×

ஆபத்தான போரை நிறுத்தவில்லை என்றால் பேரழிவு நிச்சயம்; அமெரிக்க ராணுவம் பலவீனமா?.. ஈரானிடம் சிக்கி தவிக்கும் டிரம்ப்: ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் கடும் எச்சரிக்கை

 

வாஷிங்டன்: ஈரான் மீதான ஆபத்தான போரை நிறுத்தவில்லை என்றால் பேரழிவு நிச்சயம் என்று அமெரிக்க ராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் எச்சரிக்கை விடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஈரானுக்கு எதிராக அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுப்படைகள் தீவிர தாக்குதலை நடத்தியது. தற்காலிக போர் நிறுத்தம், பாகிஸ்தானில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி, நட்பு நாடுகளின் ஆதரவை இழந்த டிரம்ப் நிர்வாகம், கச்சா எண்ணெய் தட்டுப்பாடு, சர்வதேச கப்பல் போக்குவரத்தில் சிக்கல்கள் குறித்து சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை தூண்டியுள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவின் ராணுவம் யாராலும் வெல்ல முடியாதது என்ற பிம்பம் வெறும் பொய்யானது என்றும், ஈரானின் பதிலடி தாக்குதலில் இருந்து தப்பிக்க அதிபர் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள வேண்டும் அல்லது அணு ஆயுதங்களை பயன்படுத்தும் விபரீத முடிவை எடுக்க வேண்டியிருக்கும் என்றும் அமெரிக்க ராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் டான் டேவிஸ் எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘மத்திய கிழக்கு நாடுகளை அமெரிக்க ராணுவ பலத்தால் நினைத்தபடி மாற்றிவிடலாம் என்று அமெரிக்க வெளியுறவு கொள்கை வகுப்பாளர்கள் பல ஆண்டுகளாக நம்பி வந்தனர். ஆனால் அந்த நம்பிக்கை இப்போது தரைமட்டமாகி உள்ளது. ஈரானை பணிய வைக்க வேண்டும் என்றால் அந்நாட்டின் மீது தரைப்படை மூலம் தாக்குதல் நடத்த வேண்டும். ஆனால் போதிய வீரர்கள் இல்லாத நிலையில், வெறும் குண்டுகளை வீசுவதன் மூலம் மட்டும் ஈரானை அடிபணிய வைக்க முடியாது என்பதை டிரம்ப் உணர வேண்டும். அமெரிக்கா இதுவரை ஈரானில் 13,000 இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியும், அந்நாட்டின் ராணுவத்தையோ அல்லது அரசாங்கத்தையோ முடக்க முடியவில்லை. ஈரான் பல ஆண்டுகளாக மலைகளுக்கு அடியில் நூற்றுக்கணக்கான மீட்டர் ஆழத்தில் ‘மிசைல் நகரங்களை’ உருவாக்கி வைத்துள்ளது.

அமெரிக்காவின் ஏவுகணைகள் சுரங்கப்பாதைகளை தகர்த்தாலும், ஈரான் இன்ஜினியர்கள் அதனை உடனடியாக சீரமைத்து விடுகின்றனர். இந்த நிலத்தடி தளங்களை சாதாரண ஆயுதங்களால் அழிக்கவே முடியாது’ என்று தெரிவித்தார். இன்றைய நிலவரப்படி, போர் நிறுத்த உடன்படிக்கை மற்றும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரான் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாப் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனைத் தொடர்ந்து, ஹார்முஸ் ஜலசந்தி வழியாக ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் எண்ணெய் கப்பல்களை முற்றுகையிட அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டங்களை முடக்குவது, ஏவுகணை திட்டங்களை ஒழிப்பது மற்றும் பிராந்தியத்தில் ஈரானின் ஆதரவு அமைப்புகளை துண்டிப்பது போன்ற இலக்குகளுடன் அமெரிக்கா இந்த போரை முன்னெடுத்தது.

ஆனால், கடந்த 6 வார கால போரில் ஈரானை டிரம்ப்பால் கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த முற்றுகை நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்கும் ஆசிய மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் எரிபொருள் விலை உயர்ந்து கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று சீனாவின் கொடி ஏற்றிய எண்ணெய் கப்பல் ஒன்று அமெரிக்காவின் முற்றுகையை மீறி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து சென்றுள்ளது டிரம்ப் நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. அமெரிக்காவுடன் நட்பு ரீதியாக இருக்கும் சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் ஈரான் ஏவுகணைகளால் தாக்கப்பட்டாலும், இந்தப் போரில் நேரடியாக ஈடுபட தயக்கம் காட்டுகின்றன. சவுதி அரேபியாவிடம் வலிமையான விமானப்படை இருந்தாலும், அவர்களால் சிறிய நாடான ஏமனின் ஹவுதி தீவிரவாத அமைப்புகளையே 2015ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக போராடியும் வெல்ல முடியவில்லை.

