×

எடப்பாடியுடன் தம்பிதுரை, வேலுமணி திடீர் சந்திப்பு

சேலம்: தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23ம் தேதி நடந்தது. தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு கடந்த 29ம் தேதி வெளியானது. இதில், தமிழகத்தில் திமுக கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 23ம் தேதி அவரது சொந்த ஊரான சிலுவம்பாளையத்தில் குடும்பத்துடன் வாக்களித்தார். அதன் பிறகு சென்னைக்கு சென்ற அவர், நேற்று முன்தினம் மாலை விமானம் மூலம் சேலம் வந்தார். நெடுஞ்சாலை நகரில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த அவருக்கு மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நிர்வாகிகள், தொண்டர்கள் வரவேற்பளித்தனர்.

இந்நிலையில் நேற்று காலை மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை, நெடுஞ்சாலை நகரில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசினார். அதனை தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியும், எடப்பாடியை சந்தித்தார். அப்போது தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் குறித்து இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது. அதேசமயம், கோவை மாவட்டம் மற்றும் மேற்கு மண்டலத்தில் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு குறித்து எஸ்.பி.வேலுமணியிடம், எடப்பாடி பழனிசாமி கேட்டறிந்ததாகவும் தெரிகிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள், அதிமுக கூட்டணிக்கு எதிராக வந்துள்ள நிலையில், சேலத்தில் உள்ள எடப்பாடி பழனிசாமியை தம்பிதுரை மற்றும் எஸ்.பி.வேலுமணி அடுத்தடுத்து சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Dhambidurai ,Velumani ,Edapadi ,Salem ,Tamil Nadu Assembly elections ,Dimuka ,Tamil Nadu ,
× RELATED சட்டமன்ற தேர்தல் முடிவுகள் குறித்து...