×

சபரிமலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை கோயில்களுக்கு நன்கொடையாக தந்தோம்: சென்னை நிறுவன அதிகாரி வாக்குமூலம்

திருவனந்தபுரம்: சபரிமலையில் இருந்து திருடப்பட்ட தங்கத்தை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள கோயில்களுக்கு நன்கொடையாக கொடுத்ததாக சென்னை தனியார் நிறுவன அதிகாரி பங்கஜ் பண்டாரி வாக்குமூலம் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலை சுற்றிலும் பதிக்கப்பட்டுள்ள தங்கத் தகடுகள் திருடப்பட்ட சம்பவம் கேரளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விசாரிக்க கேரள உயர்நீதிமன்றத்தின் நேரடி மேற்பார்வையில் ஒரு சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது.

கேரள குற்றப்பிரிவு ஏடிஜிபி வெங்கடேஷ் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த சிறப்பு புலனாய்வுக் குழு சபரிமலை தங்கம் திருட்டு தொடர்பாக 2 வழக்குகளை பதிவு செய்தது. இந்த வழக்குகளில் சபரிமலையில் இருந்து தங்கத்தை சென்னைக்கு கொண்டு சென்ற உண்ணிகிருஷ்ணன் போத்தி, திருவிதாங்கூர் தேவசம் போர்டின் 2 முன்னாள் தலைவர்கள், முன்னாள் உறுப்பினர்கள், தேவசம் போர்டின் முன்னாள் உயரதிகாரிகள், தங்கத் தகடுகளில் இருந்து தங்கத்தை பிரித்து எடுத்த சென்னை அம்பத்தூர் நிறுவன தலைமை செயல் அதிகாரி பங்கஜ் பண்டாரி உள்பட 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

மூன்று மாத சிறைவாசத்திற்குப் பின்னர் இவர்கள் அனைவரும் தற்போது ஜாமீனில் உள்ளனர். இந்நிலையில் சென்னை நிறுவன தலைமை அதிகாரி பங்கஜ் பண்டாரி சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு அளித்துள்ள வாக்குமூலம் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. சபரிமலையில் இருந்து திருடிய தங்கத்தை தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சில கோயில்களுக்கு நன்கொடையாக வழங்கி உள்ளதாக இவர் தன்னுடைய வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து சிறப்பு புலனாய்வுக் குழு இந்த கோயில்களுக்கு நேரில் சென்று விசாரணை நடத்த தீர்மானித்துள்ளது.

Tags : Sabarimala ,Chennai ,Thiruvananthapuram ,Pankaj Bandari ,Tamil Nadu ,Karnataka ,SABARIMALAI AYAPPAN TEMPLE ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...