சென்னை: மயிலாப்பூர் தொகுதிக்குட்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியில் சத்தியமூர்த்தி என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 கோடி ரொக்கத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தடுக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி தேர்தல் பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் வாகன சோதனை மற்றும் புகார்களின்படி, அரசியல் கட்சி பிரமுகர்கள் வீடுகளில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், மயிலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பட்டினப்பாக்கம் பகுதியில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய பெரிய அளவில் பணம் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் பறக்கும் படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் சத்தியமூர்த்தி என்பவரின் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக ரூ.500 மதிப்புள்ள மொத்தம் ரூ.1 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பணம் குறித்து வீட்டின் உரிமையாளர் சத்தியமூர்த்தியிடம் தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம், ரூ.10 லட்சத்திற்கு மேல் பணம் சிக்கியுள்ளதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து, அவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1 கோடி பணத்தை ஒப்படைத்தனர்.
