×

விவசாயியை வெட்டிக்கொன்ற ஏட்டுவின் கணவர் கைது

நாமக்கல்: நிலத்தகராறில் விவசாயியை வெட்டிக்கொன்ற வழக்கில் ஏட்டுவின் கணவர், மாமனார், மாமியார் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் மாவட்டம், மொளசி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட இறையமங்கலம், காட்டுவேலாம்பாளையத்தை சேர்ந்தவர் தர் (65). அதே பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. விவசாயிகளான இருவருக்கும், கடந்த 4 வருடங்களாக நிலம் தொடர்பாக பிரச்னை இருந்து வந்தது.

இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நேற்று காலை ஸ்ரீதர் தனது தோட்டத்திற்கு நீர்பாய்ச்சுவதற்காக கிணற்று மோட்டாரை இயக்க, இருதரப்பினருக்கும் பொதுவான பாதையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வேலுசாமி, அவரது மனைவி கண்ணகி, மகன் கேசவராஜ் ஆகியோர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் ஸ்ரீதரை கண்டதும் நிலப்பிரச்னை தொடர்பாக கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு தர் பதில் அளித்துள்ளார்.

இதில் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, கேசவராஜ் கையில் வைத்திருந்த அரிவாளால், ஸ்ரீதரை சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த தரின் அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் உள்ளவர்கள் அங்கு ஓடி வந்தனர். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஸ்ரீதரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே தர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில், போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய வேலுசாமி, அவரது மனைவி கண்ணகி, மகன் கேசவராஜ் ஆகியோர் தலைமறைவாகினர். இதில் கேசவராஜின் மனைவி மீனா, ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். சம்பவம் நடந்தபோது, அவர் காவல் நிலைய பணிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் தலைமறைவாக இருந்த வேலுசாமி, கண்ணகி, கேசவராஜ் ஆகியோரை நேற்றிரவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Tags : Attu ,NAMAKAL ,ETUV ,Dar ,Suiyamangalam, Kathuellampalayam ,Molasi Police Station ,Namakkal District ,Velusamy ,
× RELATED இலங்கையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் புத்த துறவி கைது