×

தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று வாக்கு எண்ணிக்கை முன்னணி நிலவரம் காலை 10 மணிக்கு தெரியும்: வாக்கு எண்ணும் மையங்களில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு

 

சென்னை: தமிழகத்தில் 234 தொகுதிகளில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முன்னணி நிலவரம் காலை10 மணிக்கு தொகுதி வாரியாக தெரிய வரும். வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழகத்தில் உள்ள 234 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக கடந்த ஏப்ரல் மாதம் 23ம் தேதி நடந்தது. தமிழகத்தில் திமுக தலைமையிலான அணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மநீம, மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படை மற்றும் தமிழர் தேசம் கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக தலைமையிலான அணியில் பாஜ, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, ஐஜேகே, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. நடிகர் விஜய்யின் தவெக, சீமானின் நாம் தமிழர் கட்சிகள் தனித்து தேர்தலை சந்தித்தன. மொத்தமுள்ள 234 தொகுதியிலும் 4023 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் 3,579 பேர் ஆண்கள், 443 பேர் பெண்கள், ஒருவர் திருநங்கை ஆவார்.

இந்த தேர்தலில் 5 கோடியே 73 லட்சத்து 43,291 பேர் வாக்களிக்க தகுதி பெற்று இருந்தனர். இதில் 4 கோடியே 87 லட்சத்து 98,833 பேர் வாக்களித்தனர். இது 85.10 சதவீதம் ஆகும். வாக்குப்பதிவு முடிந்ததும் 75,064 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அந்தந்த மாவட்டத்தில் உள்ள வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள ஸ்டாங் ரூமில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் பதிவான வாக்குகள் இன்று (திங்கட்கிழமை) காலை 8 மணிக்கு எண்ணப்படுகிறது. மொத்தம் 62 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகிறது. காலை 8 மணிக்கு தபால் ஓட்டுக்கள் எண்ணப்படும். அதைத் தொடர்ந்து காலை 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கும். அனைத்து சட்டமன்ற தொகுதிகளின் சுற்று வாரியான முடிவுகள் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலரால் அந்தந்த மையங்களில் உள்ள பொது ஒலிபெருக்கி அமைப்பு மூலம் அறிவிக்கப்படும்.

இந்த முடிவுகள் ‘இசிஐ நெட்’ செயலியிலும் பிரதிபலிக்கும். மேலும், முடிவுகளை results.cci.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம். வாக்கு எண்ணும் பணி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் உதவியுடன் மேற்கொள்ளப்படும். வாக்கு எண்ணும் பணிக்காக மொத்தம் 10,545 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் வாக்கு எண்ணும் செயல்முறையின் வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையை உறுதி செய்ய 4,624 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும், ஆணையத்தின் அறிவுறுத்தல்கள் பின்பற்றப்படுவதை உறுதி செய்யவும் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் ஒருவர் என மொத்தம் 234 வாக்கு எண்ணும் பார்வையாளர்களை இந்திய தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. தபால் வாக்குகளை எண்ணுவதற்கு, ஒவ்வொரு 500 வாக்குகளுக்கும் ஒரு வாக்கு எண்ணும் மேஜை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, 1,135 கூடுதல் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. செல்போன்கள் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருட்கள் வாக்கு எண்ணும் அறைகளுக்குள் கொண்டு செல்லப்படாமல் இருப்பதை உறுதி செய்ய கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்படும்.
பாதுகாப்பு ஏற்பாடுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், உள்ளூர் காவல் துறை மற்றும் மாநில ஆயுதப் படையினருடன் கூடுதலாக, மத்திய ஆயுத காவல் படையின் 65 கம்பெனிகள் வாக்கு எண்ணும் மையங்களில் நிறுத்தப்பட உள்ளனர்.

மேலும், முதல்முறையாக, இந்திய தேர்தல் ஆணையம் வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதியற்ற நபர்கள் நுழைவதை தடுக்கும் நோக்கில் இசிஐஎன்இடி மூலம் க்யூஆர் குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்றாவது மற்றும் மிக உட்புற பாதுகாப்பு சாவடியில், க்யூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்து வெற்றிகரமாக சரிபார்த்த பிறகு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த க்யூஆர் குறியீடு அடிப்படையிலான புகைப்பட அடையாள அட்டைகள், வாக்கு எண்ணும் மையங்கள் மற்றும் அறைகளுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவித் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், வாக்கு எண்ணும் பணியாளர்கள், தொழில்நுட்பப் பணியாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள் மற்றும் வாக்கு எண்ணும் முகவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் கட்டாயமாகும். அதே நேரத்தில் வாக்கு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் அதிகாலை 5 மணிக்கு வாக்கு எண்ணும் மையத்துக்கு வரவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கையையொட்டி பாதுகாப்பு பணியில் மட்டும் துணை ராணுவ வீரர்கள், தமிழக போலீசார் என சுமார் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சென்னையை பொறுத்தவரை 20 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அது மட்டுமல்லாமல் முக்கிய அரசியல் கட்சிகளின் அலுவலகங்கள், பொது இடங்கள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

சென்னையை பொறுத்தவரை 16 தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அண்ணா பல்கலைக்கழகம், ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரிகளில் வைக்கப்பட்டுள்ளன. அதாவது ஆர்.கே.நகர், திரு.வி.க.நகர், ராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் ராணிமேரி கல்லூரியிலும், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர், ஆயிரம் விளக்கு, அண்ணாநகர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் லயோலா கல்லூரியிலும், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் கிண்டி அண்ணா பல்கலைக்கழகத்திலும் எண்ணப்படுகிறது. இந்த 3 மையங்களிலும் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு தொடங்கும். காலை 10 மணியளவில் முன்னணி நிலவரம் தெரியும். இதில் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது உறுதி செய்யப்படும். அதே நேரத்தில் தமிழக முதல்வராக யார் அமர போகிறார்கள் என்பதும் தெரிந்து விடும். தேர்தல் முடிவுகளை காண தமிழக மக்கள் முழு ஆர்வத்தில் இருந்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு அசம்பாவித சம்பவங்களை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

Tags : Tamil Nadu ,Chennai ,
× RELATED தமிழ்நாட்டில் 15 இடங்களில் 100 டிகிரி...