×

காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட்டில் பயங்கரம்; சுமை தூக்கும் தொழிலாளி சரமாரி வெட்டிக்கொலை: 2 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரம்

 

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை செய்யப்பட்டுள்ளார். கொலையாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் பகுதியில் ராஜாஜி காய்கறி மார்க்கெட் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் உள்ளன. தினமும் ஏராளமான பொதுமக்கள், இங்கு வருகை தந்து காய்கறிகளை வாங்கி செல்வார்கள். விசேஷ தினங்களில் கூட்டம் அலைமோதும். ஏராளமான லாரி, வேன்களில் காய்கறிகள் வரத்தும் இருக்கும். அந்த வகையில் இங்குள்ள கடைகளுக்கு வரும் காய்கறி மூட்டைகளை இறக்க 15க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளனர். இந்த பணியில் காஞ்சிபுரம் பகுதியை சேர்ந்த முரளி என்பவரும் ஈடுபட்டு வந்துள்ளார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்தது.

தனது மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக முரளி மார்க்கெட்டில் தங்குவதை வழக்கமாக வைத்திருந்தாராம். இந்நிலையில், நேற்று மாலையில் வேலை முடிந்ததும் மது அருந்திவிட்டு காய்கறி மார்க்கெட் அருகே வந்துள்ளார். சிறிது நேரத்தில் ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே சாய்ந்தார். இதை பார்த்ததும் அங்கிருந்த வியாபாரிகள், பொதுமக்கள் ஓடி வந்து பார்த்தனர். அப்போதுதான், முரளியின் தலையில் 3 இடங்களில் வெட்டு காயங்கள் இருந்தது தெரியவந்தது. உடனே விஷ்ணுகாஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர் சங்கரசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்த்தபோது அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தினர். இதில், கணவன்-மனைவி இடையே சொத்து பிரச்னை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அதன் காரணமாகத்தான் இந்த கொலை நடந்ததா அல்லது மது அருந்தும்போது ஏற்பட்ட பிரச்னையில் கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு டிஎஸ்பி சங்கர் கணேஷ் விரைந்து வந்து ஆய்வு நடத்தினார். 2 தனிப்படை அமைத்து கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். காஞ்சிபுரம் மார்க்கெட் பகுதியில் சுமை தூக்கும் தொழிலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Kancheepuram Rajaji Market ,Saramari Massacre ,Kanchipuram ,Rajaji Market ,Rajaji Vegetable Market ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை