18.4.2026 – சனி வடுகநம்பி திருநட்சத்திரம்
வடுகநம்பி, இராமானுஜர் பிரதான சீடர்களில் ஒருவர். மைசூரில் உள்ள சாலகிராமம் என்ற ஊரில் சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில் “ஆந்திரபூரணர்” என்ற இயற்பெயரோடு பிறந்தார். இராமானுஜரை தன் ஆச்சாரியராக மட்டும் அல்லாமல், எல்லாமாகவே ஏற்றுக்கொண்டார். அவருக்கு, ஆச்சாரியனே இறைவன் என்ற நிலை இருந்தது. அவரது பக்தியின் உச்சத்தை எடுத்துக்காட்டும் ஒரு சம்பவம் குறிப்பிடத்தக்கது. மடைப் பள்ளியில் கைங்கரியம் செய்து கொண்டிருந்தபோது, பாலைச் சூடாக்கிக் கொண்டிருந்தார். அப்பொழுது நம்பெருமாள் திருவீதி வலம் வந்து மடத்தின் முன் நின்றார்.. இராமானுஜர், “வா! பெருமாளை தரிசி” என்று அழைத்தார். அதற்கு வடுகநம்பி, “உங்கள் பெருமாளைப் பார்த்தால், என் பெருமாளுக்குக் கொடுக்க வேண்டிய பால் கெட்டு விடும்” என்று கூறினார். இங்கே “என் பெருமாள்” என்று அவர் குறிப்பிட்டது இராமானுஜரையே. வடுகநம்பி இயற்றிய நூல்களில் “யதிராஜ வைபவம்”, “ராமாநுஜ அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்”, “ராமாநுஜ அஷ்டோத்தர சதநாம நாமாவளி” ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இந்நூல்கள் அனைத்தும் இராமானுஜரின் மகிமையை உலகறியச் செய்தவை.
19.4.2026 – ஞாயிறு சிறுத்தொண்டர் குருபூஜை
சைவ சமயத்தின் 63 நாயன்மார்களில் உயர்ந்த இடம் பெற்றவர் சிறுத்தொண்ட நாயனார். இவரின் இயற்பெயர் “பரஞ்சோதி”. திருச்செங்காட்டங்குடி என்னும் புனிதத் தலத்தில் பிறந்தார். பல்லவ மன்னன் நரசிம்ம பல்லவன் சேனாதிபதியாக உயர்ந்தார். அவர் தலைமையில் நடைபெற்ற போரில், வாதாபி நகரத்தை வென்று புகழ் பெற்றார். போரின் கொடுமைகளையும், உயிரிழப்பு களையும் கண்டு அவரது மனம் மாறியது. உலக வாழ்வின் நிலையின்மையை உணர்ந்த அவர், தன் வாழ்நாளை இறைவனுக் கான சேவைக்கு அர்ப்பணிக்க முடிவு செய்தார். அதன்பின் சிவபக்தியில் முழுமையாக ஈடுபட்டு, “சிறுத்தொண்டர்” எனப் போற்றப்பட்டார். சிறுத்தொண்ட நாயனாரின் பக்தியை உலகறியச் செய்த முக்கியமான சம்பவம், இறைவன் அவரைச் சோதித்த நிகழ்வே ஆகும். அவருடைய பக்தியின் ஆழத்தை அறிய விரும்பிய சிவபெருமான், ஒரு சிவயோகி வேடத்தில் வந்து, “பிள்ளைக் கறியமுது” (குழந்தை இறைச்சியால் செய்யப்பட்ட உணவு) வேண்டுமென்று கேட்டார்.
இந்த வேண்டுகோள் மனித மனத்தால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று. இருப்பினும், இறைவனின் பக்தராக இருந்த சிறுத் தொண்டர், எந்த தயக்கமும் இன்றி தன் மகனைத் தியாகம் செய்யத் தயார் ஆனார். அவருடைய இந்த அசைக்க முடியாத பக்தியைக் கண்டு மகிழ்ந்த சிவபெருமான் உடனே காட்சி தந்து, அவரையும், அவரது குடும்பத்தினரையும் அருளால் காப்பாற்றினார். சிறுத்தொண்ட நாயனாரின் வாழ்க்கை, பக்தி என்பது வெறும் வழிபாடு அல்ல; அது முழுமையான சரணாகதி மற்றும் தியாகம் என்பதைக் காட்டுகிறது. அவருடைய நினைவாக ஆண்டுதோறும் “குருபூசை” சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் அனுசரிக்கப்படுகிறது.
