×

ஆங்கிலேய அதிகாரியைக் காத்த அத்திகிரி வரதர்

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் முதன்மை அதிகாரிகளுள் குறிப்பிடத்தக்கவராக விளங்கியவர் ராபர்ட் க்ளைவ். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை தம் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் எந்த எதிர்ப்பையும் வளரவிடாதபடி செய்தவர். ஒரு முறை அவர்தம் படைகளுடன் காஞ்சிபுரம் தலத்துக்கு வந்தார். திடீரென அவருக்கு உடல்நலம் குன்றியது. கடுமையான காய்ச்சலும் உடல் சோர்வும் அவரை அப்படியே வீழ்த்தியது. ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாதபடி பெரிய பாதிப்பு ஏற்பட்டது. அவருடன் எப்போதும் வரும் ஆங்கிலேய மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்தனர். ஏற்கெனவே அவருடைய நோய் அறிகுறிகளை உடனிருந்தே கவனித்து வந்த அவர்கள் இந்த முறை திகைத்துத் தடுமாறினர். பகலிலேயே ஆரம்பித்த உபாதை நள்ளிரவு நேரத்தில் மிகவும் மோசமாகியது.

க்ளைவின் நோயும், அதைக் கட்டுப் படுத்த மருத்துவர்கள் மேற்கொண்ட முயற்சிகளும் செய்தியாக வெளியே பரவியது. தம்மை அடிமைப்படுத்தியவர் என்ற உண்மை சுட்டாலும், அதைவிட மனித நேயத்துக்கே முக்கியத்துவம் கொடுத்த சில அன்பர்கள், காஞ்சி வரதராஜப் பெருமாளிடம் முறையிட்டார்கள். கோயில் பட்டர்களும் வரதராஜர் சந்நதியிலிருந்து செப்புப் பாத்திரத்தில் துளசி தீர்த்தத்தை ஒரு பாத்திரம் நிறைய எடுத்து வந்தார்கள். அதை க்ளைவிடம் தந்து, வரதராஜப்பெருமாளை வேண்டிக்கொண்டு பருகிடுமாறு கேட்டுக் கொண்டனர். க்ளைவ் தன் மருத்துவர்களைப் பார்த்தார். அவர்கள் தலை குனிந்து தம் தோல்வியை ஒப்புக் கொண்டதோடு, இந்த முயற்சிக்கு மவுனமாக அனுமதியும் தந்தார்கள்.

அதன்படி, பெருமாளின் பிரசாதமாகிய துளசி தீர்த்தத்தை அருந்திய ராபர்ட் க்ளைவ், அன்றிரவு நன்றாகத் தூங்கினார். விடிந்த பின் காய்ச்சலும், உடல்வலியும் மறைந்துபோக, பழைய உற்சாகத்துடன் இயங்க ஆரம்பித்தார் அவர். வரதராஜப் பெருமாளின் மகிமையை உணர்ந்த அவர், தன்னிடமிருந்த மகரகண்டி எனும் விலையுயர்ந்த நகையை பெருமாளுக்கு காணிக்கையாக சாற்றினார். இன்றும் விழாக்காலங்களில் வரதராஜர், க்ளைவ் மகரகண்டியை அணிந்து வீதியுலா வருவது நடக்கிறது.

மூலவர் வரதராஜன், பேரருளாளன், தேவாதிராஜன், தேவப்பெருமாள், அத்தியூரான் என்று பக்தர்களால் பலவாறு கொண்டாடப்படுகிறார். தாயார் பெருந்தேவியாக, மகாதேவியாக தனிக்கோயிலில் அருள்கிறாள். தேசிகரின் ஸ்ரீஸ்துதிக்கு மனமிரங்கி ஒரு ஏழை அந்தணரின் திருமணத்திற்காக தங்கமழை பொழியச்செய்தவள் இந்த தேவி.

