சென்னை: பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளுக்கான தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாக உள்ளது. இப்போது இருந்து மேற்படிப்புகள் தொடர்பாக பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். இந்நிலையில் பி.இ. மற்றும் பி.டெக் விண்ணப்பப் பதிவு ஆன்லைனில் தொடங்கியுள்ளது.
மாணவர்கள் இதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்டுள்ள www.tneaonline.org என்ற இணையதளத்தின் வாயிலாகத் தங்கள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கலாம். அரசு ஒதுக்கீடு இடங்களில் சேர்வதற்கான கலந்தாய்வில் பங்கேற்க இன்று முதல் ஜூன் 2 வரை விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பப் பதிவின் போது மாணவர்கள் தங்களின் அடிப்படை விவரங்கள், மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் சாதிச் சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை மின்வருடல் (Scan) செய்து பதிவேற்ற வேண்டும். இணையதள வசதி இல்லாத மாணவர்களுக்காக தமிழ்நாடு முழுவதும் 110 பொறியியல் சேர்க்கை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
1800 425 0110, theacare@gmail.com மூலம் சந்தேகங்களை நிவர்த்தி செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் பதிவு முடிந்தவுடன் மாணவர்களின் கட்-ஆஃப் மதிப்பெண்கள் அடிப்படையில் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, அதன் பின்னரே இணையவழி கலந்தாய்வு (Online Counselling) பல்வேறு சுற்றுகளாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
