×

சட்டீஸ்கர் ஆலை விபத்தில் 20 பேர் பலி: வேதாந்தா நிறுவன தலைவர் மீது வழக்கு

ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ள வேதாந்தா குழுமத்தின் மின் உற்பத்தி ஆலையில் நடந்த விபத்து தொடர்பாக அந்த நிறுவனத்தின் தலைவர் அனில் அகர்வால் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சட்டீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டம் சிங்கிடாராய் கிராமத்தில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான மின் உற்பத்தி ஆலை செயல்பட்டு வருகிறது. கடந்த 14ம் தேதியன்று, இந்த ஆலையில் உள்ள பாய்லரில் இருந்து டர்பைனுக்கு அதிக அழுத்தத்துடன் கூடிய நீராவியை கொண்டு செல்லும் ஸ்டீல் குழாய் திடீரென வெடித்து சிதறியது.

இந்த கோர விபத்தில் சிக்கி தொழிலாளர்கள் பலர் படுகாயமடைந்த நிலையில், இதுவரை மொத்தம் 20 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 பேர் பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து தொடர்பாக வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் (70) உள்ளிட்ட 8 முதல் 10 பேர் மீது தப்ரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது குறித்து சக்தி மாவட்ட எஸ்பி பிரபுல் தாக்கூர் கூறுகையில், ‘வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால் உள்ளிட்டோர் மீது கவனக்குறைவால் மரணத்தை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. உயிரிழந்தவர்களின் பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தடய அறிவியல் துறையின் ஆய்வறிக்கைக்காக காத்திருக்கிறோம். விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய தொழில்நுட்ப குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை முடிவில் மேலும் சிலரது பெயர்கள் வழக்கில் சேர்க்கப்பட வாய்ப்புள்ளது’ என்று கூறினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை;
தூத்துக்குடி மாவட்டத்தில் வேதாந்தா குழுமத்திற்குச் சொந்தமான ஸ்டெர்லைட் செப்பு உருக்காலை அமைக்கப்பட்டதில் இருந்தே பல்வேறு சுற்றுச்சூழல் பிரச்னைகள் எழுப்பப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018ம் ஆண்டு மே 22ம் தேதியன்று ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின் போது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் 13 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக அரசு அந்த ஆலையை மூடி சீல் வைத்ததுடன், கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உச்ச நீதிமன்றமும் ஆலை நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து ஆலையைத் திறக்க அனுமதி மறுத்தது. தற்போது இந்த ஆலையை விற்பனை செய்யும் முயற்சியில் வேதாந்தா குழுமம் ஈடுபட்டுள்ள நிலையில், உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்த விவகாரத்தில் தொடர்ந்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவே இருந்து வருகின்றனர்.

Tags : Chhattisgarh ,Vedanta ,Raipur ,Anil Agarwal ,Vedanta Group ,Chhattisgarh State Shakti District Singitarai Village ,
× RELATED அசாமில் விருந்துக்குச் சென்ற 15 வயது...