பிரம்மனின் யாகம் எந்தத் தடையும் காணாமல் நிறைவேற அக்னி ஜ்வாலையாக பெருமாள் காத்து நின்றதால், உற்சவர் திருமுகத்தில் அக்னி வடுக்கள் போன்ற புள்ளிகளைக் காணலாம். யாகமுடிவில் புண்யகோடி விமானத்தில் சங்கு, சக்ர, கதாபாணியாய் திருமால் தோன்றி அவிர்பாகம் ஏற்றருளினார். யாகத்தில் பங்கேற்ற தேவர்கள் உட்பட அனைவருக்கும் கேட்ட வரங்களைத் தந்ததால் வரதர் என பெருமாளுக்கு திருநாமம் இட்டனர். திருமால் இங்கேயே நித்யவாசம் செய்ய தேவேந்திரனின் வாகனமான ஐராவதமே மலைவடிவம் கொண்டு பெருமாளை தாங்கியதால் இத்தலம் அத்திகிரி எனப்பட்டது. க எனில் பிரம்மன், அஞ்சிரம் எனில் பூஜிக்கப்படல். பிரம்மன் பூஜித்ததால் கஞ்சிரம் என்பது பின்னாளில் மருவி காஞ்சிபுரம் என்றாயிற்று.

ஸ்ருங்கிபேரர் எனும் முனிவரின் மகன்களான ஹேமன், சுக்லன் இருவரும் கௌதம முனிவரின் சீடர்கள். ஒருநாள் கௌதமரின் பூஜைக்கான தீர்த்தத்தில் பல்லி விழுந்திருந்தது. இந்த கவனக் குறைவுக்காக அவர்கள் இருவரையும் பல்லிகளாகும்படி சபித்தார் முனிவர். காஞ்சி வரதராஜர் ஆலயத்தில் இந்திரன் கஜேந்திரனாகி வரதராஜரை தரிசிக்க வரும்போது அவர்களுக்கு சாபவிமோசனம் கிட்டும் என்றும் கூறினார். அதன்படியே சாபவிமோசனமடைந்த அவர்களை நினைவு கூரும் வண்ணம் தங்கத்தாலும், வெள்ளியாலும் வையமாளிகைப் பல்லிகளாக இத்தலத்தின் பிராகாரத்தில் அமைத்துள்ளனர். கடுமையான நோயால் பாதிக்கப்பட்டவர்களை இந்த பல்லி தேவர்கள் காத்து அருள்கின்றனர்.

திருமாலின் 108 திவ்யதேசங்களில் குங்குமம் திலகம் போன்று விளங்கும் தலம் இது. இங்குள்ள குளத்தில் அத்திவரதர் வைக்கப்பட்டுள்ளார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறை இவரை வெளியே எடுத்து பக்தர்கள் தரிசனத்துக்கு வைக்கிறார்கள். சித்ரா பௌர்ணமியன்று இரவு 12 மணிக்கு மேல் நான்முகன் வரதராஜரை பூஜை செய்ய வருவதாக ஐதீகம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பெருந்தேவித்தாயார் ஆலயத்தின் உள்ளே புறப்பாடும், ஒவ்வொரு ஏகாதசியன்றும் வரதராஜப்பெருமாள் ஆலயத்தின் உள்ளே புறப்பாடும், வெள்ளிக் கிழமையும் ஏகாதசியும் சேர்ந்த அன்று இருவரும் சேர்ந்த புறப்பாடும் நடக்கும் தலம் இது.

ராமானுஜரைக் காக்க வேண்டி, சோழ மன்னனால் பார்வையிழந்த கூரத்தாழ்வான், இந்த பெருமாளை நோக்கி வரதராஜஸ்தவம் எனும் துதியைப் பாட, பெருமாள் அவருக்கு பார்வையை மீட்டுத் தந்த ஒப்பற்ற தலம். பெருமாள் இங்கு புண்யகோடி விமானத்தின் கீழ் வீற்றிருப்பதால் இத்தலத்தில் செய்யப்படும் புண்ணியச் செயல்கள் எல்லாம் கோடிமடங்கு பலன்தரும் என்பது ஐதீகம்.திருமங்கையாழ்வார் 4 பாசுரங்களாலும், பூதத்தாழ்வார் 2 பாசுரங்களாலும், பேயாழ்வார் 1 பாசுரத்தாலும் வரதராஜப்பெருமாளை மங்களாசாஸனம் செய்திருக்கின்றனர்.

கிருஷ்ணா

Tags : Attigiri ,Robert Clive ,South India ,Kanchipuram Talat ,
× RELATED விஷ்ணு புராணம் காட்டும் தத்துவங்களும் நீதிகளும்