×

சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாரின் தூக்குத் தண்டனையை உறுதி செய்ய ஐகோர்ட்டில் சிபிஐ மனு: மேல் முறையீடுக்கு கால அவகாசம்

மதுரை: சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் 9 போலீசாருக்கு தூக்குத் தண்டனை வழங்கிய உத்தரவை உறுதி செய்யக் கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் சிபிஐ, தமிழ்நாடு அரசு தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், அதே ஊரில் செல்போன் கடை வைத்திருந்தனர். இருவரும் கடந்த 2020, மார்ச் மாதம் கொரோனா காலத்தில், விதிமுறைகளை மீறி கடையை அதிக நேரம் திறந்து வைத்ததாக சாத்தான்குளம் போலீசார் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு போலீசார் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ கொலை வழக்காக மாற்றி, ஆய்வாளர் ஸ்ரீதர் உட்பட 9 போலீசாரை கைது செய்தனர். அனைவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதொடர்பான வழக்கை மதுரை முதலாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் விசாரித்து கடந்த ஏப். 6ம் தேதி, 9 போலீசாருக்கும் தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனையை உறுதிப்படுத்தக் கோரி, சிபிஐ மற்றும் தமிழ்நாடு அரசு தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் என்.ஆனந்த வெங்கடேஷ், கே.கே.ராமகிருஷ்ணன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் உள்ள 9 பேரும் காணொலி மூலம் ஆஜராகினர். முதல் குற்றவாளியான ஸ்ரீதர், ‘‘இந்த வழக்கில் என் தரப்பில் நானே ஆஜராகி வாதிடுகிறேன். எங்களுக்கு தண்டனை வழங்கிய தீர்ப்பு தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படவில்லை’’ என்றார். அப்போது நீதிபதிகள், ‘‘தீர்ப்பு நகலை வைத்து முதலில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யுங்கள். அதன்பிறகு தேவையான ஆவணங்கள் வழங்கப்படும். இதற்காக மேல்முறையீடு செய்ய காலஅவகாசம் வழங்கப்படுகிறது’’ எனக் கூறி விசாரணையை வரும் 30ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Tags : CBI ,Sathankulam ,Madurai ,Court ,Tamil Nadu government ,Jayaraj ,Sathankulam, Thoothukudi district ,
× RELATED திண்டுக்கல் நத்தம் அருகே தென்னை நார் குடோனில் தீ விபத்து