×

நம்மை தூண்டுவது எது?

என்றென்றும் அன்புடன் 15

ஒவ்வொருவருக்கும் ஒரு raw chord (மூல ஸ்வரம்) இருக்கிறது. அதைப் பெரும்பாலும் மறைத்து அல்லது பாதுகாத்து வைத்திருப்பார்கள். நாம் எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும், சிலர் அதை அழுத்தி விடுவார்கள். விளைவு நம்மிடம் இருக்கும் எல்லாவிதமான குப்பைகளும் வெளிப்பட ஆரம்பிக்கும்.பாகவத புராணத்தில் வரும் முசுகுந்தனின் கதையில், பேரரசர் முசுகுந்தன் தேவர்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், தேவர்களுக்கு ஆதரவாக, அசுரர்களுக்கு எதிரான போரில் பல்லாண்டுகள் போராடி தேவர்களுக்கு வெற்றியைத் தேடித் தந்தார். போரில் மிகவும் களைத்திருந்த முசுகுந்தன், தனக்கு நீண்ட ஓய்வு தேவையென்று இந்திரனிடம் தனக்கு நீண்ட கால உறக்கத்தையும், தனது உறக்கத்தை கலைப்பவர்கள் எரிந்து சாம்பலாக வேண்டும் என்ற வரத்தையும் கேட்டுப் பெற்றார்.

எந்த ஆயுதங்களாலும் கொல்லப்படாத வரம் பெற்றவனும், கொடூர குணம் படைத்தவனுமான காலயவனன் என்பவன், கிருஷ்ணரைக் கொல்ல துவாரகை நாட்டின் மீது போர் தொடுத்தான். போரின் ஒரு கட்டத்தில் கிருஷ்ணர் ஆயுதங்களை கைவிட்டு வேகமாக ஓடினார். காலயவனன் பின் தொடர்ந்தான். அவர் ஒரு மலையை நோக்கிச் சென்றார். காலயவனனும் கிருஷ்ணரைப் பின் தொடர்ந்து விரட்டினான்.

கிருஷ்ணர், முசுகுந்தன் படுத்திருந்த கிர்னார் மலைக் குகையினுள் நுழைந்து ஒளிந்து கொண்டார். கிருஷ்ணரைத் தேடி வந்த காலயவனன், முசுகுந்தன் படுத்திருந்த இருட்டுக் குகையில் நுழைந்து தேடும்போது, அங்கே படுத்திருந்த முசுகுந்தனை, கிருஷ்ணன் என நினைத்து, முசுகுந்தன் மேல் பாய்ந்தான். உறக்கத்திலிருந்து விழித்த முசுகுந்தன், காலயவனனைப் பார்த்தவுடன், காலயவனன் சாம்பலாகி இறந்து போனான்.

அதன்பின் கிருஷ்ணரை பார்த்த முசுகுந்தன் வருந்தினார்.

பொதுவாக இன்னொருவரை தூண்டுவதற்கு காரணம், அவரவரின் இயலாமையை மறைப்பதற்கும், சுய கவுரவத்தை காப்பாற்றிக் கொள்ளவும், தங்களுடைய குற்றவுணர்வை மறைக்கவுமே ஆகும்.சில நேரங்களில் நாம் பத்திரமாக பாதுகாக்கும் ஒரு இடத்தை, நாம் பெருமைப்படும் விஷயத்தை யாரேனும் அவமதித்தாலோ, காயப்படுத்தினாலோ பெரும் பாதிப்பை உண்டாக்கும். அதுவே பெரும் வெடிப்பை ஏற்படுத்தும்.

