- அமித் ஷா
- தேஜா
- அஇஅதிமுக
- AMMK
- TTV
- பொதுச்செயலர்
- தினகரன்
- பெரியார் சிலை
- மன்னார்குடி
- எஸ். காமராஜ்
- தேசிய ஜனநாயக கூட்டணி
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் எஸ்.காமராஜை ஆதரித்து மன்னார்குடி பெரியார் சிலை அருகில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குக்கர் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்து நேற்றுமுன்தினம் இரவு பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் ஆக்குவதற்கு நாங்க கூட்டணி அமைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் அம்மாவின் தொண்டர்கள் எல்லாம் பிரிந்து கிடக்ககூடாது. ஒன்றிணைவோம் என்று சொல்லி 2021 தேர்தலுக்கு முன்பு என்னை நேரில் அழைத்து அமித்ஷா பேசியது உங்களுக்கு தெரியும். ஆனால் அன்றைக்கு கூட்டணி அமையாமல் போய்விட்டது. அதற்கு காரணம் எங்களுக்குள் இருந்த பங்காளி சண்டை தான் ஒத்துக்குறேன்.
எந்த வீட்ல அண்ணன் தம்பி சண்டை, பங்காளி சண்டை, இல்லாம இருந்தது? யாராவது கை தூக்குங்க பார்ப்போம். யார் யார் வீட்ல பங்காளி சண்டை இல்ல. மாமா, மச்சான் சண்டை இல்லாம இருக்குமா. நாங்கள் தனியாக பிரிந்து போய் கட்சிதான் ஆரம்பித்தோம். செப்டம்பர் 8 உள்துறை அமைச்சரை சந்திக்க டெல்லிக்கு வருமாறு அழைப்பு வந்தது. சில காரணங்களால் அந்த சந்திப்பு நிகழாமல் இருந்தது. டிசம்பர் 31 வரை பொறுமையாக இருக்கும் படி அண்ணாமலை என்னிடம் கூறினார். பீகார் தேர்தல் முடிந்தவுடன் சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக கூறினார்.
தேர்தல் முடிந்த பிறகு அமித்ஷாவின் நிழலில் போய் சந்தித்தேன் மடியில் கனம் இருப்பவர்கள் தான் பயப்பட வேண்டும். எனக்கு மடியில் கனமில்லை அதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேரில் போய் சந்தித்தேன். எடப்பாடி பழனிசாமி என்டிஏ கூட்டணிக்கு அமமுக வரவேண்டும் என ஆர்வமாக இருப்பதாக அமித்ஷா என்னிடம் சொன்னார். இதை நான் ஏற்றுக் கொண்டேன். வழக்கு காரணமாக பயந்து கொண்டு நான் பாஜவுடன் கூட்டணிக்கு சென்று விட்டதாக சிலர் புரளியை கிளப்பி விட்டனர். எனக்கு யாரிடமும் பயமில்லை. அமமுக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருப்பது தான் எங்களுக்கும் நல்லது. அதிமுகவுக்கும் நல்லது. தமிழகத்திற்கும் நல்லது என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் பேசினார்.
* தவெக வேட்பாளரை ஜெயிக்க வைக்க முடியாது: செங்க்ஸ் ஒப்புதல்
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தொகுதி தவெக வேட்பாளர் சுனில் ஆனந்த்தை ஆதரித்து அக்கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தவெக வேட்பாளர் சுனில் ஆனந்த்தை யாராலும் வெற்றிபெற வைக்க முடியாது… என குறிப்பிட்டார். பின்னர், சுதாரித்துக்கொண்ட….அவர், அவரை யாராலும் தோற்கடிக்க முடியாது… என்றார். தொடர்ந்து பேசிய அவர், தவெக தலைவர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் திரையிட அனுமதி மறுக்கப்பட்டது. இந்த வழக்கு, கோர்ட்டில் நிலுவையில் இருக்கும்போது, திடீரென படத்தை ஆன்லைனில் வெளியிடுகிறார்கள். இதற்கு சென்சார் போர்டுதான் முழு பொறுப்பு ஏற்கவேண்டும். சென்சார் போர்டு துறைக்கு தலைமை தாங்குபவர் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன்.
அவர், திருப்பூர் மாவட்டம் அவினாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை தோற்கடித்து டெல்லிக்கு அனுப்புவோம். மேட்டுப்பாளையம் தொகுதி சிட்டிங் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜுக்கு, ஏன் அதிமுகவில் மீண்டும் சீட் வழங்கப்படவில்லை? அவரை பெரிய ஆளாக்கி, ஈரோடு மாவட்ட அதிமுக பொறுப்பாளராக நியமித்தார்கள். அப்படிப்பட்ட நபருக்கு ஏன் இத்தொகுதியில் மீண்டும் சீட் வழங்கப்படவில்லை? அவர் போட்டியிட்டால் தோல்வி உறுதி. அதனால், வேறு யாரையாவது தள்ளிவிட்டு, நாம தப்பித்துக்கொள்ளலாம்… எனக்கருதி இம்முறை இத்தொகுதியில் போட்டியிடவில்லை. ஏன்… எந்த தொகுதியிலும் அவர் போட்டியிடவில்லை. தவெகவை எதிர்த்து வெல்ல முடியாது என்பது அவருக்கும் தெரியும். என்றார்.
