×

வெளி மாநிலத்தில் தமிழர்களை தரக்குறைவாக விமர்சித்துவிட்டு தமிழ்நாட்டில் ஓட்டு கேட்கும் தைரியம் எங்கிருந்து வருகிறது? முடிஞ்சா இங்க பேசுங்க… பாஜவுக்கு கனிமொழி சவால்

கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளர் மகேஷை ஆதரித்து தெங்கம்புதூரிலும், நாகர்கோவில் தொகுதி திமுக வேட்பாளர் ஆஸ்டினை ஆதரித்து ராஜாக்கமங்கலத்திலும், குளச்சல் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆதரித்து குளச்சல், அண்ணா சிலையிலும், பத்மநாபபுரம் மார்க்சிஸ்ட் வேட்பாளர் செல்லசுவாமியை ஆரித்து குலசேகரம் அரசமூடு சந்திப்பிலும் திமுக துணை பொதுசெயலாளர் கனிமொழி எம்.பி நேற்று பிரசாரம் செய்தார். தெங்கம்புதூர் சந்திப்பில் அவர் பேசியதாவது: நம்மளுடைய நாடாளுமன்றத்திலே ஒரு அமைச்சர் நம்மைப் பார்த்து தமிழர்கள் நாகரீகமற்றவர்கள் என்றார். தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் ஒடிசாவை ஆட்சி செய்வதா என்று ஒன்றிய அமைச்சர் அமித்ஷா ஒடிசா தேர்தலின் போது தெரிவித்தார். பிரதமர் ஒடிசாவில் பூரி ஜெகன்னாதர் கோயிலில் இருக்க வேண்டிய புதையல், சாமி தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டது என்று ஏதோ ஒரு மாயையை தேர்தலின் போது உருவாக்கினார்.

கர்நாடகாவில் இருக்கக்கூடிய ஒன்றிய அமைச்சர் ஒருவர் கர்நாடகாவில ஒரு குண்டு வெடிப்பு நடந்த போது தமிழ்நாட்டிலிருந்து வந்து இங்கே குண்டு வைத்து விட்டு போகிறார்கள் என்றார். ஏன் இங்கேயே இருக்கக்கூடிய பொன்னார் என்ன சொன்னார்? நம்முடைய பிரதமர் அடிக்கடி தமிழை புகழ்கிறார், ஆனால் தமிழர்கள் நன்றி மறந்தவர்களாகி விட்டார்கள், அதற்கு மரியாதை செலுத்தல, அதை கொண்டாடவில்லை என்று சொல்கிறார். நீங்க தமிழ் பேசுறதுக்கு நாங்க ஏன் கொண்டாடணும்? நீங்கதான் சந்தோஷப்படணும். இவ்வளவு பெரிய மொழியை தொன்மையும் தொடர்ச்சியும் இருக்கக்கூடிய தமிழைப் பேசுவதற்கு நீங்கதான் கொண்டாடணும். நாங்க உங்களைக் கொண்டாட வைக்க வேண்டிய அவசியம் இல்லை.

இப்படி எல்லா இடங்களிலும் தமிழர்களை குறைத்துப் பேசிவிட்டு, தமிழர்களை தரக்குறைவாக விமர்சித்துவிட்டு இன்று நம்மிடம் வந்து தமிழ்நாட்ல எங்களுக்கு ஓட்டுப் போடுங்க அப்படின்னு கேட்கக்கூடிய தைரியம் எங்கிருந்து வருகிறது? இவ்வளவு நாள் மத்த இடத்துல எல்லாம் இருந்து தமிழர்களை விமர்சித்தீங்க இல்லையா? தமிழ்நாட்டுக்கு வந்திருக்கீங்க தேர்தல் நேரத்துல. இங்க அதே கருத்துக்களை தமிழ்நாட்ல பேசுங்க. தைரியம் இருந்தா நேர்மை இருந்தா அதே கருத்துக்களை தமிழ்நாட்டில் பேசுங்கள், நாங்க பார்க்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.

* மதரீதியாக மக்களை பிரிக்க சதி செய்யும் கூட்டணி
நாங்குநேரியில் கனிமொழி பேசுகையில், ‘அதிமுக-பாஜ கூட்டணி தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும், தமிழ்மொழிக்கும், எதிரான கூட்டணி. அவர்களுக்கு இந்த தேர்தலில் சரியான பாடம் புகட்ட வேண்டும். மக்களை மதரீதியாக பிரிக்க பாஜ அரசு சதி செய்து வருகிறது’ என்றார்.

Tags : Tamil Nadu ,Kanimozhi ,BJP ,Kanyakumari ,DMK ,Mahesh ,Thengambudur, Nagercoil ,Austin ,Rajakamangalam, ,Kulachell ,Congress ,Tarakai Cuthbert ,Anna Shilai ,Padmanabhapuram ,Marxist ,Cellaswamy ,Kulasekaram… ,
× RELATED திட்டமிட்டு அலைக்கழிக்கும்...