நன்றி குங்குமம் டாக்டர்
இந்தியாவில் மிகவும் பொதுவாகக் காணப்படும் ஹார்மோன் சம்பந்தமான பிரச்சனைகளில் தைராய்டு பிரச்னையும் ஒன்றாக உள்ளது. சுமார் 4 கோடியே 20 லட்சம் இந்தியர்கள் ஏதேனும் ஒரு வகை தைராய்டு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.
தேசிய குடும்ப நல ஆய்வு தரவுகளின்படி, தாங்களாகவே தெரிவிக்கும் தைராய்டு அல்லது காய்டர் பாதிப்பு 2019-21ல் 2.9% ஆக அதிகரித்துள்ளது. இதில் ஆண்களை விட பெண்களே அதிகளவில் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தைராய்டு பிரச்னை எதனால் வருகிறது. அதற்கான சிகிச்சை முறைகள் என்ன என்பதை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவர் கீர்த்தனா ராஜசேகரன்.
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியில் அமைந்துள்ள, பட்டாம்பூச்சி போன்று இருக்கும் ஒரு சிறிய சுரப்பி ஆகும். இது சிறியதாக இருந்தாலும், நம் உடல் சீராக இயங்குவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இது நமது வளர்சிதை மாற்றம், ஆற்றல் அளவு, இதயத் துடிப்பு, உடல் வெப்பம் மற்றும் முழுமையான வளர்ச்சியைப் பராமரிக்கத் தேவையான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்தச் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை என்றால், அதன் பாதிப்பை உடல் முழுவதும் உணர முடியும்.
தைராய்டை பொருத்தவரை, வயதும் முக்கியப்பங்கு வகிக்கிறது. தேசிய குடும்ப நல ஆய்வு தரவுகளின்படி, பெண்களுக்கு வயது அதிகரிக்கும் போது தைராய்டு கோளாறுகளும் அதிகரிக்கின்றன. 15 முதல் 19 வயதுக்குட்பட்ட பெண்களிடம் 0.7 சதவீதமாக இருக்கும் பாதிப்பு, 35 முதல் 49 வயதுடையவர்களிடம் 3.4 சதவீதமாக உயர்கிறது. வயதாக வயதாக, குறிப்பாகப் பெண்களுக்கு, தைராய்டு பிரச்னைகள் வருவது அதிகம் ஏற்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
தைராய்டை பொருத்தவரை நான்கு வகைகளாகப் பிரிக்கப்படுகிறது. அதாவது ஹைப்போ தைராய்டிசம், ஹைப்பர் தைராய்டிசம், தைராய்டு முடிச்சுகள், காய்டர் ஆகும்.
ஹைப்போதைராய்டிசம் (குறைந்த சுரப்பு: வயதானவர்களிடம் இது மிகவும் பொதுவாகக் காணப்படுகிறது. இதில் சுரப்பி குறைவான ஹார்மோன்களைச் சுரக்கும், இதனால் உடல் செயல்பாடுகள் மந்தமாகும்.
ஹைப்பர்தைராய்டிசம் (அதிக சுரப்பு): ஹைப்பர்தைராய்டிசம் என்பது தைராய்டு சுரப்பியின் அதீத செயல்பாட்டால், தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தி அதிகரிக்கிறது. இதனால், உடலின் இயல்பான செயல்பாடுகள் வழக்கத்தைவிட வேகமாக முடுக்கிவிடப்படுகின்றன. உடலில் குறிப்பிடத்தக்க ஹார்மோன் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு நோயாளிகள் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்ள தொடங்கும் வரை, இந்த நோய் பொதுவாக எளிதாக கண்டறியப்படுதில்லை. அடிப்படையில், ஆற்றலை நமது உடல் பயன்படுத்தும் வழிமுறையை இந்த தைராய்டு சுரப்பிதான் முழுமையாக கட்டுப்படுத்துகிறது.
தைராய்டு சுரப்பி மிக வேகமாக வேலை செய்யத் தொடங்கும்போது மற்றும் அளவுக்கதிகமாக எதிர்வினையாற்றும்போது, பொதுவாக நன்கு ஒழுங்கமைப்புடன் இயங்கும் நமது உடலின் செயல்பாடுகள் தீவிரமாக முடுக்கிவிடப்பட்டு அவற்றின் வேகம் அதிகரிக்கிறது
தைராய்டு முடிச்சுகள்: இவை தைராய்டு சுரப்பியில் தோன்றும் சிறிய கட்டிகள் ஆகும். 50 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் இது அதிகம் காணப்படும். பெரும்பாலும் இவை ஆபத்தற்றவை, ஆனால் மருத்துவ பரிசோதனை செய்வது கட்டாயமாகும்.
காய்டர்: இது தைராய்டு சுரப்பியின் வீக்கம் ஆகும். அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துவதால் அயோடின் குறைபாடு குறைந்திருந்தாலும், சில பகுதிகளில் காய்டர் இன்னும் காணப்படுகிறது.
அறிகுறிகள்
தைராய்டு அறிகுறிகள் பெரும்பாலும் சாதாரண சோர்வு அல்லது வயது முதிர்வு தொடர்பான பிரச்சனைகளைப் போலவே இருப்பதால், பலர் இதைக் கவனிக்கத் தவறுகிறார்கள். இவற்றை முன்கூட்டியே கண்டறிவது மூலம் பாதிப்பை வெகுவாக குறைக்க முடியும்.
ஹைப்போ தைராய்டிசம் அறிகுறிகள்
*சோர்வு
*உடல் எடை அதிகரிப்பு
*வழக்கத்திற்கு மாறாகக் குளிர் எடுப்பது
*வறண்ட சருமம் மற்றும் முடி உதிர்தல்
*மலச்சிக்கல்
*மனச்சோர்வு அல்லது மன அழுத்தம்
*சீரற்ற மாதவிடாய் சுழற்சி.
