புதுச்சேரி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அழைப்பின் பேரில் கடந்த 2 நாட்களாக புதுச்சேரியில் முகாமிட்டிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் இன்று மாலை சென்னை புறப்பட்டு செல்கின்றனர். இந்தநிலையில் ஆட்சி அமைக்க ஆதரவு கேட்டு முக்கிய தலைவர்களை சந்திக்க எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டுள்ளதால், அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க 118 தொகுதிகள் அவசியம். ஆனால், விஜய் 2 தொகுதிகளில் போட்டியிட்டுள்ளதால் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் வந்துவிடும்.
ஆகையால் தவெகவிடம் 107 எம்எல்ஏக்களும், காங்கிரசிடம் 5 எம்எல்ஏக்களும் என மொத்தம் 112 எம்எல்ஏக்கள் தான் உள்ளனர். எனவே, 118 சீட் பெரும்பான்மையை நிரூபிக்க மேலும் 6 எம்எல்ஏக்கள் தேவை. எனவே ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் ஆகியோர் அதிமுக எம்எல்ஏக்களை இழுக்க தலா ரூ.50 கோடி வரை பேரம் பேசியதாக கூறப்படுகிறது. தவெகவினரின் குதிரை பேரத்தை தடுக்க எடப்பாடி பழனிசாமி உத்தரவின்பேரில் தமிழக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் மற்றும் புதுச்சேரி மாநில அதிமுக செயலாளர் அன்பழகன் தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுவையில் உள்ள தி ஷோர் டிரிஷ்வம் ரிசார்ட்டில் நேற்று முன்தினம் இரவு தங்க வைக்கப்பட்டனர்.
ஓ.எஸ்.மணியன், தளவாய் சுந்தரம், விஜயபாஸ்கர் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட அதிமுக எம்எல்ஏக்கள் ரிசார்ட்டிற்கு வந்து தங்கினர். ரிசார்ட்டில் தங்கியிருந்த அதிமுக எம்எல்ஏக்கள் நேற்று நீச்சல் குளத்தில் குளித்தனர். அப்போது டிரோன் மூலம் அதிமுக எம்எல்ஏக்கள் அந்தரங்க குளியலை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால் ரிசார்ட்டில் எம்எல்ஏக்களுக்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக கூறியதால், நேற்று காலை அதே பகுதியில் உள்ள ஆர்கேஎன் ரிசார்ட்டுக்கு அனைத்து எம்எல்ஏக்கள் மாறினர். தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்குள் அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 47 எம்எல்ஏக்களும் ரிசார்ட்டுக்கு வந்தடைந்தனர்.
இதையடுத்து எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து புறப்பட்டு நேற்றிரவு 7 மணியளவில் புதுவை வந்தார். பின்னர் ரிசார்ட்டின் உள்ளே அதிமுக எம்எல்ஏக்களுடன் பழனிசாமி சுமார் 1 மணி 15 நிமிடம் நேரம் ஆலோசனை நடத்தினார். அப்போது எடப்பாடி பழனிசாமி ேபசுகையில், நல்லதே நடக்கும். அனைவரும் பொறுமையோடு இருக்க வேண்டும். நான் சொல்லும் வரை, அதாவது வருகிற 10ம் தேதி வரை யாரும் புதுச்சேரியை விட்டு புறப்பட வேண்டாம். தமிழக அரசியல் சூழல் அதிமுகவை நோக்கி வரும்’ என்றார். பின்னர், ‘பொதுச்செயலாளர் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்’ என உறுதி மொழி தந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கையெழுத்திட்டு கொடுத்துள்ளனர். இதன் பின்னர் எடப்பாடி சென்னை புறப்பட்டு சென்றார்.
எம்எல்ஏக்கள் வெளியே செல்லாதபடியும், வெளி ஆட்கள் எம்எல்ஏக்கள் தொடர்பு கொள்ள முடியாதபடியும் அதிமுக மூத்த தலைவர்கள் கண்காணித்து வந்தனர். இந்நிலையில் புதுச்சேரியில் தங்கியிருந்த அதிமுக எல்எல்ஏக்கள் அனைவரையும் சென்னை வரச்சொல்லி எடப்பாடி இன்று காலை உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதை தொடர்ந்து அனைத்து எம்எல்ஏக்கள் இன்று மாலை சென்னை புறப்பட்டு செல்கின்றனர். தற்போது அதற்கான ஆயத்த பணிகளில் உள்ளனர். அடுத்தடுத்து அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருவதால் எம்எல்ஏக்களுடன் ஆலோசித்து முடிவெடுக்க அனைவரும் சென்னையிலே இருக்க வேண்டும் என எடப்பாடி நினைப்பதால் எம்எல்ஏக்களை அவர் வர சொல்லி உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் உள்ள பிரபல ஓட்டலில் எம்எல்ஏக்களை தங்கவைக்க ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில், தவெக ஆட்சி அமைக்க முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால், அடுத்தபடியாக திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்று ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திமுக ஆட்சி அமைக்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், 3வது பெரிய கட்சியான அதிமுகவை மெஜாரிட்டி நிரூபிக்க ஆளுநர் அழைப்பு விடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில், எடப்பாடி பழனிச்சாமி இன்று மெஜாரிட்டி நிரூபிக்க தேவையான ஆதரவைத் திரட்ட முடிவு செய்துள்ளார். இதனால், அவரும் முக்கிய தலைவர்களை இன்று மாலை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளதாக கூறப்படுகிறது. அவர் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளையும் சந்தித்து அவர் ஆதரவு கேட்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
