திருச்சி: ஜனநாயகக் கடமை ஆற்ற சீருடையுடன் வந்து வாக்களித்த நடத்துனர். வியப்பில் முசிறி வாக்காளர்கள். டிக்கெட்… டிக்கெட்…” என்று பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டிருந்த கைகள், இன்று தேசத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் ஜனநாயகக் கடமையைச் செய்யத் தவறவில்லை. பணியின் இடையே பேருந்தை நிறுத்திவிட்டு, அரசுப் பேருந்து நடத்துனர் ஒருவர் சீருடையுடன் வந்து வாக்களித்த சம்பவம் முசிறி தொகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம், முசிறி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தா .பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
அப்போது, தோளில் டிக்கெட் மெஷின் மற்றும் பணப்பையுடனும், காகி நிறப் பணியாளர் சீருடையுடனும் ஒருவர் வரிசையில் வந்து நின்றதைக் கண்டதும் அங்கிருந்த வாக்காளர்கள் ஆச்சரியமடைந்தனர்யார் இவர் விசாரித்ததில், அவர் தா.பேட்டையைச் சேர்ந்த மணி என்பதும், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் நடத்துனராகப் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. இன்று அவருக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், அவர் பணிபுரிந்த அரசுப் பேருந்து தா .பேட்டை வாக்குச்சாவடி வழியாகச் சென்றுள்ளது. அப்போது, பேருந்தை ஒரு சில நிமிடங்கள் ஓரமாக நிறுத்தச் சொன்ன மணி, தனது பணியைப் பாதிக்காத வகையில் விரைவாக வந்து தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
வாக்களிப்பது நமது ஜனநாயகக் கடமை. பணி எவ்வளவு முக்கியமோ, அதைவிட முக்கியம் நமது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த ஒரு விரல் புரட்சி. அதனால்தான் நேரத்தை வீணடிக்காமல் பேருந்தை நிறுத்திவிட்டு வந்து வாக்களித்தேன். அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என கூறினார். வாக்களித்து முடித்த கையோடு, மீண்டும் தனது பேருந்தை நோக்கி விரைந்த அவர், கம்பீரமாக விசில் அடித்து பேருந்தை இயக்கச் சைகை காட்டிவிட்டுப் பணியைத் தொடர்ந்தார். தேர்தல் நாளன்று விடுமுறை எடுத்துக்கொண்டு வீட்டில் இருப்பவர்களுக்கு மத்தியில், கடமை உணர்ச்சியுடன் வந்து வாக்களித்த இந்த அரசுப் பேருந்து நடத்துனரின் செயல், முசிறி தொகுதி வாக்காளர்களைப் பெரிதும் கவர்ந்ததுடன் சமூக வலைதளங்களிலும் பாராட்டுக்களைக் குவித்து வருகிறது.
