×

₹1.11 கோடி மதிப்பில் நல உதவி ஐவிடிபிக்கு கலெக்டர் பாராட்டு

கிருஷ்ணகிரி, பிப்.23: நீலகிரி மாவட்ட குழந்தைகள் நலனுக்காக ₹1.11 கோடி மதிப்பிலான திட்டங்களை வழங்கிய ஐவிடிபி நிறுவனத்திற்கு, அம்மாவட்ட கலெக்டர் பாராட்டி, நினைவு பரிசு வழங்கினார். நீலகிரி மாவட்டத்தில் மழை, வெள்ளம், நிலச்சரிவு போன்ற இயற்கை சீற்றங்களினால் பாதிக்கப்படும் குழந்தைகளின் தேவைகளை நிறைவு செய்ய, கிருஷ்ணகிரி ஐவிடிபி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் மனமுவந்து வழங்கிய தொகை ₹1 கோடியை பயன்படுத்தி, கூடலூர் ஒன்றியத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 5 அங்கன்வாடிகள் ₹47.64 லட்சத்தில் கட்டப்பட்டது. அதேபோல், குழந்தைகள் தங்கி பயிலும் விடுதிகளுக்கு ₹56 லட்சம் மதிப்பில் 380 ஈரடுக்கு கட்டில்கள், 740 மெத்தைகள் வழங்கப்பட்டது. மேலும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ₹7 லட்சம் மதிப்பிலான 500 மண்ணெண்ணை அடுப்புகள் மற்றும் 500 தார்பாய்கள் வழங்கப்பட்டது.

இதையடுத்து, நீலகிரி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஐவிடிபி நிறுவனத்திற்கு பாராட்டு விழா நடந்தது. நிகழ்ச்சியில் கலெக்டர் இன்னாசென்ட் திவ்யா பங்கேற்று, ஐவிடிபி நிறுவனத் தலைவர் குழந்தை பிரான்சிஸ்க்கு சால்வை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார். விழாவில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் தேவகுமாரி, குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கீதா மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

Tags :
× RELATED நீர்மோர் வழங்கல்