×

ஆயுதமேந்திய குழுக்கள் மோதல் மணிப்பூரில் துப்பாக்கி சண்டை: 3 பேர் பலி

இம்பால்: மணிப்பூரில் நேற்று நடந்த இரட்டை துப்பாக்கி சூடு சம்பவங்களில் 3 பேர் கொல்லப்பட்டனர். மணிப்பூரில் தற்போது மெய்டீஸ் இனத்தை சேர்ந்த யும்னம் கெம்சந்த் சிங் தலைமையில் பாஜ ஆட்சி செய்து வருகிறது. இங்குள்ள பிஷ்ணுபூர் மாவட்டத்தில் மொய்ராங் ட்ராங்லாபி பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது கடந்த 7ம் தேதி மர்ம நபர்கள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த 5 வயது சிறுவனும், அவரது சகோதரியும்(6 மாத குழந்தை) கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகள் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் மணிப்பூரில் நேற்று இரண்டு வெவ்வேறு துப்பாக்கி சூடு சம்பவங்கள் அரங்கேறி உள்ளன. டாங்குல் நாகா இனத்தினர் பெரும்பான்மையாக வசிக்கும் உக்ருல் மாவட்டம் முல்லம் மற்றும் ஷோங்பெல் கிராமங்களுக்கிடையே உள்ள பகுதியில் நேற்று அதிகாலை 5.30 மணிக்கு ஆயுதமேந்திய இரண்டு குழுக்கள் பயங்கரமாக மோதி கொண்டன.

அப்போது அங்கிருந்த சில வீடுகளும் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து அங்கு பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டனர். அப்போது காலை 11.25 மணிக்கு எல்.சிட்லவ் மற்றும் பி.ஹாலாய் ஆகியோரது உடல்கள் மீட்கப்பட்டன.

இதேபோல், உக்ருல் மாவட்டத்தின் சினகேய்தெய் கிராமத்துக்கு அருகே ஆயுதமேந்திய குழுக்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காம்ஜோங் மாவட்டத்தின் சாட்ரிக் குல்லான் பகுதியை சேர்ந்த எச்.ஜமாங் என்பவர் சுட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவங்களை கண்டித்து பல்வேறு இனத்தை சேர்ந்த அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. மேலும் இதுகுறித்து உடனடி விசாரணை நடத்தி, குற்றவாளிகளை கைது செய்யவும் வலியுறுத்தி உள்ளன.

Tags : Manipur ,Imphal ,BJP ,Yumnam Khemchand Singh ,Meadee ,Moirang Tranglabi ,Bishnupur district ,
× RELATED இந்திய ரயில்வேயில் இரண்டு சதவீதம் பணியாளர்களை குறைக்க உத்தரவு!