×

பக்தர்களின் வழிபாட்டு முறையில் தலையிட முடியாது; தெய்வ நம்பிக்கையை சோதிப்பது நீதிமன்றத்தின் வேலையல்ல: சபரிமலை வழக்கில் 9 நீதிபதிகள் அமர்வு அதிரடி கருத்து

 

புதுடெல்லி: கோயில்களில் பக்தர்கள் கடைபிடிக்கும் பாரம்பரிய வழிபாட்டு முறைகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என உச்சநீதிமன்றத்தின் 9 நீதிபதிகள் அமர்வு தெரிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி ஏற்கனவே நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்புக்கு எதிராகப் பல்வேறு தரப்பினர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மற்றும் மதம் சார்ந்த உரிமைகள் குறித்த வழக்குகள்மீது உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. ஏற்கனவே நடந்த விசாரணையின்போது,’இந்து மதத்தில் ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு கிராம தேவதை, ஒவ்வொரு குடும்பத்திற்கும் குல தெய்வம் மற்றும் இஷ்ட தெய்வம் எனப் பல்வேறு வழிபாட்டு முறைகள் நீண்டகாலமாகப் பின்பற்றப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு விதமான வழிபாட்டு முறையைப் பின்பற்றும் சூழலில், அவை மதம் சார்ந்த இன்றியமையாத நடைமுறைகளா என்பதை நீதிமன்றம் முழுமையாக ஆய்வு செய்வது சாத்தியமற்றது’ என மூத்த வழக்கறிஞர் ஜே.முத்து ராஜ் தனது வாதத்தில் முன்வைத்திருந்தார்.

இந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, எம்.எம். சுந்தரேஷ், அஹ்சானுத்தீன் அமானுல்லா, அரவிந்த் குமார், ஏ.ஜி. மாசிஹ், பி.பி.வரலே, ஆர்.மகாதேவன் மற்றும் ஜே. பக்சி ஆகிய 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ஒரு பக்தர் தனது கடவுளை எந்த முறையில் வழிபட வேண்டும் என்பதை முடிவு செய்வது அந்த நபரின் புனிதமான உரிமை. இதில் நீதிமன்றம் தலையிட முடியாது. மனசாட்சி மற்றும் நம்பிக்கை என்பது ஒரு தனிநபரின் அந்தரங்கமான விஷயம். ஒரு விசுவாசியை விசுவாசி அல்லாதவரிடமிருந்து அரசியலமைப்பு சட்டப்பிரிவு 25 பாதுகாக்கிறது. வழிபாட்டு முறை என்பது பக்தருக்கும் கடவுளுக்கும் இடையிலான அந்தரங்கமான விஷயம் என்பதால் அதற்கு குறுகிய அர்த்தத்தை வழங்கி விட முடியாது.

நம்பிக்கையின் செல்லுபடியாகும் தன்மையை ஒருபோதும் சோதிக்க முடியாது’ என்று தெரிவித்தனர். சபரிமலை போன்ற கோயில்களில் நீண்டகாலமாகப் பின்பற்றப்படும் பழக்கவழக்கங்கள் நம்பிக்கையின் அடிப்படையில் அமைந்தவை என்றும், அவை நீதிமன்ற ஆய்வுக்கு உட்பட்டவை அல்ல என்றும் மூத்த வழக்கறிஞர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தை முன்வைத்தனர். மதப் பழக்கவழக்கங்களில் நீதிமன்றங்களின் தலையீடு மற்றும் அத்தியாவசிய மத நடைமுறைகள் குறித்த வாதங்களை நீதிபதிகள் கேட்டு வருகின்றனர். இந்த விசாரணை ஏப்ரல் மாத இறுதிக்குள் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags : NEW DELHI ,SUPREME ,COURT ,Sabarimala Ayyappan Temple ,
× RELATED தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு...