×

இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு ஹால் டிக்கெட் நாளை வெளியீடு

 

புதுடெல்லி: தேசிய தேர்வு முகமை நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டை நாளை வெளியிடுகிறது.மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத் தேர்வை ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இதற்கான தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் அடங்கிய ‘சிட்டி இன்டிமேஷன் ஸ்லிப்’ ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தமிழகம் மற்றும் நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தத் தேர்விற்காக (இளங்கலை மருத்துவப் படிப்பு) தயாராகி வருகின்றனர். வரும் மே 3ம் (ஞாயிற்றுக்கிழமை) தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை இந்தத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

சமூக வலைதளங்களில் பரவும் வினாத்தாள் கசிவு போன்ற தவறான வதந்திகளை மாணவர்கள் நம்ப வேண்டாம் என்று அதிகாரிகள் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, நாளை (ஏப். 26) மதியம் 3 மணிக்கு மேல் நீட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளது. மாணவர்கள் தங்களது விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை பயன்படுத்தி இணையதளத்தில் நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ‘பதிவிறக்கம் செய்த ஹால்டிக்கெட்டில் புகைப்படம், கையெழுத்து மற்றும் தேர்வு மைய முகவரி சரியாக உள்ளதா என்பதை மாணவர்கள் சரிபார்க்க வேண்டும்.

ஏதேனும் தவறுகள் இருந்தால் உடனடியாக உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் குறைந்தபட்சம் 4 பிரதிகளை கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், செல்போன் போன்ற மின்னணு சாதனங்களில் உள்ள டிஜிட்டல் ஹால்டிக்கெட்கள் தேர்வு மையத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags : NEET ,New Delhi ,National Testing Agency ,Union Government ,
× RELATED தமிழகம் முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் ட்ரோன் பறக்க தடை