டெல்லி: தொகுதி மறுவரையறை மசோதா மீது மக்களவையில் இரண்டாவது நாளாக விவாதம் நடைபெற்று வருகிறது. திமுக எம்.பி. கனிமொழி தற்போது உரையாற்றி வருகிறார். 8 கோடி தமிழ்நாட்டு மக்களின் குரலாக பேசுகிறேன். தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களால் மக்கள் தொகை கட்டுப்படுத்தப்பட்டு சிறுகுடும்பங்கள் உருவாகின. 2001ல் தெற்கில் இருந்து வரக்கூடிய மக்களின் குரலை கேட்கக் கூடிய ஒன்றிய அரசு இருந்தது. பாஜக சொந்த சதி திட்டத்தை நாட்டின் மீது சுமத்துவதற்காகவே தொகுதி மறுவரையறை மசோதாவை கொண்டு வருகிறது. தொகுதி மறுவரையறை திட்டத்தை 25 ஆண்டுகள் ஒத்திவைப்பதாக வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அறிவித்தார்.
தமிழ்நாட்டின் பிறப்பு விகிதல் 1.6% தான், அமெரிக்கா, பிரான்ஸை விட குறைவாக பிறப்பு விகிதத்தை கட்டுப்படுத்தி உள்ளது. மக்கள்தொகை மாற்றத்தால் தொகுதி மறுவரையறை செய்வதாக சொல்லும் நீங்கள், 15 ஆண்டு பழைய சென்செஸை வைத்தது. தொகுதி மறுவரையறை மசோதா இந்தியாவின் கூட்டாட்சியை சிதைக்கக் கூடியது. மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதா மீதான விவாதம் நடக்கும் போதே, அச்சட்டம் அமலுக்கு வந்ததாக அரசிதழில் வெளியிட்டது ஏன் என்று கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார். “இந்திய அரசின் அறிவுறுத்தலை ஏற்று தென் மாநிலங்கள் மக்கள் தொகையை கட்டுப்படுத்தியுள்ளன. கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட மனிதவளக் குறியீடு திட்டங்களில் தென் மாநிலங்கள் அதிக கவனம் செலுத்தின.
மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்த்தப்பட்டால், பேசக் கூட வாய்ப்பு கிடைக்காது. பிரதமரும், உள்துறை அமைச்சரும் சொல்வது ஒன்றாக இருக்கிறது, மசோதாவில் இருப்பது வேறாக இருக்கிறது. தொகுதி மறுவரைறை செய்ய அமைக்கப்படும் குழு, உள்துறை அமைச்சர் கூறிய 50% தொகுதிகள் உயர்வு என்பதை பின்பற்றாவிட்டால் என்ன நடக்கும்?
மக்கள் தொகை கணக்கீட்டின் படி மறுவரையறை செய்தால், உண்மையிலேயே தமிழ்நாட்டுக்கான பிரதிநிதித்துவ விகிதாச்சாரம் குறையத்தான் செய்யும். தற்போது உள்ள எம்.பி.க்கள் எண்ணிக்கையிலேயே மகளிர் இடஒதுக்கீட்டை கொண்டு வரவேண்டும். கடைசியாக வெளிவந்த சென்செஸ் அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என மசோதாவின் பிரிவு 4-ல் கூறப்பட்டுள்ளது.
அதன்படி மறுவரையறை செய்தால் தமிழ்நாட்டின் தொகுதிகள் எண்ணிக்கை குறையும். கட்டுப்படுத்தப்பட்ட மக்கள் தொகை அடிப்படையில் எண்ணிக்கையை தீர்மானிக்கலாமா? மக்கள் தொகையை கட்டுப்படுத்திய தென் மாநிலங்களுக்கு தண்டனையா?” எதிர்காலத்தில் தென் மாநிலங்களில் இருந்து ஒரு வாக்கு கூட இல்லாமல் அரசியல் சாசனத்தை திருத்திவிட முடியும். குடியரசுத் தலைவரைத் தேர்வு செய்வதில் கூட, தெற்கு மாநிலங்களுக்கு பங்களிப்பே இருக்காது.
மகளிர் இட ஒதுக்கீட்டை தொகுதி மறுவரையறை மசோதாவோடு இணைப்பது ஒரு அரசியல் பொறி. அரசியலமைப்பு 334A பிரிவை திருத்தி, மகளிர் இட ஒதுக்கீட்டை ஏன் தொகுதி மறுவரையறையில் இருந்து பிரிக்க மறுக்கிறீர்கள்? சுழற்சி முறையில் 543 எம்.பி.க்களில் 3ல் ஒரு பங்கை மகளிருக்கு ஒதுக்குவதில் என்ன சிக்கல் என்று கேள்வி எழுப்பியுள்ளார். தொகுதி மறுவரையறை மசோதா சிறப்பானது என்றால் மாநில சட்டமன்றங்களின் ஒப்புதலை ஏன் பெறவில்லை. மகளிர் உரிமைக்காக பாஜக குரல் கொடுக்கிறது என்பதை நாங்கள் நம்ப வேண்டுமா என்று ஒன்றிய அரசுக்கு கனிமொழி கேள்வி எழுப்பியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் அரசியல் காரணங்களுக்காகவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன
மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டுவர வேண்டும் என 2014 முதல் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் 2 வாரங்கள் கூட காத்திருக்க முடியாமல் இவ்வளவு அவசரகதியில் கொண்டு வந்தது ஏன்?. தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்கு இடையூறு ஏற்படுத்தவே இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால் வட மாநில எம்.பிக்களை வைத்தே மசோதாக்களை நிறைவேற்றி விடலாம்.
அரசியல் சாசன சட்டங்களை தென் மாநிலங்களின் ஆதரவு இல்லாமலேயே நிறைவேற்றும் சூழல் உருவாகும். அரசியல் சாசன திருத்த மசோதாக்களை நிறைவேற்ற மூன்றில் 2 பங்கு எம்.பிக்களின் ஆதரவு தேவை. தொகுதி மறுவரையறை இல்லாமல் மகளிருக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வர வேண்டும். தொகுதி மறுவரையறை தொடர்பான 3 மசோதாக்களையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும்
