ஜெயங்கொண்டம்,மே 13: அரியலூர் மாவட்ட விவசாயிகளுக்கு நிலக்கடலை விதைகளை காலதாமதமின்றி வினியோகம் செய்ய வேண்டும் என வேளாண் இணை இயக்குனர் உலகம்மை முருகக்கனி அறிவுறுத்தி உள்ளார். அரியலூர் மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் விவசாயிகள் நில உடைமை ஆவணங்கள் சரி பார்க்கப்பட்டு பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு விவசாயிகள் அடையாள எண் வழங்கப்பட்டு வருகிறது.
அரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் உலகம்மை முருகக்கனி ஆண்டிமடம் வட்டாரத்தில் ஆண்டிமடம் மற்றும் கூவத்தூர் தெற்கு ஆகிய கிராமங்களில் விவசாயிகள் அடையாள எண் பதிவு செய்யும் முகாமினை ஆய்வு செய்து விவசாயிகள் அடையாள எண் பெறுவதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினார். அனைத்து விவசாயிகளும் அடையாள எண் பெற்று பயனடையும்படி அறிவுறுத்தினார்.
பின் வட்டார வேளாண் கிடங்கினை ஆய்வு செய்தார். கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள நிலக்கடலை விதைகளின் தரத்தை ஆய்வு செய்து காலதாமதமின்றி விவசாயிகளுக்கு விநியோகம் செய்ய வேண்டும் எனவும் அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார். ஆய்வின் போது வட்டார வேளாண் உதவி இயக்குநர் (பொ) ராதிகா, உதவி வேளாண் அலுவலர்கள், கிடங்கு மேலாளர் மற்றும் அட்மா திட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
