×

கூடூரில் ரயில்வே கேட் அமைத்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சியினர் கிராம மக்கள், மறியல்

திருவாரூர், பிப். 21: திருவாரூர் அருகே கூடூரில் ரயில்வே கேட் அமைத்து தர கோரி சாலை மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் 100 பேரை போலீசார் கைது செய்தனர். திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை வழியாக காரைக்குடிக்கு புதிய அகல ரயில் பாதை அமைக்கப்பட்டு ரயில் சேவை துவங்கியது. இந்நிலையில் இந்த ரயில் பாதையில் ஏற்கனவே இருந்து வந்த ரயில்வே கேட்டுகள் பலவற்றிலும் ஆட்களை குறைப்பதற்காக அந்த ரயில்வே கேட் இருந்த இடத்தில் ரயில்வே லைன் அடிப்பகுதியில் பொதுமக்கள் சென்று வரும் வகையில் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.அதன்படி திருவாரூர் அருகே கூடூர் என்ற இடத்தில் இதே போன்று ஒரு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த சுரங்கப்பாதையானது அங்கு உள்ள காட்டாற்றின் கரையை ஒட்டியவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்தக் காட்டாற்றில் தண்ணீர் செல்லும் காலங்களில் சுரங்கப் பாதையின் வடிகாலுக்காக அமைக்கப்பட்டுள்ள குழாயில் ஆற்றின் நீரானது மழை காலங்களில் உட்புகுந்து இந்த சுரங்க பாதையை அடைத்து வருவது வழக்கமாக இருந்து வரும் நிலையில் இந்த சுரங்கப்பாதையை கூத்தங்குடி, அன்னுக்குடி, அன்னவாசல், கல்யாணமகாதேவி, கட்டளை தெரு உட்பட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடந்து திருவாரூர் நகரத்திற்குள் வரமுடியாமல் பாதிக்கப்படும் சூழல் இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மழை காலம் ஓய்ந்த பின்னரும் 2 மாத காலமாக இந்த சுரங்க பாதையில் தண்ணீர் வடியாமல் இருந்து வருகிறது.

இதுகுறித்து கடந்த 18ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. மேலும் இதுதொடர்பாக கிராம மக்கள் பல முறை முறையிட்டும் அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததை கண்டித்தும் சுரங்க பாதை காரணமாக தொடர்ந்து பாதிப்பு இருந்து வருவதால் அங்கு ரயில்வே கேட் அமைத்து தர கோரியும் நேற்று திருவாரூர்- திருத்துறைப்பூண்டி நெடுஞ்சாலையில் கூடூரில் கிராம மக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.இதன் காரணமாக அந்த பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனையடுத்து போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். அப்போது ரயில் கேட் அமைத்து தருவதாக உறுதி அளித்தால் மட்டுமே போராட்டம் விலக்கிகொள்ளப்படும் என தெரிவித்ததையடுத்து மறியலில் ஈடுப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல்,கிளை செயலர் நாகராஜன் மற்றும் கிராம மக்கள் 100 பேரை தாலுகா போலீசார் கைது செய்து மாலையில் விடுதலை செய்தனர்.

Tags : Marxist ,Communist Party ,Koodoor ,
× RELATED மின் உதவி பொறியாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மனு