×

புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் கூகுள் பே மூலம் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்த அதிமுக: போலீசார் விசாரணை

சென்னை: புளியந்தோப்பு கே.பி.பார்க் பகுதியில் கூகுள் பே மூலம் வாக்காளர்களுக்கு அதிமுக பணம் பட்டுவாடா செய்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். எழும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் வாக்காளர்களுக்கு கூகுள் பே மூலம் பணம் பட்டுவாடா செய்து வருவதாக தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் மாலை 4 மணியளவில் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் எழும்பூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படை அதிகாரி ராஜ்குமார் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அதில், அதிமுகவினர் வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு ஜிபே மூலம் பணம் பட்டுவாடா செய்தது தெரியவந்தது. இதனையடுத்து, சோழிங்கநல்லூர் படவேட்டம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த கருணேஷ் (22) என்பவரை பிடித்தனர்.

அதிமுக உறுப்பினரான இவரிடம் சோதனை செய்தபோது பணம் ஏதும் கைப்பற்றப்படவில்லை. வாக்காளர் புகைப்படம் ஒட்டிய நோட்டு ஒன்று கைப்பற்றப்பட்டது. அதில் வாக்காளர்களின் கைப்பேசி எண் எழுதப்பட்டிருந்தது. கைப்பேசி எண் எழுதப்பட்ட மேற்படி முகவரிக்குச் சென்று அவர்களின் ஜிபே நம்பரை வாங்கி பணப்பட்டுவாடாவில் ஈடுபட முயன்றது தெரிய வந்தது. இருப்பினும் பணம் பரிமாற்றம் நடந்ததற்கான விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. இதனையடுத்து தேர்தல் பறக்கும் படை அதிகாரி பிடிபட்ட கருணேஷ் என்பவரை பேசின் பிரிட்ஜ் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து பேசின்பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : AIADMK ,Pulianthope K.P. Park ,Chennai ,Egmore ,
× RELATED விக்கிரமசிங்கபுரம் பேருந்து நிலையத்தில் இளைஞர் வெட்டிக்கொலை