×

மனைவியை வேலைக்கு அனுப்பியதால் ஆத்திரம் தாத்தா-பாட்டி வெட்டி கொலை: வாலிபர் வெறிச்செயல்

கல்வராயன்மலை: தன்னிடம் கோபித்துக்கொண்டு வந்த மனைவியை வேலைக்கு அனுப்பிய தாத்தா-பாட்டியை வாலிபர் சரமாரி வெட்டி கொன்ற சம்பவம் கல்வராயன்மலையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள பெருமாநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (65). இவரது மனைவி பொன்னம்மாள் (63). இவர்கள், விவசாய நிலத்தில் கொட்டகை அமைத்து தங்கி விவசாயம் செய்து வந்தனர். ராமசாமியின் மகன் குப்புசாமி, மருமகள் ஆகியோர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டனர். இவர்களது மகள் மேகலா, தாத்தா, பாட்டி அரவணைப்பில் இருந்து வந்தார்.

இதற்கிடையே கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சேராப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஆண்டி மகன் சதீஷ் (27) என்பவரை, மேகலாவுக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். சதீஷ் அடிக்கடி மது குடித்துவிட்டு, மேகலாவுடன் தகராறில் ஈடுபடுவாராம். இதனால் கோபித்துக்கொண்டு அவர் தாத்தா வீட்டுக்கு சென்றுவிடுவார். சில நாட்களுக்கு பின் சதீஷ், அங்கு சென்று சமாதானம் செய்து மனைவியை அழைத்து வந்து குடும்பம் நடத்தி வந்தார். இதேபோல் சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மேகலா, மீண்டும் தாத்தா ராமசாமி வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்நிலையில் நேற்று அவரை சமாதானம் செய்து அழைத்து வருவதற்காக சதீஷ் சென்றுள்ளார். ஆனால் அங்கு மேகலா இல்லை. அவர், திருப்பூர் ஆயத்த ஆடை தயாரிக்கும் நிறுவனத்தில் வேலைக்கு சென்றுள்ளதாக தாத்தா ராமசாமி தெரிவித்துள்ளர். போதையில் வந்திருந்த சதீஷ், என் மனைவியை யாரை கேட்டு வேலைக்கு அனுப்பினீர்கள். ஆரம்பத்தில் இருந்தே எங்கள் குடும்ப வாழ்க்கையில் தலையிட்டு, பிரச்னை செய்வதாக கூறி, ராமசாமியை கடுமையாக தாக்கியுள்ளார். கையில் வைத்திருந்த கரும்பு வெட்டும் கத்தியால், ராமசாமி தலை, முகம் என பல இடங்களில் சரமாரியாக வெட்டினார். தடுக்க வந்த பொன்னம்மாளையும் தலையில் வெட்டினார். இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தனர். பின்னர் அங்கிருந்து சதீஷ் தப்பியோடிவிட்டார். இது தொடர்பாக கரியாலூர் போலீசார் வழக்கு பதிந்து சதீசை தேடி வருகின்றனர். குடும்ப பிரச்னையில் தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

* மகள் கொலைக்கு பழிக்குப்பழி வாலிபரை வெட்டி கொன்ற மாஜி ஊராட்சி தலைவர்
தஞ்சை அருகே பிராந்தை கிராமத்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி(53). ஆலங்குடி முன்னாள் ஊராட்சி தலைவர். இவரது மகள் காவியா(26). ஆலங்குடி அரசு ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றி வந்தார். மேலகளக்குடியை சேர்ந்த பெயின்டர் அஜித்குமாரும்(30) காவியாவும் காதலித்து வந்தனர். காவியாவின் பெற்றோருக்கு அஜித்குமாரை பிடிக்காததால் அவருக்கு உறவுக்காரரின் மகனை திருமணம் செய்ய நிச்சயதார்த்தம் நடத்தினர். அந்த போட்டோக்களை அஜித்குமாருக்கு காவியா அனுப்பினார். ஆத்திரமடைந்த அஜித்குமார் கடந்த ஆண்டு நவ.27ம் தேதி காலை பள்ளிக்கு வந்த காவியாவை வழிமறித்து, கத்தியால் சரமாரி குத்தி கொலை செய்தார். இது குறித்து அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து அஜித்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கடந்த மாதம் அஜித்குமார் ஜாமீனில் வெளியே வந்தார். இதையறிந்த காவியாவின் தந்தை புண்ணியமூர்த்தி, உறவினரான லோகேஷ்(22), ராமலிங்கம்(30), கருப்பையா(55) ஆகியோருடன் நேற்று அதிகாலை 2 மணிக்கு, அஜித்குமார் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டிருந்த அவரை அரிவாளால் சராமாரியாக வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் அரிவாளுடன் 4 பேரும் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்தனர். இதுகுறித்து மெலட்டூர் போலீசார் வழக்கு பதிந்து புண்ணியமூர்த்தி உள்பட 4 பேரையும் கைது செய்தனர். மகள் கொலைக்கு பழிக்கு பழியாக சிறையிலிருந்து ஜாமீனில் வந்த வாலிபரை தந்தை படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kalvarayanmalai ,Ramasamy ,Perumanatham ,Kalvarayanmalai, Kallakurichi district ,Ponnammal ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை