போதிய அதிகாரிகள் இல்லாததால் ராசிபுரத்தில் பட்டா வழங்குவதில் தாமதம் பொதுமக்கள் புகார்

ராசிபுரம், பிப்.23: போதிய அதிகாரிகள் இல்லாததால், ராசிபுரம் வட்டாரத்தில் பட்டா வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது என பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். ராசிபுரம் வட்டார பகுதியில், சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட  குடியிருப்புகள் உள்ளன. நகரில் உள்ள வீடுகளுக்கு, சிறப்பு  திட்டத்தின் கீழ் 2010ம் ஆண்டு பட்டா புதுப்பித்தல், பட்டா மாறுதல் தொடர்பாக  அறிவிப்பு வெளியிடப்பட்டு உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்த அனைவருக்கும்  பட்டா வழங்கப்பட்டது. அதன்பின் சிறப்பு திட்டம் நிறுத்தப்பட்டதால், 2011ம்  ஆண்டு முதல் பட்டா வழங்குவது  நிறுத்தப்பட்டது. இதனால் ராசிபுரம் நகரில் சுமார் 4,100 பேரின் மனுக்கள் நிலுவையில் உள்ளது.

இதனால் சொத்து விற்பனை, வங்கி கடன் பெறுதல்,  அடமானம் வைத்தல் போன்றவை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரிதும்  அவதிக்குள்ளாகினர். இதுகுறித்து பலமுறை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றும்  பலனில்லை.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நிறுத்தம்  செய்யப்பட்ட பட்டாக்கள் வழங்கும் பணியை, சமூக நலத்துறை அமைச்சர்  சரோஜா துவக்கி வைத்தார். ஆனால், தனி தாசில்தார் மற்றும் சர்வேயர் இல்லாததால், பட்டா  கேட்கும் பொதுமக்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.  ராசிபுரம்  நகராட்சி அலுவலகத்தில் உள்ள சர்வேயர், சிறப்பு பணிக்கு சென்று விடுவதால் தினமும்  பட்டா கேட்டு அலுவலகம் வரும் மக்கள், ஏமாற்றுத்துடன் திரும்பிச்  செல்கின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, போதிய அதிகாரிகளை நியமிக்க  வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>