ஹைப்பர் தைராய்டிசம் அறிகுறிகள்
*காரணமில்லாமல் எடை குறைதல்
*வேகமான இதயத் துடிப்பு
*பதட்டம் அல்லது எரிச்சல்
*கைகளில் நடுக்கம்
*அதிகப்படியான வியர்வை
*அடிக்கடி மலம் கழித்தல்
*தூங்குவதில் சிரமம்.
தைராய்டு கட்டிகள் (காய்டர்) அறிகுறிகள்
*கழுத்தில் வீக்கம்
*விழுங்குவதில் சிரமம்
*குரலில் மாற்றம் (கரகரப்பு)
இந்த அறிகுறிகள் யாருக்கேனும் சில வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால், அவர்கள் கண்டிப்பாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
பெண்களுக்கான பாதிப்புகள்
தைராய்டிசம் பெண்களுக்கு அடிக்கடி மிக அதிகமாக ஏற்படுவதாலும், அவர்களின் ஹார்மோன் சுழற்சியுடன் சேர்ந்து செயலாற்றுவதாலும் இது அவர்களைப் பெரிதும் பாதிக்கிறது. பெண்களுக்கு மாதவிடாய் முறைகளில் இதனால் பெரும் மாற்றங்கள் ஏற்படலாம். அதாவது குறைவான ரத்தப்போக்கு அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் போன்றவை ஏற்படலாம். மேலும், இந்நிலைக்கு உரிய முறையான சிகிச்சையளிக்கப்படாமல் விடப்படும்போது கருவுறுதலில் பல்வேறு சிரமங்களையும் மற்றும் கர்ப்பகாலத்தின் போது சில எதிர்பாராத சிக்கல்களையும் அவர்கள் எதிர்கொள்ளக்கூடும்.
காலப்போக்கில் இந்தநிலை நமது எலும்புகளைப் பாதித்து, குறிப்பாக மாதவிடாய் நின்ற பெண்களுக்கு எலும்புகள் தேய்மானம் (ஆஸ்டியோபோராசிஸ்) அடையும் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும் . இந்த நிலையின் பிரதான அறிகுறிகளான பதற்றம், மனநிலை மாற்றங்கள் மற்றும் அதிகப்படியான சோர்வு, ஆகியவை வெளிப்படையாகத் தெரியாமல் முற்றிலும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருக்கலாம். மேலும் பெண்கள் இந்த அறிகுறிகளை தங்களின் அன்றாடச் செயல்பாடுகளுடனும் மற்றும் மன அழுத்தத்துடனும் தொடர்புடையதாகக் கருதுவதால், தைராய்டு ஹார்மோன் சுரப்பு பாதிப்பை உடனடியாக உணர்வது மிக்க கடினமாகிறது. இந்தச் சூழ்நிலைக்கு, பல்வேறு வயது பிரிவுகளிலுள்ள பெண்கள் சரியான விழிப்புணர்வுடன், சரியான நேரத்தில் தகுந்த மருத்துவப் பரிசோதனைகளை செய்து மருத்துவரது ஆலோசனைகளைப் பெற வேண்டியது மிகவும் அவசியமாகும்.
சிகிச்சை முறைகள்
இதற்கு மிகச் சிறந்த சிகிச்சைகள் உள்ளன. முறையான கவனிப்புடன், பெரும்பாலானோர் முழுமையான இயல்பு வாழ்க்கையை வாழ முடியும்.ஹைப்போதைராய்டிசம் (குறைந்த சுரப்பு): இதற்கு தினமும் தைராய்டு ஹார்மோன் மாத்திரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
ஹைப்பர்தைராய்டிசம் (அதிக சுரப்பு):
ஹார்மோன் உற்பத்தியைக் குறைக்கும் மருந்துகள், கதிரியக்க அயோடின் சிகிச்சை அல்லது சிலருக்கு அறுவை சிகிச்சை மூலம் இது கட்டுப்படுத்தப்படுகிறது.
தைராய்டு முடிச்சுகள்:
ஆபத்தற்ற முடிச்சுகளுக்கு எந்தவித சிகிச்சையும் தேவையில்லை. சந்தேகத்திற்குரிய முடிச்சுகளாக இருந்தால், அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டும்.
காய்டர்:
அயோடின் குறைபாடு, ஆட்டோ இம்யூன் நோய் அல்லது முடிச்சுகள் என அதன் அடிப்படை காரணத்தைப் பொறுத்து இதற்கான சிகிச்சை மாறுபடும்.
தைராய்டிலிருந்து தற்காத்துக் கொள்ள…
தொடர்ந்து அயோடின் கலந்த உப்பைப் பயன்படுத்துங்கள்.35 வயதுக்கு மேல், குறிப்பாகப் பெண்கள், தைராய்டு பரிசோதனை செய்து கொள்வது நல்லது. அயோடின், செலினியம் மற்றும் துத்தநாகம் நிறைந்த சத்தான உணவை உட்கொள்ளுங்கள். மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் மற்றும் போதுமான அளவு தூக்கம் அவசியமாகும். மருத்துவர் ஆலோசனையின்றி தைராய்டு மருந்துகளைத் தாங்களாகவே எடுத்துக்கொள்வதைத் தவிர்க்கவும். முடிவுரை தைராய்டு நோய்கள் பொதுவானவை, ஆனால் ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நீண்ட அதிக அளவிலான பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். இந்தச் சிறிய சுரப்பி நம் முழு உடல் ஆரோக்கியத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை மறந்துவிடக்கூடாது.
தொகுப்பு: – தேவி குமரேசன்
