கார்த்திகை மாதம் என்றாலே நமக்கு உடனே நினைவிற்கு வருவது அண்ணாமலை ஜோதி தரிசனம்தான். சென்னை வாழ் மக்கள் ஒருவகையில் அதிர்ஷ்டசாலிகள் என்றுதான் சொல்லவேண்டும். ஏனேனில் கார்த்திகை தீபத் திருநாளன்று திருவண்ணாமலை சென்று ஜோதி தரிசனம் பெற்றிட முடியாதவர்களுக்கு அந்த பாக்கியத்தை வழங்குவதற்காகவே வடசென்னை- சௌகார்பேட்டையில் பள்ளியப்பன் தெருவில் கோயில் கொண்டுள்ளார் அருணாசலேஸ்வரர்.
வருடந்தோறும் ஜோதி தரிசனம் செய்ய திருவண்ணாமலைக்குச் சென்று வந்த ஒரு பக்தரால் ஒரு வருடம் சில காரணங்களால் அங்கு செல்ல இயலவில்லை. அருணாசலேஸ்வரரைத் தரிசிக்க முடியவில்லையே என அவர் மனம் சஞ்சலப்பட்டது. உடனே சென்னையில் அருணாசலேஸ்வரருக்கு ஒரு கோயில் கட்டிவிடுவது என அவர் முடிவு செய்தார். காசி யாத்திரை சென்று அங்கிருந்து பாண லிங்கம் எடுத்து வந்தார். தற்போது கோயில் உள்ள இடத்தில் பிரதிஷ்டை செய்தார். பின்பு படிப்படியாக திருப்பணிகள் நடந்து இன்று அருணாசலேஸ்வரர் ஆலயம் அழகாக அமைந்துள்ளது.
பிரதான மூர்த்தியான அருணாசலேஸ்வரர் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். பிரதோஷ தினங்களில் இங்கு நெய்விளக்கேற்றி, வெல்லம் கலந்த அரிசியை நந்தியம்பெருமானுக்கு நைவேத்யமாகப் படைத்து வணங்குகின்றனர். இத்தலத்தில் மகாசிவராத்திரியும் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இரவு நான்கு கால பூஜைகள், ஒவ்வொரு கால பூஜையிலும் வெவ்வேறு அலங்காரங்களுடன் சிவபெருமான் காட்சியளிப்பது இத்தலச் சிறப்பு. காஞ்சி முனிவர் 1967ல் இத்திருக்கோயிலுக்கு விஜயம் செய்து ஸ்ரீசக்ர பிரதிஷ்ட செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இத்திருக்கோயிலின் தென்மேற்கு மூலையில் அருள்கிறார் விஜய விநாயகர். வடமேற்கு மூலையில் தேவியருடன் முருகப்பெருமானைத் தரிசிக்கலாம். திருவண்ணாமலையில் நடப்பது போல் இங்கும் கார்த்திகை மாதத்தில் தீபத் திருநாளையொட்டி 10 நாள் திருவிழா நடக்கிறது. சென்னை அன்பர்கள் இத்திருக்கோயிலை தரிசித்து பயனடையலாம்.
ரெங்கராஜன்
