சென்னை: ஜிஎஸ்டி அலுவலகத்தில் இருந்து ரூ.4.70 கோடி கட்ட வேண்டும் என்று கடிதம் வந்துள்ளதாகவும், எனது பான் கார்டு, ஆதார் கார்டை தவறாக பயன்படுத்தி மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கார் டிரைவர் ஒருவர் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் பகுதியை சேர்ந்த கமல்நாதன்(36) என்பவர் நேற்று அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நான் கார் டிரைவராக பணியாற்றி வருகிறேன். தற்போது பணி காரணமாக சென்னை புளியம்பேடு நூம்பல் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். எனது பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு பயன்படுத்தி திருப்பூர் மற்றம் ஓசூர் பகுதியில் எனக்கு முன்பின் அறிமுகம் இல்லாத நபர் எனது பெயரில் ஒரு நிறுவனத்தை தொடங்கி ஜிஎஸ்டி நம்பர் எடுத்து தொழில் செய்து வந்துள்ளார். நான் எந்த தொழிற்சாலையும் நடத்தவில்லை.
இந்நிலையில் எனக்கு ஜிஎஸ்டி அலவலகத்தில் இருந்து ரூ.4,70,89,356 பணம் கட்ட வேண்டும் என்று தபால் வந்துள்ளது. இது தொடர்பாக எனக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. எனது ஆவணங்களை பயன்படுத்தி தவறு செய்தவர்கள் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும். அவர்கள் மீது சட்ட நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என்ற கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