ராமாயணத்தில் இலங்கைக்குச் சென்ற ஹனுமனை ராவணனின் ஆட்கள் சிறை பிடித்தார்கள். அதோடு நிற்காமல் தன் வாலை கம்பீரமாக கொள்ளும் வானரமான ஹனுமானை இழிவுபடுத்த, அந்த வாலில் தீ வைக்கப்பட்டது.மனதளவில் ஸ்திரமான ஹனுமனோ அதைப்பற்றி கவலைப்படாமல், தீ இட்டவர்களுக்கே அதைத் திரும்பக் கொடுத்தார்.பிறரின் செயல்களோ, வார்த்தைகளோ நம்மை தூண்டுவது தெரிந்தால், அதில் சிக்காமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் வழியைத் தேட வேண்டும். தவற விட்டால் திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல் சிக்கித் தவிப்போம்.

துரியோதனனுக்கு தொடக்கத்தில் இருந்தே பாண்டவர்களிடம் வெறுப்பு இருந்தது. பீஷ்மரும், திருதராஷ்டிரனும் அவனை சமாதானப்படுத்தி ராஜ்ஜியத்தில் பிளவில்லாமல் காத்து வந்தனர். பாண்டவர்களின் மாளிகையைச் சுற்றிப் பார்த்து கொண்டிருந்த துரியோதனன் ஓர் இடத்தில் தடுமாறினான். அதைப் பார்த்த திரௌபதி சத்தமாகச் சிரித்தது, துரியோதனின் மனதிலிருந்த பகைமையை கொழுந்து விட்டு எரியச் செய்தது. விளைவு பாரதப் போர்.

இந்தத் தூண்டுதல் எங்கிருந்து வேண்டுமானாலும் வரலாம். உறவுகள், நண்பர்கள், வேலை பார்க்கும் இடத்தில், அதற்கு நாம் ஆற்றும் எதிர்வினை நம்மை ஹீரோ ஆக்குகிறதா கோமாளி ஆக்கப்படுகிறோமா என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.இதேபோல் நாமும் பிறரைத் தூண்டும் செயல்களை செய்யக் கூடும். அது பெரும் விரிசலை ஏற்படுத்தும். யாரேனும் நம் வார்த்தைகளாலோ, செயல்களாலோ தூண்டப்பட்டால் அதைச் சரி செய்ய ஆழ்ந்த புரிதல், பொறுமை வேண்டும். அதைப் பற்றிய விழிப்புணர்வும், நம்மைப் பற்றிய சுய மதிப்பீடும் நல்வழிப்படுத்தும்.

பாகவத புராணத்தில் வரும் பிருகு முனிக்கு பிரபஞ்சத்தில் சிறந்தவர் யார் என்கிற கேள்வி இருந்தது.அவர் தான் சந்திப்பவர்களை எல்லாம் கோபமூட்டினார். பலரும் தோற்றனர். ஒரு சமயம் வைகுண்டத்தில் மகாவிஷ்ணுவிடம் தவறாக நடந்தார். மஹாவிஷ்ணுவின் மார்பில் எட்டி உதைத்தார். இந்தப் பிரபஞ்சத்தை தாங்கும், காக்கும் மஹாவிஷ்ணு அதனால் பாதிக்கப்படவில்லை. மஹாவிஷ்ணுவும் சிரித்துக் கொண்டே, ‘‘முனிவரே… காலில் ஏதேனும் காயம்பட்டதா?’’ என்றார்.

பிருகு முனிவர் தன் தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டார்.பொதுவாக இன்னொருவரை வார்த்தைகளாலும், செயல்களாலும் தூண்டுபவர்கள், அவர்களுக்குள் இருக்கும் காயங்களை சரி செய்யாது இருப்பவர்களே ஆவர். எண்ணங்களால் அலை கழிக்கபடுபவர்களாக இருப்பார்கள். இதில் பெரும் ஆச்சரியமான விஷயம், அவர்கள் பிறரைத் தூண்டுகிறார்கள் அல்லது காயப்படுத்துகிறார்கள் என்பதை தெரியாமலேயே இருப்பார்கள்.

ரம்யா வாசுதேவன்

Tags : Forever Love ,
× RELATED வலம்புரிச் சங்கின் தெய்வீக மகிமையும் வழிபாட்டு முறைகளும்