×

ரொம்ப உப்பு… ரொம்ப ரொம்ப தப்பு!

நன்றி குங்குமம் தோழி

இதயம், கல்லீரல் போல் சிறுநீரகம் நம் உடலில் மிகவும் முக்கியமான உறுப்பு. இந்த உறுப்பு சரியாக இயங்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்தினை ஏற்படுத்தும் அளவிற்கு கூட பிரச்னையினை ஏற்படுத்தும். இதனை சைலன்ட் கில்லர் என்று கூட கூறுவார்கள். காரணம், சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டால் அதன் அறிகுறி உடனடியாக தெரியாது. நாள் கடந்த பிறகுதான் தெரியவரும். அதனால் இதயத்திற்கு கவனம் செலுத்துவது போல் இதற்கும் கவனம் செலுத்த வேண்டும் என்கிறார் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் நவினாத். ‘‘ஒவ்ெவாரு வருடமும் மார்ச் மாதம் சர்வதேச சிறுநீரக தினமாக பின்பற்றப்பட்டு வருகிறது.

அதை முன்னிட்டு மக்களுக்கு சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்னை கள் மற்றும் அதன் காரணிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். சிறுநீரகத்தில் பாதிப்பு ஏற்பட முக்கிய காரணம் நாம் உணவில் சுவைக்காக சேர்த்துக் கொள்ளும் உப்பு என்பதை பலரும் உணர்ந்திருப்பதில்லை. உப்பு அதிகமானால் உயர் ரத்த அழுத்தம் ஏற்படும். விளைவு இதய பிரச்னை மற்றும் பக்கவாதம் ஏற்படும் என்பதால், பலரும் அதற்கு மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார்கள். ஆனால், அது சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

பொதுவாக இதயத்தில் பிரச்னை ஏற்பட்டால் அதற்கான அறிகுறி தெரிய வரும். ஆனால், சிறுநீரகம் பொறுத்தவரை பாதிப்பிற்கான அறிகுறி முன்பே தென்படாது. சிறுநீரகம் முழுமையாக பாதிக்கப்பட்ட பிறகுதான் அறிகுறி தெரியவரும். ஆரம்பகட்ட நிலையிலேயே தெரியவந்தால் உடனடியாக அதற்கான சிகிச்சை முறைகளை மேற்கொண்டால் எளிதில் குணமாக முடியும்.

உப்பு நம்முடைய உடலில் உள்ள தசைகள் மற்றும் நரம்புகள் இயங்குவதற்கு அவசியம். இவை இயங்குவதற்காக சிறுநீரகம் நம்முடைய உடலில் உப்பின் அளவினை தக்கவைத்துக் கொள்ளும். அதே சமயம் ஒரு உடலுக்கு ஐந்து கிராம் உப்பு போதுமானது. ஆனால், நாம் ஒரு நாளைக்கு 10 கிராம் அளவு உப்பினை உட்கொள்கிறோம். உப்பின் அளவு அதிகமானால் உடலில் நீரும் அதிகமாக சேரும். இதனால் இதயம் கூடுதலாக இயங்கும். விளைவு இதயம் பலவீனமாகும் வாய்ப்புள்ளது. நாளடைவில் அது சிறுநீரகத்தையும் பாதிக்கும். மேலும், 30 சதவீதம் உயர் ரத்த அழுத்தம் அதிகரிக்கவும் வாய்ப்புள்ளது.

இன்று பெரும்பாலானவர்களுக்கு நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளது. அதில் சிறுநீரக பாதிப்பிற்கு முதல் எதிரி நீரிழிவு நோய், இரண்டாவது எதிரி உயர் ரத்த அழுத்தம். இந்நிலையில் மூன்றில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை உள்ளது. அதில் பலருக்கு தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதே தெரிவதில்லை. கண்டறிந்த பிறகு மருத்துவர் சாப்பாட்டில் உப்பின் அளவினை குறைக்க சொல்லி ஆலோசனை அளிப்பார்.

அவர்கள் சாப்பாட்டில் உப்பின் அளவினை குறைத்துக் கொண்டாலும் ஊறுகாய், சிப்ஸ், கருவாடு மற்றும் டின் உணவுகளை சாப்பிட்டு வருவார்கள். தினமும் வீட்டில் சமைக்கப்படும் சாப்பாட்டில் இருக்கும் உப்பினை விட இது போன்ற உணவில் உப்பு அதிகமாக இருக்கும். அதனால் அதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது. உப்பைக் குறைத்து ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயினை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலே சிறுநீரகம் சீராக இயங்கும் என்பதில் சந்தேகமேயில்லை. இல்லையென்றால் நாளடைவில் டயாலிசிஸ் செய்யும் அளவிற்கு சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.

பொதுவாக இந்த இரண்டு பிரச்னை உள்ளவர்கள் அதற்கான ரத்தப் பரிசோதனை மற்றும் இதய செயல்பாடு குறித்து மட்டும் ஆய்வு செய்வார்கள். உடன் சிறுநீரக செயல்பாட்டிற்கான ஆய்வினை மேற்கொண்டால், ஆரம்பகட்ட நிலையிலேயே சிறுநீரகத்தில் உள்ள பாதிப்பினை கண்டறிந்து அதற்கான சிகிச்சையினை முன்கூட்டியே எடுத்துக் கொள்ளலாம். மேலும், உணவிலும் கட்டுப்பாடு அவசியம். காய்கறி, பழங்களை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். புரதம், கார்போஹைட்ரேட், கொழுப்பு, மினரல்கள் என அனைத்தும் இருக்கக்கூடிய பேலன்ஸ்டு டயட்டினை பின்பற்ற வேண்டும். தினசரி உடற்பயிற்சி மேற்கொள்வது அவசியம். முக்கியமாக உடல் பருமன் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வெயில் காலத்தில் அதிகளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் தவறு. அதனாலும் சிறுநீரக பிரச்னை ஏற்படலாம்.

தற்போது பிங்க் உப்பும் மார்க்கெட்டில் உள்ளது. இதில் கூடுதல் மினரல்கள் இருந்தாலும், அதன் அளவினையும் கட்டுக்கோப்பாக எடுத்துக்கொள்ள வேண்டும். என்னைக் கேட்டால் உப்பு எதுவாக இருந்தாலும் அதனை உட்கொள்ளும் அளவில் தான் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

சிறுநீரகத்தில் பிரச்னை ஏற்பட்டால், கால் வீக்கமடையும், வாந்தி மற்றும் உடல் சோர்வாக இருக்கும். இந்த அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும். வாழ்வியலில் மாற்றம் செய்து கொண்டால் ஆரோக்கியமான எதிர்காலம் கியாரன்டி’’ என்றார் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் நவினாத்.

தொகுப்பு: நிஷா

Tags :
× RELATED பார்வதி வெங்கடராமன் ஃபிட்னெஸ்!