்தெந்த ராசிகளுக்கு, பரிகாரம் அவசியமோ, அவற்றையும் புராதன ஜோதிட நூல்களிலிருந்து எடுத்துக் கூறியுள்ளோம். செய்வதற்கு எளிதான ஆனால், மிகவும் சக்திவாய்ந்தவைகளாகும். கடைப்பிடித்து, பயனடையும்படி, எமது ‘‘தினகரன்” வாசக அன்பர்களைப் பிரார்த்தித்துக் கொள்கிறோம்.
இப்பரிகாரங்கள் அனைத்தும், மிகப் புராதன ஜோதிடக் கிரந்தங்களிலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டவைகளாகும்.

Tags : Aries ,Saturn ,
× RELATED சென்னையில் திருவண்ணாமலை