×

கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிட கோரி கவன ஈர்ப்பு கூட்டம்

வெள்ளக்கோவில், மார்ச் 1: முத்தூர் செட்டியார்பாளையத்தில் கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் அமைக்கும் திட்டத்தை கைவிடக்கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ககவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினர்.இதில், கீழ்பவானி பாசன திட்டத்தின் கால்வாய் மூலம் 2,07,000 ஏக்கர் பாசனம் பெறுகின்றன. வாய்க்கால் நீர் போக உரம்பு நீர் பாசனம் மூலம் மறைமுகமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் பாசனம் பெறுகிறது. இந்நிலையில், 124 கி.மீ. நீளம் கொண்ட கீழ்பவானி வாய்க்காலில் கான்கிரீட் தளம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. கடந்த வாரம் இத்திட்டத்திற்கு பிரதமர் மோடி கோவையில் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். இதற்கு விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. ஏற்கனவே, அ.தி.மு.க. ஆட்சியில் 2013ம் ஆண்டு திட்டம் அறிவிக்கப்பட்டது.

அப்போது, விவசாயிகளின் எதிர்ப்பால் கைவிடப்பட்டது. இந்நிலையில், மீண்டும் இத்திட்டத்தை அ.தி.மு.க. அரசு கொண்டு வந்துள்ளது. இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் பிரதான வாய்க்கால் கரையோரங்களுக்கு அரணாக நிற்கும் பல ஆண்டுகள் பழமை வாய்ந்த ராட்சத மரங்கள் வெட்டப்படும். இதனால், சுற்றுச்சூழல் பாதிப்பதோடு வாய்க்கால் கரையோரம் உள்ள கிணறுகளில் நீரின் அளவு வெகுவாக குறையும். மேலும், வாய்க்கால் கசிவுநீர் மூலம் பாசனம் பெறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விளைநிலங்கள் பாலைவனமாகும். பொது மக்களுக்கும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளதால் இத்திட்டத்தை கைவிடக்கோரி கீழ்பவானி பாசன கால்வாய் விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இத்திட்டத்தை கைவிட வேண்டும் என அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக நேற்றும் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் கவன ஈர்ப்பு கூட்டம் நடத்தினர். தற்போது தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதால் தேர்தல் முடியும் வரை இத்திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பல இடங்களில் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தபோவதாக தெரிவித்துள்ளனர்.

Tags : Kizhpavani ,
× RELATED கீழ்பவானி கசிவு நீர் பாசன சபை தேர்தலை ரத்து செய்ய வேண்டும்