×

கூத்தாண்டவர் கோயில் திருவிழா கோலாகலம்; இன்று மிஸ் கூவாகம் அழகி போட்டி: விழுப்புரத்தில் திருநங்கைகள் குவிந்தனர்

 

விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த கூவாகத்தில் உள்ள கூத்தாண்டவர் கோயிலில் இந்தாண்டுக்கான சித்திரை திருவிழா கடந்த 14ம் தேதி கோயில் அருகில் உள்ள மாரியம்மனுக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் மகாபாரத சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான சுவாமி திருக்கண் திறத்தல் நிகழ்ச்சி வரும் 28ம்தேதி நடக்கிறது. அன்று தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா மற்றும் பல்வேறு நாடுகளில் இருந்து வரும் திருநங்கைகள் கோயில் பூசாரி கையால் தாலி கட்டிக்கொண்டு உற்சாகத்துடன் ஆடிப்பாடி மகிழ்வார்கள். மறுநாள் (29ம்தேதி) கூத்தாண்டவர் தேரோட்டம் நடக்கிறது. இதன்பிறகுஅரவான் களப்பலி நிகழ்ச்சி, திருநங்கைகள் தாலி அறுத்து, வளையல் உடைத்து விதவைக்கோலம் பூண்டு சோகத்துடன் தங்கள் ஊருக்கு திரும்புவார்கள்.

வரும் 30ம் தேதி விடையாத்தியும் மே 1ம்தேதி தர்மர் பட்டாபிஷேகத்துடன் 18 நாள் சித்திரை திருவிழா நிறைவு பெறுகிறது. கூத்தாண்டவர் திருவிழாவை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, மும்பை, கொல்கத்தா, டெல்லி மற்றும் ஸ்ரீலங்கா, இங்கிலாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் திருநங்கைகள் விழுப்புரத்தில் குவிந்து வருகின்றனர். அவர்கள் தங்களுக்கு விருப்பமான உடை அணிந்து, அழகுபடுத்திக்கொண்டு சாலைகளில் ஒய்யாரமாக வலம் வருகின்றனர்.

தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு தலைவர் ஜீவா அம்மன்நாயக் கூறுகையில், ‘’திருநங்கைகளின் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தேசிய திருநங்கைகள் கூட்டமைப்பு மற்றும் சென்னை தொண்டு நிறுவனங்கள் சார்பில் இன்று (26ம்தேதி) மாலை விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள நகராட்சி திடலில் மிஸ் கூவாகம்- 2026 அழகிப்போட்டி மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. முதலில் தமிழக அரசுக்கு சார்ந்த நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு பின்னர் தமிழக திருநங்கைகளின் அணி வகுப்பு, மிஸ் கூவாகம் திருநங்கை – 2026 தேர்வு, நடன நிகழ்ச்சிகள், கிராமிய நடனங்கள் உள்ளிட்டவைகள் நடைபெறுகிறது’’ என்றார்.

 

Tags : Kothantawar Temple Festival Kolakalam ,Miss Gowakam Brunette Contest ,Viluppuram ,Chitra Festival ,Kothantawar Temple ,Kallakurichi District, ,Ulundurpet ,
× RELATED மீன்பிடி தடைகாலம் எதிரொலி; விசை படகுகள், வலைகள் சீரமைப்பு