×

திருவாரூர் சொரக்குடியில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் இளைஞர்கள் பயன்பெற அமைச்சர் காமராஜ் வேண்டுகோள்

திருவாரூர், பிப்.24: திருவாரூர் அருகே சொரக்குடியில் நாளை நடைபெறும் தனியார் வேலைவாய்ப்பு முகாமினை இளைஞர்கள் கலந்துகொண்டு பயன்படுத்திக்கொள்ளுமாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: திருவாரூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கத்தோடு தமிழக அரசின் சார்பில் திருவாரூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஆகியவைகளின் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் நாளை (25ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்த மாபெரும் வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட இளைஞர்களுக்கு பணி ஆணைகள் அன்றைய தினமே வழங்கப்பட உள்ளது. மேலும் இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனை துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர். மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். உயர் கல்வி, சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கிக் கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்ட உள்ளனர்.

இத்தனியார் துறை முகாமில் 8ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித் தகுதியுடைய 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை தேடும் இளைஞர்கள், இளம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தங்களது சுய விபரக் குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் கலந்துகொண்டு பயன் பெறலாம்.  இம்மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் மூலம் ஒரே இடத்தில், பல்வேறு நிறுவனங்களால் நடத்தப்படும் நேர்காணலில் கலந்துகொண்டு தாங்கள் விரும்பும் வேலைவாய்ப்பினை பெற இது நல்ல வாய்ப்பு என்பதால் திருவாரூர் மாவட்ட இளைஞர்கள் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு வேண்டுகிறேன். இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

Tags : Minister ,Kamaraj ,Thiruvarur Sorakkudi ,
× RELATED காமராஜர் பல்கலை துணைவேந்தர் ராஜினாமா