சேலம்: சேலம் மாவட்டம் ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொம்புதூக்கி மலைக்கிராமத்தில் மொத்தமுள்ள 301 வாக்காளர்களும் வாக்களித்து, 100 சதவீத வாக்குப்பதிவு நிகழ்த்தியுள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக வாக்குப்பதிவு நேற்று முன்தினம் ஒரேகட்டமாக நடந்து முடிந்தது. மாநிலம் முழுவதும் 85.16 சதவீத வாக்குகள் பதிவானது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 11 சட்டமன்ற தொகுதிகளில் 90.74 சதவீதம் வாக்குப்பதிவு நடந்தது. இது கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை காட்டிலும் 7.94 சதவீதம் அதிகம்.
இதனிடையே, சேலம் மாவட்ட அளவில் மட்டுமின்றி, மாநில அளவிலும் வீரபாண்டி சட்டமன்ற தொகுதியில் 93.4 சதவீதம் வாக்குகள் பதிவாகி முதலிடம் பிடித்துள்ளது. சேலம் மாவட்டத்தில் குறைந்தபட்சமாக சேலம் வடக்கு தொகுதியில் 87.4 சதவீத வாக்குகள் பதிவானது. இதில் சுவாரஸ்யமாக ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொம்புதூக்கி மலைக்கிராமத்தில் 100 சதவீத வாக்கு பதிவாகியுள்ளது. அந்த வாக்குச்சாவடியைச் சேர்ந்த மொத்தமுள்ள 301 வாக்காளர்களும் வாக்களித்து, 100 சதவீத வாக்குப்பதிவு சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஏற்காடு சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை, 1,33,706 ஆண் வாக்காளர்கள், 1,39,105 பெண் வாக்காளர்கள், 18 திருநங்கைகள் உள்பட மொத்தம் 2,72,829 வாக்காளர்கள் உள்ளனர்.
இதில் நேற்று முன்தினம் நடந்த தேர்தலில் 2,51,080 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். ஏற்காடு தொகுதியின் வாக்குப்பதிவு 92.03 சதவீதம். இதில், ஏற்காடு மலைக்கிராமத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளும் ஏற்காடு தாலுகாவிற்குள் அமைகிறது. அதன்படி ஏற்காடு தாலுகாவில் உள்ள 49 வாக்குச்சாவடிகளில் 30,347 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், 94 சதவீதம் பேர், அதாவது 28,478 வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். அதிகபட்சமாக ஏற்காடு கொம்புதூக்கி மலைக்கிராமத்தில் அரசு பழங்குடியினர் உண்டு, உறைவிடப்பள்ளி வாக்குச்சாவடியில் 160 ஆண்கள், 141 பெண்கள் என மொத்தம் 301 பேர் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. வாக்குப்பதிவு நிறைவடையும் நேரத்தில், அந்த வாக்குச்சாவடியில் உள்ள அனைத்து வாக்குகளும் பதிவானது. ஒரே கிராமத்தை சேர்ந்த 301 வாக்காளர்களும் தவறாமல் வந்து தங்களது ஜனநாயக கடமையாற்றியுள்ளனர். இதனால் அப்பகுதியினருக்கு தேர்தல் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
