×

பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் விவசாயம் செழிக்க வயல்களில் நல்லேர் பூட்டு வழிபாடு: டிராக்டரில் உழவு செய்து வழிபட்ட விவசாயிகள் 

 

பாடாலூர்: பெரம்பலூர் அருகே புதுக்குறிச்சி கிராமத்தில் பாரம்பரிய முறைப்படி நல்லேர் பூட்டும் விழா கோலாகலமாக இன்று நடைபெற்றது. இதில் விவசாய பெண்கள் பலர் பங்கேற்று விவசாயம் செழிக்க வழிபட்டனர். தமிழர் புத்தாண்டான சித்திரை முதல் நாள் நல்லேர் பூட்டி விளை நிலத்தை வழிபட்டால் அந்த ஆண்டு நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது விவசாயிகளின் நம்பிக்கையாக உள்ளது. இந்நிலையில், சித்திரை புத்தாண்டையொட்டி பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா புதுக்குறிச்சி கிராமத்தில் நடைபெற்ற நல்லேர் பூட்டும் நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என அனைவரும் ஒரே இடத்தில் கூடி தேங்காய், பழம், தானியங்கள் மற்றும் பச்சரிசி உள்ளிட்ட பூஜை பொருட்களை வைத்து விளை நிலத்தில் வழிபட்டனர்.

அதன் பின்னர் அணிவகுத்து நின்ற டிராக்டர்களுக்கும், பூஜைகள் செய்யபட்ட பின் நல்லேர் பூட்டும் நிகழ்வு தொடங்கியது. இக்கிராமத்தை பொறுத்தவரையில் அனைத்து விவசாயிகளும் ஒரே இடத்தில் ஒன்று கூடி சித்திரை முதல் நாள் நல்லேறு பூட்டிய பின்னர் மற்ற விவசாயிகள் அனைவரும் தங்கள் விளைநிலத்தில் விவசாய பணிகளை தொடங்குவதை வழக்கமாக வைத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் பெரும்பாலான விவசாயிகள் மாடுகளை கொண்டு நல்லேர் பூட்டி தமிழ்புத்தாண்டை வரவேற்றனர். காலப்போக்கில், போதுமான மழை இல்லாததால், மாடுகளுக்கு தீவனப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் தங்களது மாடுகளை வளர்க்க இயலாமல் விற்பனை செய்து விட்டனர்.

இருப்பினும் ஒரு சில விவசாயிகள் மட்டும் பாரம்பரியமாக கால்நடைகளை கொண்டே வேளாண் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், எந்திரங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், பெரும்பாலான விவசாயிகள் டிராக்டரை பயன்படுத்தி உழவு செய்ய தொடங்கி விட்டதாகவும், பின்னர், தமிழர்களின் புத்தாண்டு தினமான சித்திரை மாதம் பிறந்ததும், நல்ல நாள் பார்த்து அந்த வயலில், நல்லேர் பூட்டி பணியைத் தொடங்குவார்கள். அப்படி தொடங்கினால் அந்த ஆண்டு சாகுபடியில் எவ்வித இடையூறும் இல்லாமல், மகசூல் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாகும் என்றனர். இந்த பழமை மாறாமல் நடைபெறும் விழாவில் விவசாயிகள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை புதுக்குறிச்சி கிராம பொதுமக்கள் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Tags : Puthukkurichi ,Perambalur ,BATALUR ,NALLER LOCKDOWN CEREMONY ,PUTHUKURICHI VILLAGE ,Tamil New Year's Day ,Naller Buri Veli ,
× RELATED நடிகர் மன்சூர் அலிகான் ஆஸ்பத்திரியில் அட்மிட்