×

பணி நிரந்தரம் செய்யக்கோரி மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் ஆதார் கார்டு ஒப்படைக்கும் போராட்டம் தஞ்சையில் நடந்தது

தஞ்சை, பிப்.23: பணி நிரந்தரம் செய்ய கோரி தஞ்சையில் தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் ஆதார், ரேஷன் கார்டை ஒப்படைக்கும் போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்திற்கு தஞ்சை திமுக எம்எல்ஏ., நீலமேகம், விடுதலை தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவன தலைவர் குடந்தை அரசன் ஆகியோர் ஆதரவு தெரிவித்து பேசினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் ராஜா.ராஜேந்திரன் தலைமை வகித்து பேசும்போது, மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளர்களாக 20 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறோம். இயற்கை பேரிடர் காலங்களான தானே, வர்தா, ஒக்கி, கஜா, நிவர் போன்ற புயல் காலங்களில் எங்களது மிகவும் சிறப்பாக இருந்ததாக மின்துறை அமைச்சரே பாராட்டி உள்ளார்.

மேலும் முதல்வர் தலைமையில் பாராட்டு விழா நடத்தி உடனடியாக மின்சார வாரிய ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ரூ.380 வழங்கி பணி நிரந்தரம் செய்வதாக உறுதி கொடுத்தனர். தமிழக முதல்வரிடமும் நேரடியாக கோரிக்கை வைத்தோம். ஆனால் இன்று வரை எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. குறைந்தபட்ச ஊதியம் கூட கொடுக்க மறுத்துவிட்டனர். இதனால் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் மிகவும் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். இதனால் தமிழகத்தில் வாழவே தகுதியற்றவர்களாக ஆக்கப்பட்டுள்ளோம். இதனால் எங்களது குடும்பத்துடன் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, அனைத்து இந்திய குடியுரிமை ஆவணங்களை மாவட்ட கலெக்டரிடம் திருப்பி தர உள்ளோம். வரும் சட்டமன்ற தேர்தலை ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவரும் குடும்பத்துடன் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம் என்றார். ஊருக்கே விளக்கேற்றிய எங்களின் வாழ்க்கையில் இந்த மின்வாரியமும், தமிழக அரசும் ஒளியேற்றாமல் இருளில் மூழ்கடித்துள்ளதாக கூறி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தில் சங்கத்தின் மாநில துணை தலைவர் ஆரோக்கியம், மாவட்ட தலைவர் ஜான்போஸ்கோ, செயலாளர் அருளாநந்தய்யா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Tanjore ,
× RELATED சட்டவிரோத மணல் கொள்ளை புகாரில்...