*அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு
சித்தூர் : சித்தூர் நீர்வழித்தட நீர் பாதுகாப்பு பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் முடிக்கப்படவேண்டும் என மாவட்ட கலெக்டர் சுமித்குமார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆந்திராவில் உள்ள அனைத்து நீர்நிலைகளையும் சீரமைத்து அவற்றுக்கு சீரான கால்வாய்கள் மூலம் தண்ணீர் செல்வதை உறுதி செய்ய முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக ஆறு, ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு செல்லும் வழித்தடங்கள் மற்றும் வற்றாத குடிநீர் ஆதாரத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்து செல்லவும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்களுக்கு ஆலோசனைகளை வழங்கியுள்ளார். அதன்படி சித்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று மாவட்ட கலெக்டர் சுமித்குமார் தலைமையில் நகரி மண்டல நீர் பாசனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இதில் கலெக்டர் சுமித்குமார் தலைமை தாங்கி பேசியதாவது: கோடைக்காலம் என்பதால் வறட்சி மற்றும் குடிநீர் தேவையை கருத்திக்கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது. அதன்படி சித்தூர் மாவட்டத்தில் நீர் வழித்தட பாதுகாப்பு பணிகள் நிர்ணயிக்கப்பட்ட காலகெடுவுக்குள் பணிகள் முடிக்கவேண்டும். சித்தூர் மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு குளத்திற்கும் தண்ணீர் சென்றடைவதை உறுதிசெய்ய அதிகாரிகள் திட்டங்கள் வகுக்கவேண்டும்.
நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்காக மாவட்டத்தில் ஜலதாரா-ஜலஹரதி திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். மண்டலம் மற்றும் கிராமங்கள் வாரியாக குளங்களின் நீர் சேமிப்புத்திறனை அதிகரிக்க, எத்தனை துணை கால்வாய்கள் மற்றும் குளங்கள் கட்டி முடிக்கப்பட வேண்டும். இதுதொடர்பான பட்டியலை இந்த மாதம் 25ம் தேதிக்குள் தயாரிக்க வேண்டும். மக்களின் பங்கேற்புடன் ஜலதாரா திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள குளங்கள், குட்டைகள், பள்ளங்கள் மற்றும் வளைவுகள் அடையாளம் காணப்படவேண்டும். கிராம அளவில், நீர் வள அலுவலர்கள், மண்டல வளர்ச்சி அலுவலர்கள், பொறியியல் துறை, களப் பணியாளர்கள், நீர் பயனாளர் சங்கங்கள் ஆகியோர் ஒவ்வொரு நிதியகத்துடனும் மற்றும் கிராம பெரியவர்களுடனும் கூட்டங்களை நடத்தி, குளங்கள் மற்றும் வளைவுகளின் நிலையை மதிப்பிடவேண்டும்.
ஒவ்வொரு மண்டல வளர்ச்சி அலுவலர், உதவி மண்டல அலுவலர் மற்றும் கள உதவியாளர்களும் தினமும் சுமார் ஒரு மணி நேரம் ஜலதாரா திட்டத்தின் செயலாக்கத்தை ஆய்வு செய்ய வேண்டும். ஒவ்வொரு கள உதவியாளரும் 3 குளங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கிராம வளர்ச்சி அலுவலர்கள், உதவி வளர்ச்சி அலுவலர்கள், கள உதவியாளர்கள் ஆகியோர் கிராமங்களில் உள்ள பிரதான குளங்களை பார்வையிட்டு, அவற்றின் தற்போதைய நிலையை ஆய்வுசெய்து தூர்வாருதல் மற்றும் கால்வாய் இணைப்பு பணிகளுக்காக தேவையான அறிக்கைகளை உயரதிகாரிகளுக்கு சமர்ப்பிக்க வேண்டும்.
இதில் நீர்ப்பாசனத்துறை எஸ்.சி.இ. வெங்கடேஸ்வர ராஜு, டி.இ. ஜெயச்சந்திரபாபு, டி.டபிள்யூ.எம்.ஏ. ஏ.பி.டி. மல்லிகார்ஜுனா, விஜயபுரம், நிந்திரா, கர்வேதி நகரம், வெதுரு குப்பம், நாகரி, மண்டலங்கள் தொடர்பான எம்.பி.டி.ஓ.க்கள், நீர்ப்பாசனத் துறை பொறியாளர்கள், ஏ.பி.ஓ.க்கள் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