இத்தகைய சூழலில் ஈரானை அவர்கள் வீழ்த்துவது சாத்தியமில்லை. அதேபோல் ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி ஆகியவை வெறும் பேச்சளவில் மட்டுமே உதவி செய்வதாக கூறுகின்றன. இங்கிலாந்தின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் பென் வாலஸ் கூறுகையில், ‘இங்கிலாந்து தனது கடற்படையை ஹார்முஸ் ஜலசந்திக்கு அனுப்புவது என்பது கற்பனையான விஷயம். அப்படி செய்வது எங்கள் வீரர்களை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளும்’ என்று வெளிப்படையாகவே கூறிவிட்டார். இதனால் சர்வதேச அளவில் அமெரிக்கா தனிமைப்படுத்தப்பட்டு வருவது தெளிவாகிறது. ராணுவ பலத்தைப் பொறுத்தவரை அமெரிக்கா கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. கடந்த 1991ம் ஆண்டு நடந்த ஈராக் போரின் போது அமெரிக்காவிடம் 7,50,000 வீரர்கள் இருந்தனர். ஆனால் இன்று தீவிர போரில் ஈடுபடக்கூடிய வீரர்கள் 90,000 பேர் மட்டுமே உள்ளனர்.

இதுதவிர, கடந்த 6 வார போரில் அமெரிக்கா தனது கையிருப்பில் இருந்த நீண்ட தூரம் பாயும் ‘டோமாஹாக்’ மற்றும் ‘ஜே.ஏ.எஸ்.எஸ்.எம்-இ.ஆர்’ ஏவுகணைகளை அதிக அளவில் பயன்படுத்தி தீர்த்துவிட்டது. இதில் ‘டோமாஹாக்’ ஏவுகணைகள் 1,300 மைல் தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. அதேபோல், ஈரான் ஏவுகணைகளை தடுத்து அழிக்கும் ‘தாட்’ மற்றும் ‘பி.ஏ.சி.3’ போன்ற பாதுகாப்பு ஏவுகணைகளின் கையிருப்பும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிடம் மிக வேகமாக குறைந்து வருகிறது. இந்தப் போர் இன்னும் 6 வாரங்கள் நீடித்தால், ஈரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களை எதிர்கொள்ள முடியாமல் அமெரிக்கா தற்காப்பு கவசத்தை இழக்கும் அபாயம் உள்ளது.

கடந்த 8ம் தேதி அதிபர் டிரம்ப் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘பேச்சுவார்த்தை பலன் தராவிட்டால் இதுவரை யாரும் பார்த்திராத வகையில் மிக வலிமையான தாக்குதல் தொடங்கும்’ என்று எச்சரித்திருந்தார். இதுகுறித்து அமெரிக்க ராணுவத்தின் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கர்னல் டான் டான் டேவிஸ் கூறுகையில், ‘டிரம்ப் எவ்வளவு சத்தம் போட்டாலும், தரைப்படை ஆதரவு இல்லாமலும், நட்பு நாடுகளின் உதவி இல்லாமலும் ஈரானை வீழ்த்த முடியாது என்பதுதான் கசப்பான உண்மை. ஈரானை முழுமையாக பணிய வைக்க நினைத்தால் அமெரிக்க ராணுவம் ஒட்டுமொத்தமாக சிதைந்துவிடும்.

எனவே, அமெரிக்காவின் நலனை கருத்தில் கொண்டு டிரம்ப் பிடிவாதத்தை விட்டுவிட்டு ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்திற்கு வர வேண்டும். இல்லையெனில் அமெரிக்கா தனது வரலாற்றில் சந்திக்காத மிகப்பெரிய ராணுவ தோல்வியை சந்திக்க நேரிடும். அமெரிக்காவிடம் எஞ்சி இருக்கும் ஒரே வழி அணு ஆயுதங்களை பயன்படுத்துவதுதான், ஆனால் அது உலகையே அழிவுக்கு இட்டுச் செல்லும்’ என்று எச்சரித்துள்ளார். கடந்த 21 ஆண்டுகள் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட போர்க்களங்களில் பதக்கங்களை வென்ற ஒரு உயரதிகாரியின் இந்த எச்சரிக்கை அமெரிக்க அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுடன் நட்பு ரீதியாக இருக்கும்
சவுதி அரேபியா, குவைத் மற்றும் கத்தார் போன்ற நாடுகள் ஈரான் ஏவுகணைகளால் தாக்கப்பட்டாலும், இந்தப் போரில் நேரடியாக ஈடுபட தயக்கம் காட்டுகின்றன. சவுதி அரேபியாவிடம் வலிமையான விமானப்படை இருந்தாலும், அவர்களால் சிறிய நாடான ஏமனின் ஹவுதி தீவிரவாத அமைப்புகளையே 2015ம் ஆண்டு முதல் 10 ஆண்டுகளாக போராடியும் வெல்ல முடியவில்லை.

Tags : US ,Trump ,Iran ,Washington ,US military ,Israel ,
× RELATED இந்தியாவின் மக்கள் வேறு, பாஜக வேறு;...