வெள்ளகோவில், ஏப். 14: காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வெள்ளகோவில் ஒன்றியத்தில் மேட்டுப்பாளையம் வள்ளியரச்சல் ஊராட்சி பழனிகவுண்டன்வலசு, புஷ்பகிரி நகர், வரக்காளிபாளையம், இடையன்காட்டுவலசு, வள்ளியரச்சல், வடுகபாளையம், முத்துக்கவுண்டன்பாளையம், நல்லூர்பாளையம், செட்டியார்பாளையம், வரட்டுக்கரை, அமராவதிபாளையம், மேட்டாங்காட்டு வலசு, ராசாத்தாவலசு உள்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் திமுக வேட்பாளர் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். தாய்மார்கள் பூத்தூவி அவரை வரவேற்றனர். அப்போது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது: வரும் சட்டமன்ற தேர்தலில் திமுக வேட்பாளராக உதய சூரியன் சின்னத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆசியோடும், பொதுமக்கள் ஆதரவோடும் காங்கேயம் சட்டமன்ற தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறேன். கடந்த ஐந்தாண்டில் பல நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு நமது அரசு செய்துள்ளது.
அதில் என்னுடைய பங்கும் உள்ளது. காங்கயம் தொகுதி வட்டமலை கரை அணைக்கு திமுக ஆட்சி அமைந்த பிறகு மூன்று முறை தண்ணீர் கொண்டு வரப்பட்டது. நிலத்தடி நீர்மட்டம் உயர்த்த வழிவகை செய்யப்பட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் பணிகள் சரிவர செய்யாத காரணத்தால் தண்ணீர் வருவது பிரச்னையாக இருந்தது. இதனை சரிசெய்ய காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தின் மூலம் தண்ணீர் தட்டுபாட்டை தடுக்க கொடிமுடியில் இருந்து முத்தூர் வழியாக காங்கேயம், வெள்ளகோவில் பகுதிக்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண் மக்களின் வாழ்வில் ஏற்றம் பெரும் வண்ணம் கூட்டுறவு வங்கிகள் வாயிலாக புதிய கறவை மாடுகள் ஆடு நாட்டுக்கோழி வாத்து முதலென கால்நடைகளை வாங்க தற்போது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் மூலதன கடன் ரூ.250 கோடியில் இருந்து ரூ.1000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.
ஆண்டுக்கு ஆயிரம் சிறிய பால் பண்ணைகளை உருவாக்கிட அடுத்த ஐந்து ஆண்டுகளில் 5000 பால் பண்ணை தொழில் முனைவோருக்கு மானியத்தின் உடன் கூடிய கடன் உதவி வழங்கப்படும். எனவே நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஓட்டு போட்டு 2021ல் தந்த வெற்றியை மீண்டும் அளிக்கவேண்டும். ஓட்டு போடும் மெசினில் இரண்டாவதாக என்னுடைய புகைப்படம், சின்னம் இருக்கும் அதில் உங்களுடைய வாக்குகளை செலுத்தி வெற்றியடைய செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
