கேங்டாக்: சிக்கிம் மாநிலம் உருவானதன் 50-ஆம் ஆண்டுவிழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். சிக்கிம் மாநிலத்தில் இணைப்பு வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பை மேம்படுத்த அரசு மிக அதிக முன்னுரிமையை அளித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
கேங்டாக்கில் உள்ள பால்ஜோர் மைதானத்தில் நடைபெற்ற, மாநிலத்தின் 50-வது மாநில அந்தஸ்து தினக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவில் பேசிய பிரதமர் மோடி, சிக்கிம் மாநிலத்தை ‘கிழக்கின் சொர்க்கம்’ என்று வர்ணித்தார். மேலும் மாநிலத்தில் சுமார் ரூ.4,000 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி சிக்கிம் மாநிலத்தின் அபரிமிதமான சுற்றுலாத் திறனைச் சுட்டி காட்டியதுடன், மாநில மக்களின் நலனுக்காக இத்தகைய வாய்ப்புகளை முழுமையாக மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதி கொண்டுள்ளதாக கூறினார். அதிலும் குறிப்பாக சிக்கிம் மாநிலம் இயற்கை மற்றும் மரபுசார் வேளாண்மையில் அடைந்துள்ள வெற்றி, நாடு முழுவதுமுள்ள மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்வதாகவும் குறிப்பிட்டார்.
சிக்கிம் மாநில இளைஞர்களை பாராட்டி பேசிய பிரதமர், கால்பந்து, குத்துச்சண்டை மற்றும் வில்வித்தை போன்ற விளையாட்டுத் துறைகளில் சிக்கிம் இளைஞர்கள் பரந்த அளவில் தங்கள் திறமையை வெளிப்படுத்தியுள்ளதாக பெருமிதம் தெரிவித்து உள்ளார். Khelo India மற்றும் Fit India Movement போன்ற முன்னெடுப்புகள், இளைஞர்கள் தங்கள் திறன்களை வளர்த்து கொள்ள வாய்ப்புகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். மேலும் மாநிலம் முழுவதும் மிக சிறந்த தூய்மையை பேணிவரும் சிக்கிம் மக்களை பிரதமர் மோடி வெகுவாக பாராட்டினார். தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி நாட்டின் வடகிழக்குப் பகுதியை நாட்டின் அஷ்டலட்சுமி என்று குறிப்பிட்டார். இந்த பகுதிகளில் தற்போது நடைபெற்று வரும் மற்றும் வரவிருக்கும் திட்டங்கள் அப்பகுதி மக்களின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்றார்.
இந்த நிகழ்வின் போது ரூ.4,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார். மேலும் பிரதமர் 6 கிரிக்கெட் அகாடமிகளுக்கான அடிக்கல்லையும் நாட்டினார். வடகிழக்கு மற்றும் சிக்கிமில் தற்போது பாஜக அரசு சாதித்து வரும் விஷயங்களை சில ஆண்டுகளுக்கு முன்பே சாதித்திருக்க முடியும். ஆனால் தொடர்ச்சியாக ஆட்சி செய்த அரசுகள் சிக்கிமின் வளர்ச்சியைத் தொடர்ந்து தடுத்து வந்ததாக பிரதமர் சாடினார்.
போக்குவரத்து வசதியை மேம்படுத்தவும் சுற்றுலாவை ஊக்குவிக்கவும் முக்கியத்துவம் அளித்து வருவதாக குறிப்பிட்ட மோடி, பாக்டோக்ரா விமான நிலையத்தை கேங்டாக்குடன் இணைக்கும் வகையில் ஒரு விரைவுச்சாலை அமைக்கும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மொழி மற்றும் பிராந்திய ரீதியாக நாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த காலகட்டத்தில், சிக்கிம் மாநிலம் ‘ஏக் பாரத், ஷ்ரேஷ்ட பாரத்’ (ஒரே பாரதம், உன்னத பாரதம்) எனும் கருத்தாக்கத்தைப் பிரதிபலிப்பதாக குறிப்பிட்டு பேசிய பிரதமர் மோடி தேசிய ஒற்றுமை குறித்தும் உரையாற்றினார்.
அரசியல் ஆதாயங்களுக்காகப் பிளவு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த தருணத்தில் ஒரே பாரதம், உன்னத பாரதம் எனும் தொலைநோக்குப் பார்வையின் உண்மையான ஒரு காட்சியைச் சிக்கிம் அளித்துள்ளது என்று கூறிய பிரதமர், இவ்விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சிகளையும் வெகுவாக பாராட்டி பேசினார். வரும் ஆண்டுகளில் சிக்கிம் மாநிலத்திற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சாதனை அளவை எட்டும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.