19.4.2026 – ஞாயிறு உய்யக்கொண்டார் திருநட்சத்திரம்
ஸ்ரீவைணவ சமய குரு பரம்பரையில் முக்கியமான இடத்தைப் பெற்றவர் உய்யக்கொண்டார். “புண்டரீகாக்ஷர்” என்பது இவரது இயற்பெயர். திருச்சி அருகிலுள்ள திருவெள்ளறை என்னும் புனிதத் தலத்தில் அவதரித்தார். ஸ்ரீவைணவ சமயத்தின் முன்னோடி ஆச்சாரியரான நாதமுனிகள் அவர்களின் முதன்மைச் சீடராக விளங்கினார். நாதமுனிகளிடமிருந்து திவ்யபிரபந்தம் மற்றும் வைணவ சித்தாந்த ரகசியங்களை ஆழமாகக் கற்றறிந்தார். அவர் பெற்ற ஞானத்தைத் தமது சீடர்களுக்கு உரிய முறையில் பரப்பியவர். அவரது சீடர்களில் சிறப்பிடம் பெற்றவர் மணக்கால் நம்பி. ஆண்டாள் அருளிய திருப்பாவைக்கு தனியன் (முன்னுரைச் செய்யுள்) இயற்றிய பெருமையும் இவருக்கே உரியது. இன்று உய்யக்கொண்டார் திருநட்சத்திரம். (அவதார நாள்).
19.4.2026 – ஞாயிறு மதுரை சித்திரை விழா தொடக்கம்
தமிழகத்தின் மிகப்பெரிய ஆன்மிக மற்றும் பண்பாட்டு திருவிழாக்களில் ஒன்றான மதுரை சித்திரைத் திருவிழா இன்று கோலாகலமாக தொடங்குகிறது. இந்த விழா, மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணத்தையும், கள்ளழகர் வைபவத்தையும் இணைக்கும் தனித்துவம் கொண்டது. சித்திரை மாதம் முழுவதும் நடைபெறும் இவ்விழாவில், மீனாட்சி திருக்கல்யாணம், தேரோட்டம், மற்றும் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு (1.5.2026) போன்றவை முக்கியமாகக் கொண்டாடப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி உணர்வை வெளிப்படுத்தும் இந்த விழா, மதுரையின் அடையாளமாகவும், தமிழர் பண்பாட்டின் பெருமையாகவும் திகழ்கிறது.
20.4.2026 – திங்கள் கும்பகோணம் 12 கருட சேவை
அட்சய திருதியையொட்டி கும்பகோணத்திலுள்ள 12 வைணவ கோயில்களிலிருந்து 12 கருட வாகனங்களில் பெருமாள் பக்தர்களுக்குக் காட்சி அளிப்பது வழக்கம். நடப்பாண்டுக்கான கருட சேவை இன்று நடைபெறும். கும்பகோணம் டி.எஸ்.ஆர். பெரிய தெருவில், கருட வாகனங்களில் உற்சவ மூர்த்திகள், அங்கு அமைக்கப்பட்டுள்ள அலங்கார பந்தலில் ஒரே இடத்தில் எழுந்தருளி பொதுமக்களுக்கு அருள்பாலிப்பர். சாரங்கபாணி சுவாமி, சக்கரபாணி சுவாமி, ராமசுவாமி, ஆதிவராக சுவாமி, ராஜகோபால சுவாமி, கொட்டையூர் நவநீத கிருஷ்ணசுவாமி, மேலக்காவேரி வரதராஜ பெருமாள் சுவாமி, அகோபிலமடம் லட்சுமி நரசிம்ம சுவாமி உள்ளிட்ட 12 கோயில்களின் உற்சவ மூர்த்திகள் கருட வாகனத்திலும் காலை முதல் பகல் 1 மணி வரை அலங்கார பந்தலில் வீற்றிருந்து அருள்பாலிப்பர். 12 மூர்த்திகளையும் ஒரு சேர, ஒரே இடத்தில் கருட வாகனத்தில் தரிசனம் செய்வது மிகவும் விசேஷம்.
20.4.2026 – திங்கள் மங்கையர்க்கரசி குருபூஜை
மங்கையர்க்கரசியார், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர். பாண்டிய மன்னன் மனைவி. சைவத்தை தனது தவ நெறியாகப் பின் பற்றிய மங்கையர்க்கரசி, பாண்டி நாட்டில், சைவ நெறி தழைக்க வேண்டும் என்று விரும்பினார். குலச்சிறையார் என்கின்ற சைவப்பெரியாரை துணை கொண்டு திருஞான சம்பந்தரை மதுரைக்கு வரவழைத்தார். அப்பொழுது இறை அருளால் பாண்டிய மன்னனுக்குக் கொடுமையான சூலை நோய் வந்தது. அந்த நோயை சமணர்களால் தீர்க்க முடியவில்லை. அப்பொழுது திருஞான சம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடி மன்னனின் நோயைத் தீர்த்தார். அதனால் மகிழ்ந்த மன்னன் சம்பந்தரின் அறிவுரை கேட்டு,சைவத்துக்கு மாறினான். அதற்கு உதவியவர் மங்கையர்க் கரசி. தனது விடா முயற்சியினாலும் வேண்டுதலாலும், பொறுமையாலும், தெய்வக் குழந்தையும் ஞானக்குழந்தையுமான திருஞானசம்பந்தரின் பேரருளாலும் சைவம் வளர்த்த மங்கையர்க்கரசியார் குரு பூஜை தினம் இன்று.
