×

ரத்த காயங்களுடன் லாரி டிரைவர் குளத்தில் சடலமாக மீட்பு

நெட்டப்பாக்கம், ஏப். 30: சேலம் மாவட்டம் ஆத்துார் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (37), லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளது. இவர் கடந்த 26ம் தேதி புதுச்சேரி மாநிலம் பண்டசோழநல்லுார் பகுதியில் இயங்கி வரும் தனியார் பெயிண்ட் கம்பெனிக்கு லாரியில் மூலப்பொருட்கள் ஏற்றி வந்துள்ளார். லாரியை கம்பெனியில் நிறுத்திவிட்டு, நேற்று முன்தினம் இரவு மது அருந்திவிட்டு கம்பெனிக்கு சென்றுள்ளார். அப்போது கம்பெனி செக்யூரிட்டி மது குடித்துவிட்டு கம்பெனிக்குள் வரக்கூடாது என வெளியே அனுப்பியுள்ளனர். வெளியே வந்த செல்வம் மது போதையில் அவ்வழியாக சென்றவர்களை ஆபாசமாக பேசினார்.

இந்நிலையில் நேற்று காலை கம்பெனி எதிரில் உள்ள குளத்தில் செல்வம் இறந்து கிடந்தார். அப்போது அவ்வழியாக சென்ற பொதுமக்கள் நெட்டப்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த இன்ஸ்பெக்டர் கீர்த்திவர்மன், சப்-இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் மற்றும் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த செல்வத்தின் முகம், தாடை, கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரத்தகாயங்கள் இருந்ததால், கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்களை சேகரித்தனர். இதில் உயிரிழந்த செல்வம் ரத்தகாயத்துடன் இறந்து கிடந்ததால் அவரை யாரேனும் அடித்து கொலை செய்து குளத்தில் வீசினார்களா?, அல்லது மதுபோதையில் தானாகவே விழுந்து இறந்தரா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் இது தொடர்பாக சந்தேகத்தின்பேரில் 2 வாலிபர்களை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Nettappakkam ,Selvam ,Athur ,Salem district ,
× RELATED பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் பலி