×

தேர்தல் முடிவு மக்கள் தீர்ப்பல்ல, அது ஒரு சதி; ராஜினாமா செய்ய மாட்டேன்: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி

கொல்கத்தா: ‘மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மக்களின் தீர்ப்பல்ல. அது ஒரு சதி. எனவே, முதல்வர் பதவியை ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை’ என மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் 2 கட்டமாக நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் நேற்று முன்தினம் எண்ணப்பட்டன. இதில், பாஜ 207 தொகுதிகளில் வென்று முதல் முறையாக மேற்கு வங்கத்தில் ஆட்சியை கைப்பற்றி சாதனை படைத்தது. 80 தொகுதிகளில் மட்டுமே வென்ற திரிணாமுல் காங்கிரஸ் தோல்வியை சந்தித்தது. 4வது முறையாக முதல்வராக விரும்பிய மம்தா பானர்ஜி, தனது சொந்த பவானிபூர் தொகுதியில் பாஜ மாநில தலைவர் சுவேந்து அதிகாரியிடம் 2வது முறையாக தோல்வி அடைந்து, அவரது 15 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது.

இந்நிலையில், தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் தோற்ற பிறகும் கூட, மம்தா பானர்ஜி முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுதொடர்பாக அவர் கொல்கத்தாவில் நேற்று நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:
நான் பதவி விலகுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. நான் ஏன் பதவி விலக வேண்டும். நாங்கள் தோற்கவில்லை. மக்கள் தீர்ப்பால் தோற்கடிக்கப்படவில்லை. ஒரு சதியாலேயே தோற்கடிக்கப்பட்டோம். வாக்கு எண்ணிக்கையில் பெருமளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. திரிணாமுல் காங்கிரசின் மன உறுதியை குலைக்கும் உள்நோக்கத்துடன் வேண்டுமென்றே வாக்கு எண்ணிக்கை தாமதப்படுத்தப்பட்டது. சுமார் 100 தொகுதிகளில் வாக்குகள் திருடப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் நாங்கள் போட்டியிட்டது பாஜவுக்கு எதிராக அல்ல. பாஜவுக்கு சாதகமாக செயல்பட்ட தேர்தல் ஆணையத்தை எதிர்த்தே போராடினோம். எனது முழு அரசியல் வாழ்க்கையிலும் இதுபோன்ற ஒரு தேர்தலை நான் கண்டதே இல்லை. வரலாற்றில் கருப்பு அத்தியாயம் உருவாக்கப்பட்டுள்ளது. தலைமை தேர்தல் ஆணையரே வில்லனாக மாறிவிட்டார். ஒன்றிய அமைப்புகளும் அதிகாரிகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டனர். சோதனைகள், இடமாற்றங்கள், பாரபட்சமான நடவடிக்கைகள் ஆகியவை தேர்தல் களத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றி விட்டன. பதவி விலகப் போவதில்லை என்பதே எனது முடிவு. எனினும் அரசியலமைப்பு ரீதியான வாய்ப்புகள் உள்ளன. அவர்கள் அரசியலமைப்பு விதிகளின்படி நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

மம்தா பானர்ஜி 3வது முறையாக மேற்கு வங்க முதல்வராக கடந்த 2021 மே 5ம் தேதி பதவியேற்றார். அதன்படி, அவரது 5 ஆண்டு பதவிக்காலம் இன்றோடு முடிகிறது. இந்த சூழலில் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என மம்தா கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மம்தா வீட்டின் வெளியே பேரிகார்டுகள் அகற்றம்
கொல்கத்தா, ஹரிஷ் சட்டர் சாலையில் முதல்வர் மம்தா பானர்ஜியின் வீடு அமைந்துள்ள பகுதி பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு இரும்பு கேட் போன்ற நிரந்தர பேரிகார்டுகள் அமைக்கப்பட்டிருக்கும். கடந்த 10 ஆண்டாக இருந்த இந்த பேரிகார்டுகளில் பகுதியளவு நேற்று அகற்றப்பட்டது. இதுதொடர்பாக கொல்கத்தா காவல்துறை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடவில்லை. உயரதிகாரிகள் உத்தரவிட்டதால் பேரிகார்டுகளை அப்புறப்படுத்துவதாக காவலர்கள் தெரிவித்தனர். அப்பகுதியில் கட்டுப்பாடுகளும் பெருமளவில் தளர்த்தப்பட்டுள்ளன. இதனால் மக்கள் எந்த சோதனையும் இன்றி அவ்வழியாக நேற்று சென்று வந்தனர்.

இனி போராட்ட அரசியல்
ஆட்சியை இழந்ததைத் தொடர்ந்து, இனி தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை வலுப்படுத்தப் போவதாக மம்தா பானர்ஜி கூறி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘இந்தியா கூட்டணியின் தலைவர்கள் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆதரவை தெரிவித்தனர். சோனியா, ராகுல் காந்தி ஆகியோர் என்னிடம் பேசினார்கள். கெஜ்ரிவால், உத்தவ் தாக்கரே, அகிலேஷ் யாதவ், ஹேமந்த் சோரன் போன்ற தலைவர்களிடம் இருந்தும் அழைப்புகள் வந்தன. இனி தேசிய அளவில் எதிர்க்கட்சி கூட்டணியை வலுப்படுத்துவேன். நான் பதவியில் இருந்தவரை பல விஷயங்களை பொறுத்துக் கொண்டேன். இப்போது நான் சுதந்திர பறவை. சாதாரண மனிதர். இனி போராட்ட அரசியலை கையில் எடுப்பேன். அனைத்து அத்துமீறல்களையும் எதிர்த்து தெருவில் இறங்கி போராடுவேன். தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு அங்குள்ள கள நிலவரத்தை மதிப்பிட 10 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழு அமைப்பேன்’’ என்றார்.

அடுத்து என்ன நடக்கும்?
அரசியலமைப்பு சட்ட நிபுணர்கள் கூறுகையில், ‘‘மம்தா பதவி விலகவில்லை என்றாலும் அது ஒரு பிரச்னையில்லை. எந்த முதல்வர் ராஜினாமா செய்தாலும், புதிய முதல்வர் பதவியேற்கும் வரை, பொறுப்பில் தொடர ஆளுநர் கேட்டுக் கொள்வார். மம்தா பதவி விலகினாலும் அதுதான் நடக்கப் போகிறது. அதே சமயம், 5 ஆண்டு முடிந்த பிறகு யாரும் முதல்வராக நீடிக்க முடியாது. அரசியலமைப்பு சட்டப்படி மே 6 (இன்று) வரை அவர் முதல்வராக நீடிக்கலாம். அதன் பின் தாமாக அவரது பதவி முடிந்து விடும். சட்டப்பேரவையை ஆளுநர் கலைத்த பிறகு முதல்வராக இருக்க முடியாது. மேலும், சட்ட விதிகளை பின்பற்றாததால் அரசை டிஸ்மிஸ் செய்யும் அதிகாரமும் ஆளுநருக்கு உண்டு’’ என்றனர்.

Tags : West Bengal ,Mamta Banerjee ,Kolkata ,West Bengal Legislature ,
× RELATED திரிணாமுல் வேட்பாளரை மிரட்டிய...