20.4.2026 – திங்கள் சோளிங்கர் சித்திரை விழா தொடக்கம்
சோளிங்கர் ஸ்ரீ யோக லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் சித்திரை மாதத்தில் 10 நாள் பிரம்மோற்சவ விழா (பெருந்திருவிழா) கோலாகலமாக நடைபெறும். கொடியேற்றத்துடன் இன்று தொடங்கும் இந்த விழாவில், பல்வேறு வாகனங்களில் பெருமாள் வீதியுலா, கருட சேவை மற்றும் சித்திரை தேர்த் திருவிழா சிறப்பாக நடைபெறும். தங்க கருட வாகன சேவை 26.4.2026 அன்றும்,தேர் விழா 28ம் தேதியும் நடைபெறும்.
21.4.2026 – செவ்வாய் ஆதிசங்கரர் ஜெயந்தி
இந்திய சமய மரபின் மூன்று மிகச் சிறந்த தத்துவங்கள் அத்வைதம், துவைதம், விசிஷ்டாத்வைதம். இதில் அத்வைத தத்துவங்களை உலகெங்கும் பரப்பியவர் ஸ்ரீசங்கரர். ஸ்ரீசங்கர ஜெயந்தியானது சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் சுக்ல பட்ச பஞ்சமியன்று(இன்று) அனுஷ்டிக்கப்படுகிறது.
22.4.2026 – புதன் ஸ்ரீராமானுஜர் ஜெயந்தி
உலக மக்களின் நன்மை ஒன்றையே கருதி, திருக்கோட்டியூரில், தாம் மிகவும் கஷ்டப்பட்டு அறிந்த, ஆன்மிகப் பொருளை (மந்திரப் பொருள்) ‘‘ஆசை உடையவர்கள் எல்லாம் வாருங்கள்” என்று அன்போடு அழைத்து, தான் நரகம் அடைந்தாலும் பரவாயில்லை என்று, அனைவருக்கும் அளித்தவர் சுவாமி ராமானுஜர். அவருடைய ஜெயந்தி உற்சவம், (சித்திரை திருவாதிரை) இன்று, ஒவ்வொரு வைணவக் கோயில் களிலும், ஒவ்வொரு வைணவ அடியார் களின் இல்லங்களிலும், மிகச் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
22.4.2026 – புதன் விறன்மிண்ட நாயனார் குருபூஜை
சேரநாட்டுச் செங்குன்றூரில் வேளாண்குடியில் பிறந்தவர். அவர் சிவனடியாரிடத்தே பெரும் பக்தி பூண்டவர். எந்தக் கோயிலுக்குச் சென்றாலும் அங்குள்ள பெருமானை வணங்குவதற்கு முன்பாக, அடியார்களை வணங்குவதை வழக்கமாகக் கொண்டவர் ஒருமுறை திருவாரூர் வந்தார். கோயிலில் சுந்தரர் அடியார்களை தொந்தரவு செய்ய வேண்டாமென எண்ணி ஒதுங்கிச் சென்றார். இதைக் கண்ணுற்ற விறன்மிண்ட நாயனார், இவன் திருக்கூட்டத்தாரை வழிபடாது கோயிலுள் செல்கின்றானாதலால் திருக்கூட்டத்திற்கு இவனும் புறம்பாக இருக்கின்றான். அடியார்களை மதிக்காத இவனையாண்ட சிவனும் இனி புறகு என்று கூறினார். விறன்மிண்டரது அடியார் பக்தித் திறத்தை அறிந்த சுந்தரமூர்த்தி சுவாமிகள், திருவாரூர்க் கோயிலுள் புகுந்து தியாகராசப் பெருமானைக் கும்பிட்டு நிற்கும்போது பெருமான், “நீ அடியாரை மதிக்காததால் நம்மையும் புறம் தள்ளி விட்டார் நமது அன்பர் விறன்மிண்ட நாயனார். சுந்தரா, நாம் அடியாருடன் உள்ளோம்; அடியாரைப்பாடு என்றருளி “தில்லை வாழ் அந்தணர்” என அடி யெடுத்துக் கொடுத்தார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகைத் திருப்பதிகத்தை “தில்லை வாழந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” என்பதை முதலாகக் கொண்டு பாடியருளினார். சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுவதற்குக் காரணமாய் அமைந்த விறன்மிண்ட நாயனார், குரு பூஜை இன்று.
22.4.2026 – புதன் சீர்காழி திருமுலை பால் உற்சவம்
சீர்காழி சட்டைநாதர் கோயிலில் திருஞானசம்பந்தருக்கு, திரு நிலைநாயகி அம்மன் ஞானப்பால் வழங்கிய திருமுலைப் பால் உற்சவம், இன்று சிறப்பாக நடைபெறும்.
23.4.2026 – வியாழன் தியாகப் பிரம்மம் ஜெயந்தி
கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் (தியாக பிரம்மம்), 1767-ஆம் ஆண்டு மே 4-ஆம் தேதி திருவாரூரில் பிறந்தார். ராமபக்தரான இவர், இசையால் ராமனுக்கு சேவையாற்றி 2400-க்கும் மேற்பட்ட கீர்த்தனைகளை இயற்றினார். இவரது ஜெயந்தி விழா சித்திரை மாத பூச நட்சத்திரத்தில் (இன்று) சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
