×

காஷ்மீரில் மதக் கல்வி நிலையத்தில் தீ விபத்து: மாணவர் பலி

ஜம்மு காஷ்மீர்: அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள மதக் கல்வி நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு மாணவர் உயிரிழந்த நிலையில் 3 மாணவர்கள் தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பழைய மட்டன் அட்டா (Old Mattan Adda) பகுதியில் அமைந்துள்ள ‘தாருல் உலூம் பாபா ஹைதரி ரிஷி (Darul Aloom Baba Hydari Reshi) என்ற கல்வி நிலையத்தில், நள்ளிரவு சுமார் 1:30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டதால் அந்த கட்டிடத்தில் தங்கியிருந்த மாணவர்களிடையே பெரும் அச்சம் நிலவியதாக அதிகாரிகள் கூறினர்.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்த உடனேயே தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள் துறையைச் சேர்ந்த குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மீட்பு மற்றும் தீயணைப்புப் பணிகளில் ஈடுபட்டனர். உள்ளூர் மக்களின் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் அந்த மதக் கல்வி நிலையக் கட்டிடத்திலிருந்து பல மாணவர்களை வெளியேற்றினர்.

இதன் மூலம் மேலும் உயிரிழப்புகள் ஏற்படுவது தடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். வார்டன் (Warden) பகுதியைச் சேர்ந்த மாணவர் பிலால் அகமது என்பவர் இந்த விபத்தில் பலத்த தீக்காயங்களுடன் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறினர். மேலும் நான்கு மாணவர்கள் காயமடைந்த நிலையில், சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags : Kashmir ,Jammu and Kashmir ,Anantnag district ,Old Mattan Adda ,
× RELATED காஷ்மீரில் மதக் கல்வி நிலையத்தில் தீ விபத்து: மாணவர் பலி