×

வால்பாறை பகுதியில் மாசோப்சிஸ் மரங்கள் அழிவு எதிரொலி; ஹார்ன்பில் பறவைகள் இடம் பெயர்வு

*சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை

வால்பாறை : வால்பாறையில் மாசோப்சிஸ் மரங்கள் அழிவு எதிரொலியாக ஹார்ன்பில் பறவைகள் இடம் பெயர்வு அதிகரித்து வருகிறது சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு கவலையை அளித்துள்ளது. கோவை மாவட்டம் வால்பாறை பகுதியில் உள்ள சில தனியார் தோட்டங்களில் வளர்ந்திருந்த மாசோப்சிஸ் எமினி (Maesopsis eminii) வகை மரங்கள் பெருமளவில் காய்ந்து அழிந்துள்ளது. இதனால், ஹார்ன்பில் உள்ளிட்ட இருவாச்சி பறவைகளின் வாழ்வியல் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த மரங்களின் திடீர் காய்ந்துவிட்ட நிலை குறித்து பல்வேறு கருத்துகள் நிலவிய நிலையில், மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திற்கு உட்பட்ட வன மரபியல் மற்றும் மர இனப்பெருக்க நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் முக்கிய காரணங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மரங்களின் வேர் பகுதி சேதம், பூஞ்சை தாக்குதல், மண் ஈரப்பத மாற்றம், காலநிலை மாற்றம் ஆகியவை இந்த அழிவுக்கு காரணமாக இருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

மேலும், ஒரே வகை மரங்களை அதிகமாக வளர்த்தல் மற்றும் இயற்கை காட்டு அமைப்பு பாதிப்பு காரணமாகவும் மரங்கள் பலவீனமடைந்துள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.மாசோப்சிஸ் மரங்கள் ஹார்ன்பில் போன்ற பெரிய பறவைகளுக்கு முக்கிய உணவான பழங்களை வழங்கி வந்தன. தற்போது இந்த மரங்கள் அழிந்ததால், வால்பாறை பகுதியில் முன்பு அதிகமாக காணப்பட்ட இருவாச்சி பறவைகள் உணவுக்காக இடம் பெயரத் தொடங்கியுள்ளன.

இதனால், ஹார்ன்பில் பறவைகள் தங்களின் இயல்பான உணவில் இருந்து விலகி, உள்ளூர் காட்டு மரங்களில் கிடைக்கும் பழங்கள் மற்றும் காய்களை நாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பறவைகளின் இந்த உணவு மாற்றம், அவற்றின் வாழ்வியல் பழக்க வழக்கங்களையும், வன சூழலின் இயற்கை சமநிலையையும் பாதிக்கும் அபாயம் இருப்பதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பகம் மானாம்பள்ளி வனச்சரகர் கிரிதரன் கூறுகையில்,‘‘மாசோப்சிஸ் மரங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மரங்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளுடன் உள்ளூர் மர இனங்களை அதிகரிக்கும் முயற்சிகளும் நடைபெற்று வருகிறது’’ என தெரிவித்தார்.

மேலும், மே மாத இறுதியில் உள்ளூர் மரக்கன்றுகள் நடவு பணிகள் தொடங்கப்படவுள்ளதுடன், தென்மேற்கு பருவமழை இதற்கு சாதகமாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். வால்பாறை மற்றும் சுற்றியுள்ள ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் உயிரின வளத்தை காக்க உடனடி நடவடிக்கைகள் அவசியம் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உணவு பழக்கத்தில் மாற்றம் ஏன்?

அண்மைக்காலங்களில் உணவு குறைவு மற்றும் வாழ்வியல் சூழல் மாற்றம் காரணமாக ஹார்ன்பில் பறவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. சில மாதங்களுக்கு முன்பு குஞ்சு பொறித்த ஒரு ஜோடி பறவைகள் தற்போது அதே பகுதியில் தொடர்ந்து காணப்படுகின்றன.

அவற்றுடன் சேர்த்து மொத்தம் 3 பறவைகள் மட்டுமே தற்போது தென்படுகின்றன என உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர். மாசோப்சிஸ் மரங்கள் அழிந்ததால், இப்பறவைகளின் முக்கிய உணவான பழங்கள் குறைந்து, உள்ளூர் மரங்களில் கிடைக்கும் உணவுகளுக்கு மாற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

Tags : Valpará ,Valpara ,Goa district ,
× RELATED கரூரில் மூதாட்டியை கொன்றவர் சென்னையில் கைது