×

மும்மொழிக் கொள்கைக்கு வழிவகுக்கும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்கக்கூடாது: இந்திய மாணவர் சங்கம் அறிக்கை

சென்னை: இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் மிருதுளா, மாநில செயலாளர் சம்சீர் அகமது ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒன்றிய அரசின் பிஎம்ஸ்ரீ திட்டத்துக்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்ற அரசியல் நிபந்தனையுடன் தமிழ்நாடுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியை தொடர்ந்து நிலுவையில் வைத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு வழங்க வழங்க வேண்டிய சுமார் ரூ.2151 கோடி நிதியை தாமதப்படுத்தி, புதிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பிஎம்ஸ்ரீ திட்டத்தை மாநிலத்தின் மீது திணிக்க முயற்சிப்பது கூட்டாட்சி அமைப்பின் அடிப்படை கொள்கைகளுக்கு நேரடி அச்சுறுத்தலாகும். தமிழ்நாடு தொடர்ந்து இரு மொழிக் கொள்கை, சமூக நீதி, இட ஒதுக்கீடு, சமச்சீர் கல்வி, போன்ற முன்னேற்ற அடிப்படையிலான கல்விக் கொள்கைகளை பாதுகாத்து வருவத ஒன்றிய அரசின் இந்த அணுகுமுறைக்கு முக்கிய காரணமாக உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் லட்சக் கணக்கான மாணவர்களின் கல்வி நேரடியாக இந்த நிதி தாமதத்தால் பாதிக்கப்படுகிறது. சமக்ர சிக்‌ஷா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி மூலம் பள்ளிக் கட்டிடங்கள் பராமரிப்பு, கூடுதல் வகுப்பறைகள் அமைத்தல், கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள், ஸ்மார்ட் கிளாஸ் அறைகள், நூலகங்கள், ஆய்வகங்கள், மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கான உதவித் திட்டங்கள், ஆசிரியர் பயிற்சிகள், தற்காலிக ஆசிரியர் நியமனங்கள், பள்ளி விடுப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பணிகள் மேற்ெகாள்ளப்படுகின்றன. இந்த நிதி நிறுத்தம் காரணமாக ஏற்கெனவே பல திட்டங்கள் பாதிக்கப்படுள்ளதாக கல்வியாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

மேலும், அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஏழை மற்றும் ஒதுக்கப்பட்ட சமூக மாணவர்களே இந்த நிதி தாமதம் காரணமாக அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு கிடைக்கும் வசதிகளை அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உறுதி செய்ய வேண்டிய சூழ்நிலையில், கல்வி நிதியை மறுப்பது சமூக அநீதியை மேலும் தீவிரப்படுத்தும். கல்வியில் சமத்துவத்தை உருவாக்க வேண்டிய ஒன்றிய அரசு, அதற்கு மாறாக கல்வி வாய்ப்புகளில் பாகுபாட்டை உருவாக்கும் நிலைக்கு தள்ளியுள்ளது. பிஎம்ஸ்ரீ திட்டம் என்பது வெறும் பள்ளி மேம்பாட்டு திட்டம் மட்டும் அல்ல. புதிய கல்விக் கொள்கையை மாநிலங்களில் கட்டாயப்படுத்தும் மற்றும் அரசியல் மற்றும் நிர்வாகக் கருவியாக அது பயன்படுத்தப்படுகிறது என்ற அச்சம் பல்வேறு கல்வியாளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகளிடையே உள்ளது. தமிழ்நாடு மக்கள் தொடர்ந்து எதிர்த்து வரும் மும்மொழிக் கொள்கை, மையப்படுத்தப்பட்ட பாடத்திட்ட அணுகுமுறை மற்றும் கல்வியின் தனியார்மயப்படுத்தல் போன்ற அம்சங்களை மறைமுகமாக திணிக்க முயற்சிக்கும் எந்த திட்டத்தையும் தமிழ்நாடு ஏற்கக் கூடாது.

தமிழ்நாட்டில் அமைய இருக்கும் புதிய அரசு, எந்த அரசியல் அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காமல் மாநிலத்தின் கல்வி உரிமை மற்றும் மொழி உரிமையை உறுதியாக பாதுகாக்க வேண்டும். நிதிக்காக மாநிலத்தின் கொள்கை, சுயாட்சியை விட்டுக் கொடுப்பது எதிர்கால தலைமுறைகளின் கல்வி உரிமையை பாதிக்கும் அபாயகரமான முன்னுதாரணமாக மாறிவிடும். எனவே, ஒன்றிய அரசு உடனடியாக தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ரூ.2 ஆயிரத்து 151 கோடி கல்வி நிதியை எந்த நிபந்தனையும் இன்றி விடுவிக்க வேண்டும். மாநில உரிமைகளை மீறும் வகையில் கல்வியில் தலையிடும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும். இல்லை என்றால் மாணவர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள், மற்றும் ஜனநாயக இயக்கங்களை ஒன்றிணைத்து மாநிலம் முழுவதும் தீவிர போராட்டங்களை முன்னெடுக்க இந்திய மாணவர் சங்கத்தின் தமிழ்நாடு மாநிலக் குழு தயாராக இருக்கும்.

Tags : TAMIL NADU GOVERNMENT ,BMSRI ,Chennai ,Indian Students' Association ,President ,Miruthula ,Secretary of State ,Samseer Ahmed ,Tamil Nadu ,Union Government ,
× RELATED இன்ஸ்டாகிராம் ரீல் மடைமாற்று...